பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே என்று அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்திய தமிழ் திரைப்படங்கள் நிறைய இருக்க, அவற்றில் மேலுமொன்றாக இணைந்திருக்கிறது சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, ஸ்ரீஜா ரோஸ் நடித்துள்ள ‘உடன்பிறப்பே’. ஜோதிகாவின் 50-வது படம் இது என்பது இன்னொரு சிறப்பு.
’கத்துக்குட்டி’ படத்தையடுத்து இயக்குனர் இரா.சரவணனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இப்படைப்பு, அமேசன் பிரைம் தளத்தில் காணக் கிடைக்கிறது.
அதே.. அதே.. கதை!
உறவு இழை அறுந்துபோய்விடக் கூடாது என்று போராடும் ஒரு அண்ணன் – தங்கை பற்றிய கதை இது.
வைரவன் (சசிகுமார்), மாதங்கி (ஜோதிகா) இருவரும் அண்ணன் தங்கை. வைரவனும் அவரது மனைவியும் (ஸ்ரீஜா ரோஸ்) மாதங்கியின் மனம் புண்பட்டுவிடக் கூடாது என்று எல்லா விஷயங்களையும் பார்த்து பார்த்து செய்யும் இயல்புடையவர்கள்.
மாதங்கியின் கணவர் சற்குணமோ, வைரவன் எதைச் செய்தாலும் அதில் வன்முறை இருக்குமென்று நம்புபவர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக இரு குடும்பத்திற்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை.
கணவரும் சகோதரரும் உறவு பாராட்ட வேண்டுமென்று விரும்பும் மாதங்கி, அதற்காகத் தனது மகளை அண்ணன் மகனுக்குத் திருமணம் செய்ய வேண்டுமென்று சுற்றத்தினர் வற்புறுத்துவதை ஏற்க மறுக்கிறார்.
கால மாற்றத்திற்கு ஏற்றவாறு குழந்தைகளின் விருப்பத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்கிறார்.
யாரும் எதிர்பாராதவிதமாக, வைரவனின் மகன் (சித்தார்த்) மாதங்கியின் மகளைத் (நிவேதிதா சதீஷ்) திருமணம் செய்யும் சந்தர்ப்பம் உருவாகிறது. திருமண ஏற்பாடுகள் நடக்கும் நிலையில், திடீரென்று ஒருநாள் மாதங்கியைக் கொலை செய்ய முயற்சிக்கிறது ஒரு கும்பல்.
ஏற்கனவே வைரவன் மீது அதிருப்தியில் இருக்கும் சர்க்குணம், மகள் குற்றுயிரும் குலையுயிருமாக இருப்பதைக் கண்டு திருமண ஏற்பாட்டை நிறுத்துகிறார். அதன்பின் என்ன நடந்தது என்பது மீதிக்கதை.
சர்க்குணம் ஏன் வைரவனை வெறுக்கிறார்? மாதங்கியின் மகளைத் தாக்கியது யார் என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்கள் திரைக்கதையின் நடுநடுவே கிடைக்கின்றன.
கதை நகர்வைக் கண்டவுடனேயே, ‘இது அதே.. அதே.. பழைய பார்முலாதான்’ என்ற எண்ணம் தலை தூக்குகிறது. காட்சிகளும் கூட அதற்கேற்றவாறே நகர்கின்றன. சில காட்சிகளின் உள்ளடக்கம் மட்டும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.
உடன்பிறப்புகள் வேண்டும்!
’நாம் இருவர் நமக்கு ஒருவர்’ என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வந்து நெடுநாட்களான நிலையில், உடன்பிறப்புகளோடு உள்ள பாசம்தான் காலம் முழுக்க நம்மைக் காப்பாற்றும் என்று சொல்ல முனைந்திருக்கிறார் இயக்குனர் இரா.சரவணன்.
திருமணத்திற்குப் பிறகும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காத அண்ணன் தங்கை பாசத்தை இதில் காட்டியிருக்கிறார்.
அதற்கேற்றவாறு சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனியின் நடிப்பு அமைந்திருக்கிறது.
