தொலைக்காட்சி விவாத எல்லைகள் எது வரை?

குழாயடிச் சண்டை – இந்தச் சொல்லை முன்பு விவாதங்கள் அத்துமீறும்போது இயல்பாகப் பயன்படுத்துவார்கள்.

காரணம் – குழாயடிச் சண்டையில் பெண்களுக்குள் அவ்வளவு கெடுபிடியான வார்த்தைப் பிரயோகங்கள் இருக்கும். சுள்ளென்ற கெட்ட வார்த்தைகள் துள்ளி விழும்.

அபூர்வமான வட்டாரச் சொல்லகராதிக்கான வார்த்தைகள் முந்திரியைப் போலக் கிடக்கும்.

இப்போது?

நேரடியாக “தொலைக்காட்சி விவாதத்தைப் போல” என்று வெகு எளிமையாகச் சொல்லிவிடலாம் போலிருக்கிறது.

அந்த அளவுக்கு தமிழ்த் தொலைக்காட்சிகளில் விவாதிக்கிறோம் என்கிற பெயரில் தமிழைப் பிரித்து மேய்கிறார்கள். வெப்பம் தகிக்கப் பேச்சையே பெருமூச்சாக்குகிறார்கள்.

பிரபலமான வடக்கத்திய சேனலில் எப்போதும் கத்திக் கொண்டிருப்பது மாதிரியே சிலர் அவதாரம் எடுத்து வந்து தமிழிலும் ஏகத்திற்கும் கத்த நெறியாளர்கள் திண்டாடுகிறார்கள். தவிக்கிறார்கள்.

அதுவும் நேரலையாக விவாதங்கள் வெளிவரும்போது யாராவது கொச்சையான வார்த்தைகளைப் பிரயோகித்தால் அதை நெறியாளர்களால் கூடத் தடுக்க முடியவில்லை.

நெறியாளர்களின் கதியே இப்படி என்றால், நிகழ்ச்சியை வீட்டுக்குள் அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையாளர்களின் நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.

அப்படி என்ன பேசுகிறார்கள் என்கிறீர்களா?
“தேவ….யா”
“அட.. மயி…”
” நிறுத்துடா காட்டான்” செல்லமாய் அழைக்கிறார்கள்
“போடா லூசு” என்று அன்பைப் பரிமாறுகிறார்கள்.
விவாதங்களில் தீப்பிடிக்கும் போது கையாளும் சொற்களிலும் தீப்பிடிக்கின்றன.

ஆன்லைன் எடிட்டிங்கில் சற்று முன் ஜாக்கிதையான கவனத்துடன் இருந்தால், இம்மாதிரியான அத்துமீறலான சொற்கள் வெளிவரும் போது, மறைத்து ஒரு “பீப்” ஒலியை ஒலிக்க விட முடியும்.

ஆனால் விவாதங்கள் போகும் வேகத்தில் எந்த ஆத்மா எம்மாதிரியான சொல்லை எந்த நேரத்தில் வாயிலிருந்து அவிழ்த்துவிடும் என்பது பேசுகிறவர்களுக்கே தெரியாத விஷயம்.
அப்புறம் எப்படி நெறியாளர்களுக்கும், எடிட் செய்பவர்களுக்கும் பிடிபடும்?

எந்தப் புற்றிலிருந்து எப்படிப்பட்ட பாம்பு சீறும் என்கிற மாதிரிக் கதை தான்.

விவாதங்களில் பங்கேற்க வருகிறவர்களின் அன்றைய “மூடை” யார் கணிக்க முடியும்?

விவாதங்களில் சீறுகிறவர்கள் சூடானால் நெறியாளரையும் கொச்சைப் படுத்துகிறாரகள். வேலையை விட்டுப் போயிடுவீயா என்று அன்பாய்க் கொஞ்சுகிறார்கள். தொலைக்காட்சி நிறுவனத்தைச் சாடுகிறார்கள்.

இப்படிப்பட்ட மேதைமைத் தனம் கொண்டவர்களைத் தான் பேச அழைத்திருக்கிறோம், அவர்கள் இந்த அலை வரிசையில் தான் துல்லியமாகப் பேசுவார்கள் என்பதெல்லாம் தெரிந்தும் அவர்களையே மதிப்புக் கொடுத்து தொடர்ந்து அழைத்து, விவாத வெளியை அவர்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்கள் முக்கியமான ஒன்றை மறந்து விடுகின்றன.

பார்க்கிற பார்வையாளர்கள் நிகழ்ச்சியின் நாடியைப் பிடித்து, அதன் தொடர் கொச்சையோ, அசிங்கமோ தாளாமல், தொலைக்காட்சிக்கான அதிகார மையமாக இருக்கும் ட்ராய் அமைப்புக்கு ஆதாரபூர்வமாக வீடியோ ஆதாரங்களுடன் புகார்களை அளிக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியை ஒளிபரப்பிய தொலைக்காட்சி சட்டரீதியான சிக்கல்களையும், நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டிய ஆபத்தும் இருக்கிறது.

யாரோ எதையோ பேசப்போய் அதன் எதிர்வினை வேறு மாதிரி முடியலாம்.

காட்சி ஊடகத்தில் நிகழ்ச்சிகளைப் பார்க்கிற அனைவரும் பார்வையாளர்கள் மட்டுமல்ல, கண்கூடான சாட்சிகளாகவும் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

விவாதங்களில் பங்கேற்கும் எல்லாருமே இதே அலைவரிசையில் தான் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பதையும் சொல்ல வேண்டும்.

விவாத நிகழ்ச்சியில் பங்கேற்கிறவர்களின் தரம் தெரியாமல் பங்கேற்க வைத்தால், அவர்கள் பேசும் அபத்தங்களுக்குத் தொலைக்காட்சி நிறுவனங்களும் பொறுப்பேற்றாக வேண்டும்.

இதை வைத்து விவாதங்களே தேவையில்லை என்கிற இன்னொரு எல்லைக்கோட்டுக்கும் யாரும் செல்ல வேண்டியதில்லை. எதையும் ஆரோக்கியமாக விவாதிக்கும் உரிமையையும் இழக்க வேண்டியதில்லை.

தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்கிறவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், எம்மாதிரியான அனுபவப் பின்புலம் கொண்டவராக இருந்தாலும், பல லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு முன் பேசும் போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அம்சம் – யாகாவாராயினும் ‘நா’ காக்க!

  • யூகி
You might also like