சில மாதங்களுக்கு முன்பு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழியிடம் விமான நிலையத்தில் இந்தி மொழி தெரியாமல் இருப்பது குறித்து அங்கிருந்த பணியாளர் எழுப்பிய கேள்வி பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியது.
இப்போது சொமேட்டோ (Zomato) நிறுவன ஊழியர் ஒருவர் தங்களுடைய வாடிக்கையாளரிடம் “இந்தி தேசிய மொழி. அதைச் சிறிதளவு தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பதில் சொல்ல, அது சர்ச்சை ஆகியிருக்கிறது.
உடனே சம்பந்தப்பட்ட ஊழியரைப் பணி நீக்கம் செய்ததுடன் “உணவு மற்றும் மொழி ஒவ்வொரு மாநிலத்தின், கலாச்சாரத்தின் அடித்தளங்கள்” என்பதை முழுமையாகத் தாங்கள் உணர்ந்திருப்பதாகப் பதிவிட்டிருக்கிறது சோமேட்டா நிறுவனம்.
அதற்கிடையில், உடனே அந்த நிறுவன ‘அப்ளிகேஷனை’ செல்போனிலிருந்து தூக்கிவிட்டதாகப் பலர் பதிவிட்டிருக்கிறார்கள். அந்த நிறுவனத்தைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்து அது ‘டிரெண்டிங்’ ஆகியிருக்கிறது.
உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான்.
இவர்கள் தான் வண்ண டி-ஷர்ட்களுடன் ஏதாவது ஒரு பகுதிகளுக்குத் தங்கள் வாகனங்களில் விரைந்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களால் யாரோ எங்கோ பசியாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் நாம் உணர வேண்டும்.
இந்தி மொழித் திணிப்பும், மொழி சார்ந்த மேலதிகாரத்தையும் யார் கையில் எடுத்தாலும், அது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல.
அது அதிகார மையமாக இருந்தாலும், விமான நிலையமாக இருந்தாலும், உணவு விநியோக நிறுவனமானாலும் சரி.
எதன் பேரிலும் மொழியைத் திணிக்க வேண்டியதில்லை. வட இந்தியாவுக்குச் செல்லும் தமிழர்கள் தானாக இந்தியைக் கற்றுக் கொள்கிறார்கள். தமிழகத்திற்கு வரும் வட இந்தியர்கள் தானாகப் பேச்சுத் தமிழைக் கற்றுக் கொள்கிறார்கள்.
எல்லாவற்றையும் தீர்மானிப்பது தேவைகள் தான்.
அவரவர் தேவைகள் மாறுபடலாம். அதையே நிர்பந்தமாகத் திணிப்பது கூடாது என்பதைத் தான் அனைவரும் விரும்புகிறோம்.