ஆக்ஷன் படத்திற்குரிய பில்டப்புடன் சசிகுமாரின் அறிமுகக்காட்சி இருக்கிறதென்றால், தாய்மார்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுவிடும் நம்பிக்கையோடு ஜோதிகாவின் அறிமுகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த பில்டப்கள் தொடர்கதையாகும்போது சலிப்பு தொற்றிக்கொள்ள, அதனை மேலும் அதிகப்படுத்தும் வகையில் ’பிளாஷ்பேக்’ வேறு வருகிறது.
சசிகுமாரின் மகனாக சித்தார்த், ஜோதிகாவின் மகளாக நிவேதிதா சதீஷ் இருவரும் காட்டப்படும்போதுதான் ‘அப்பாடா’ என்றிருக்கிறது.
அண்ணன் தங்கை பாசத்தை ஆளாளுக்கு தாங்கிப் பிடிக்கிறார்களே என்று தங்கள் பங்குக்கு ‘சென்டிமெண்டை’ பிழிந்திருக்கிறது வேல.ராமமூர்த்தி – தீபா ஜோடி
மல்லிகொண்டானாக வரும் நரேன், அவரது மகனாக நடித்துள்ள கலையரசன், எம்.எல்.ஏ.வாக வரும் நமோ நாராயணா, இன்ஸ்பெக்டராக வரும் வேல்ராஜ், வழக்கறிஞராக வரும் மை.பா.நாராயணன் தொடங்கி இரண்டொரு நொடிகளில் முகம் காட்டிச் செல்லும் ஊர் மக்கள் வரை அனைவரது இருப்பும் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
வழக்கமாக நாயகர்களுடன் வரும் சூரி, இதில் சிறு மாற்றத்தை அமல்படுத்தும் பொருட்டு ஜோதிகா, சமுத்திரக்கனி, சித்தார்த், நிவேதிதா என்று ஒவ்வொருவருடனும் இரண்டு காட்சி என்று முறை வைத்து நடித்திருக்கிறார்.
திருவிழா காட்சிகளில் நிரம்பி வழியும் இயல்புத்தன்மை நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் குழுவினரின் உழைப்பை அழகாக மெருக்கேற்றியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ரூபன்.
’விஸ்வாசம்’, ‘நம்மவீட்டுப் பிள்ளை’யைத் தொடர்ந்து, சிறு இடைவெளியில் மீண்டுமொரு கிராமத்துப் படைப்புக்கு இசை தந்திருக்கிறார் டி.இமான். பாடல்கள் ஓகே ரகம்.
சசிகுமாரின் ஆக்ஷன் காட்சிகளுக்கு இசையமைக்கும்போது, தியேட்டர் ரெஸ்பான்ஸை மனதில் ஏற்றிக் கொண்டிருப்பது நன்றாகத் தெரிகிறது.
நல்ல நடிப்புக் கலைஞர்கள், தொழில்நுட்பக் குழு என்று களமிறங்கியிருக்கும் இயக்குனர் சரவணன், திரைக்கதையை மட்டும் ‘சேஃப்டி ஸோன்’ தாண்டாமல் வழக்கம்போல அமைத்து ஜாக்கிரதை பாராட்டியிருக்கிறார்.
இடைவேளை ‘பிளாஷ்பேக்’ முன்னதாக வரும் பகுதி, இயக்குனர் விக்ரமன் படங்களின் கிளைமேக்ஸ் காட்சிகளை ஒன்று சேர்த்துப் பார்க்கிறோமோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
என்ன நோக்கம்?
‘சைட் அடிக்கிறதே தப்பு, இதுல சாதி பார்த்து சைட் அடிக்கிறீங்களோ’ என்று சாதி வேற்றுமை பாராட்டும் இளைஞர்களைப் புரட்டியெடுக்கிறார் சசிகுமார்.
‘இது நியாயமா’ என்று அடிபட்ட இளைஞனின் தந்தை ஆட்களை இறக்க, ’தப்பு பண்ணிட்டேன், உன்னைத்தான் முதல்ல அடிச்சிருக்கணும்’ என்று அவர்களை அந்தரத்தில் பறக்கவிடுகிறார்.
ஏழை விவசாயி கடன் தொகை கட்டாததால் டிராக்டர் பறிமுதல் செய்யப்படும்போது, நிதி தந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்களைக் கதிகலங்க வைக்கிறார்.
என்ன செய்தாலும், ’அடி உதை போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்’ என்ற பழமொழியை மட்டுமே உண்மையாக்கத் துடிக்கும் வழக்கமான ஹீரோக்களை பிரதிபலிக்கிறார்.
