விஜயை வரவேற்கும் வி.சி.க.!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கும் என அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் அதிகம் கவனிக்க கூடிய வெற்றியாக தி.மு.க கூட்டணியின் வெற்றி அமைந்துள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வி.சி.க 43 ஒன்றிய கவுன்சில் இடங்களிலும், 4 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் போட்டியிட்டது. இதில் 27 ஒன்றிய கவுன்சில் இடங்களையும் 3 மாவட்ட கவுன்சில் இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளோம்.

இது அனைத்துத் தரப்பு மக்களும் வி.சி.க.வை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பதை காட்டுகிறது.

அ.தி.மு.க.விற்கு வலிமையான தலைமை அமையவில்லை. பா.ஜ.க.வை சார்ந்து இயங்கும் வரையில் அ.தி.மு.க.விற்கு இந்த சரிவு தொடரும். அ.தி.மு.க.வில் ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் இருந்த கட்டுக்கோப்பு தற்போது இல்லை.

விஜய் மக்கள் இயக்கத்தினர் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றி, விஜய்யின் அரசியல் வருகைக்கான ஒத்திகையாக பார்க்க முடியாது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் அதை வரவேற்கும்” என தெரிவித்தார்.

You might also like