சென்னை கிங்ஸ் – எப்போதும் ராஜா!

தீபாவளி பண்டிகை அடுத்த மாதம்தான் என்றாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் நேற்றே தீபாவளியைக் கொண்டாடி விட்டார்கள்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை வெல்ல, தமிழகத்தில் பல இடங்களில் பட்டாசுகளை வெடித்து உற்சாகத்தை பகிர்ந்துகொண்டனர் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள்.

டி20 கிரிக்கெட் போட்டியில் 300-வது முறையாக கேப்டனாக இருந்து இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்துள்ளார்  தோனி.

சென்னை கிங்ஸ் அணி தாங்கள் எப்போதும் ராஜாதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் பொறுத்தவரை மிகக் குறைந்த ரன்களை எடுத்த கேப்டன் தோனிதான்.

இந்த தொடரில் அவர் எடுத்த மொத்த ரன்களே 114-தான். ஆனாலும் அதிக ரன்களைக் குவித்த கேப்டன்களைவிட, மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் தோனி.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது முறையாக கோப்பையை பெற்றுத் தந்துள்ளார்.

இதன்மூலம் தான் சிறப்பாக செயலாற்றுவதைவிட, மற்றவர்களிடம் இருந்து சிறந்த ஆற்றலைப் பெறுபவரே ஒரு சிறந்த தலைவராக வரமுடியும் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை கடந்த 2020-ம் ஆண்டில் நடந்த ஐபிஎல் போட்டி, ஒரு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

இத்தொடரில் சென்னை அணி 7-வது இடத்தைப் பிடித்தபோது, அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்றார்கள்.

“தோனியின் பேட்டிங்கும், அணியை வழிநடத்தும் திறனும் போய்விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கும் வயதாகிவிட்டது. அதனால் இனி இந்த அணியை வைத்துக்கொண்டு சென்னையால் இனி பட்டம் வெல்ல முடியாது” என்று பலரும் அடித்துச் சொன்னார்கள்.

ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இதை ஏற்கவில்லை. தோனியை அவர்கள் எப்போதும்போல் நம்பினார்கள்.

அதேபோல் தோனியும் ‘டாடீஸ் ஆர்மி’ என்று கிண்டலடிக்கப்பட்ட, வயதான வீரர்களைக் கொண்ட அணியை நம்பினார்.

“இந்த முறை நாங்கள் தோற்றிருக்கலாம். ஆனால் அடுத்த முறை மீண்டும் வலிமையாக வருவோம்” என்று கடந்த ஆண்டில் நடந்த கடைசிப் போட்டியின்போது சூளுரைத்தார்.

அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வழக்கமான பேசாகவே இது கருதப்பட்டது.

கடந்த முறை ஏற்பட்ட  தோல்வியால்,  2021-ம் ஆண்டுக்கான ஏலத்தில் இளம் வீரர்களை சென்னை வாங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அதற்கு மாறாக 30 வயதைக் கடந்த மொயின் அலி, கிருஷ்ணப்பா கவுதம், உத்தப்பா, புஜாரா ஆகியோரையே சென்னை அணி வாங்கியது.

இதைப் பலரும் கிண்டலடித்தனர். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும், தோனியும் கவலைப்படவில்லை.

டு பிள்ஸ்ஸி, ரெய்னா, உத்தப்பா, மொயின் அலி, ராயுடு, பிராவோ என்று சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கியிருந்த இந்த வயதானவர்களின் படை, தங்களுக்கான வாய்ப்புக்காக காத்திருந்தது.

எல்லோருக்கும் முன்னதாகவே ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று பயிற்சியில் ஈடுபட்டது.

கடந்த முறை தோற்றுப் போன அணியில் பெரிதாக எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. மொயின் அலி, உத்தப்பா ஆகிய இருவரை மட்டும் பிளேயிங் லெவனில் சேர்த்தார் தோனி.

அதே நேரத்தில் ருதுராஜ் கெய்க்வாட், ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர் என இளம் வீரர்களையும் நம்பினார்.

இளமையின் வேகம், முதுமையின் அனுபவம் ஆகிய இரண்டும் சேர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மீண்டும் ஒரு கோப்பையை பெற்றுத்தந்துள்ளது.

ஐபிஎல்லில் 4 முறை வெற்றி பெற்றாலும், சென்னை அணிக்கு இனிதான் சோதனை இருக்கிறது. அடுத்த ஐபிஎல்லுக்கு முன்னதாக மிகப்பெரிய ஏலம் நடைபெற உள்ளது.

இப்போதுள்ள அணியில் இருந்து 3 வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும் என்ற கட்டாயத்தில் ஒவ்வொரு அணியும் உள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக ஒன்றாக இருந்த சென்னைக்கு இது மிகப்பெரிய சவால். ஒரு புதிய அணியை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

ஆனால் எந்தக் கட்டத்தையும் சமாளிக்கும் தோனியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இந்த கட்டத்தையும் சமாளிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

-பிரணதி

You might also like