ஏழைப்பெண் தனது கர்ப்பிணி மகளைத் தனியார் மருத்துவமனையொன்றில் சேர்க்க, அதிகப் பணம் கேட்கும் மருத்துவரிடம் தருவதற்காகத் தன் தாலியை ஒரு சேட்டுக்கடையில் அடகு வைக்கிறார் ஜோதிகா.
’உயிருக்குப் போராடுற நேரத்துல இப்படி பணம் கேட்கறீங்களே’ என்று மருத்துவரிடம் கோபப்படுபவர், வட்டிக்குப் பணம் தந்தவரைப் பாராட்டுகிறார்.
நிறைய மதிப்பெண் எடுத்தும் தந்தை கைரேகை புரட்டுவதை மாற்றத் துடிக்காத ஒரு மாணவியை விட, குறைவான மதிப்பெண் எடுத்தாலும் தட்டுத்தடுமாறி கையெழுத்திட்டிருக்கும் ஒரு தந்தைக்கு அவரது மகனே கல்வி புகட்டியிருப்பான் என்று வசனம் பேசியவாறே சமுத்திரக்கனியின் அறிமுகம் அமைக்கப்பட்டிருக்கிறது.
கொசுவை விரட்டுகிற சாதனங்கள் மனிதர்களைப் பாதிக்காதா என்று கேள்வி எழுப்புகிறார். வில்லனாக வரும் கலையரசன் இந்த நுட்பத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும்போது, ஜோதிகாவின் கேள்விக்கு அர்த்தம் கிடைக்குமாறு செய்திருக்கிறார் இயக்குனர்.
சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி மட்டுமல்லாமல், ’நிலத்தடி நீரை விட மழை நீரை நம்பியிருப்பதுதான் பூமிக்கு நல்லதுன்னு நம்மாழ்வார் சொல்லியிருக்காரு’ என்று போகிறபோக்கில் தனது நகைச்சுவை வரிகளுக்கிடையே சொல்லிச் செல்கிறார் சூரி.
இப்படிப் படம் முழுக்க அறிவுரைகள் விதைக்கப்பட்டிருக்கின்றன.
இவை அனைத்துமே ‘படத்தின் நோக்கம் என்ன’ என்ற கேள்வியை மேலும் வலுப்படுத்துகின்றன. அதற்குப் பதிலளிக்கும் வகையில்
’குழந்தை பொறக்கலைன்னா பொண்டாட்டிக்குத்தான் குறையா, புருஷன் எனக்குத்தான் குறை இருக்கு’ என்று சசிகுமார் பேசுவதும், தங்கை மகள் பாதிக்கப்பட்டதன் பின்னணி குறித்து மச்சானுக்குத் தெரிந்தால் உயிரை விட்டுவிடுவார் என்று அவர் புலம்புவதும் உண்மையிலேயே நெஞ்சை நெகிழவைக்கின்றன.
ஆனால், அதே நெகிழ்வை படம் நெடுக உண்டாக்குகிறேன் பேர்வழி என்று சென்டிமெண்ட் காட்சிகளை வலிய திணித்திருப்பதுதான் நம்மை நெளிய வைக்கிறது.
சசிகுமார் குடும்பம் மகிழ்ச்சியோடு வாழ்வதற்காக ஜோதிகா செய்யும் தியாகம்தான், அவரது வாழ்வையே வெறுமையாக்குவதாகப் படத்தில் காட்டப்படுகிறது.
அதையும் மீறி, அப்படிப்பட்ட மனைவியை எவ்வித வெறுப்புமின்றி நேசிக்கும் சமுத்திரக்கனியின் பாத்திரப் படைப்பே ‘உடன்பிறப்பே’ திரைக்கதையின் ஆதாரம்.
அதன் மூலமாக, திரையில் சொல்லப்படாத பல விஷயங்களைப் பார்வையாளர்கள் தானாக உணர வழி செய்திருக்க முடியும்.
அப்படியொரு வாய்ப்பைத் தவறவிட்டு, வெறுமனே ஜோதிகாவையும் சசிகுமாரையும் மாறி மாறி காட்டி, காலத்தால் பின்தங்கிய ஒரு படைப்பைப் பார்த்த உணர்வை ஊட்டுகிறது ‘உடன்பிறப்பே’.
- பா.உதய்