அந்த அதிபரின் பெயர் தாமஸ் இசிதோர் நோயல் சங்கரா!

1983ஆம் ஆண்டில், அந்த நாட்டின் அதிபரானபோது அந்த இளைஞருக்கு வெறும் 33 வயதுதான்.

பைக் சவாரியில் மிகவும் ஆர்வமுள்ள, கிடார் வாசிக்கத் தெரிந்த ஓர் இளைஞர் நாட்டின் அதிபராகிறாரே? என்ன ஆகுமோ? என்று நாட்டு மக்கள் திகைத்துப் போயிருந்த நேரம், அந்த இளைஞர் அதிசயங்களை நிகழ்த்தத் தொடங்கினார்.

இரண்டொரு வாரங்களில் நாட்டின் 25 லட்சம் குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல், தட்டம்மை, மஞ்சள் காய்ச்சலுக்கு எதிராக தடுப்பூசி போட வைத்தார்.

நாடு மேலும் பாலைவனமாகாமல் தடுக்க ஒரு கோடி மரங்களை நட வைத்தார்.

அரசு அலுவலர்கள் அதுநாள் வரை பயன்படுத்தி வந்த விலையுயர்ந்த மெர்சிடஸ் கார்களை பறிமுதல் செய்து விட்டு, விலைமலிவான ரெனால்ட்- 5 கார்களைப் பயன்படுத்த உத்தரவிட்டார்.

பொதுத்துறை ஊழியர்களின் சம்பளத்தைக் குறைத்தார். தனது சம்பளத்தையும், 450 டாலராகக் குறைத்துக் கொண்டார்.

நாட்டின் பெயரை ‘நேர்மையான மனிதனின் நாடு‘ என மாற்றினார். தான் ஓர் இசைக்கலைஞன் என்பதால் புதியதொரு நாட்டுப்பண்ணை (தேசிய கீதத்தை) அவரே எழுதினார்.
தலைநகரில் அந்த நாட்டின் முதல் சூப்பர் மார்க்கெட்டை உருவாக்கினார்.

பெரும் நில உடைமையாளர்களிடம் இருந்த நிலங்களைப் பறித்து, ஏழை விவசாயிகளுக்கு பகிர்ந்தளித்தார்.

இதனால், ஹெக்டேருக்கு 1,700 கிலோவாக இருந்த கோதுமை விளைச்சல், வெறும் மூன்று ஆண்டுகளில் 3,600 கிலோவாக அதிகரித்து உணவு உற்பத்தியில் நாடு தன்னிறைவை எட்டியது.

நாட்டு மக்கள் கல்வியறிவு பெறுவதில் அந்த இளம் அதிபர் அளப்பரிய ஆர்வம் காட்டினார். இதனால், 1983ல் 13 விழுக்காடாக இருந்த கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை, 1987ல் 73 விழுக்காடாக எகிறியது.

பெண்களுக்கு உயர் பதவிகளைத் தந்தார். கட்டாய திருமணம், பலதார மணத்துக்குத் தடை விதித்தார். கர்ப்பக் காலத்தில் விடுப்புடன் கூடிய சம்பளம் என்பதுடன், வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் பெண்கள் சமைக்கத் தேவையில்லை எனவும் அந்த நாளில் ஆண்கள் சமையல் செய்ய வேண்டும் எனவும் வித்தியாசமான ஆணை பிறப்பித்தார்.

அந்த அதிபரின் பெயர் தாமஸ் இசிதோர் நோயல் சங்கரா. அவரது நாடு மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினோ ஃபேசோ.

பன்னாட்டு நிதியம், உலக வங்கிகளின் உதவிகளை அவர் பெற மறுத்தார். ‘உங்களுக்கு உணவூட்டுபவர் உங்களைக் கட்டுப்படுத்துகிறார்‘ என்பது அவரது சித்தாந்தம்.

நாட்டை இணைக்கும் சாலைகள், இருப்புப் பாதையை வெளிநாட்டு உதவிகளின்றி அவர் அமைத்தார். பர்கினோ ஃபாசோ நாட்டில் விளைந்த பருத்தியில், பர்கினோ ஃபாசோ நாட்டு தையல் கலைஞர்கள் உருவாக்கிய உடைகளை அணிய மக்களை அவர் வற்புறுத்தினார்.

சொந்த நாட்டில் மட்டுமின்றி, அண்டை ஆப்பிரிக்க நாடுகளிலும் அவரது புகழ் பரவியது. ராணுவ கேப்டனாக இருந்து ராணுவப் புரட்சி மூலம் ஆட்சிக்கு வந்தவர்தான் என்றாலும், மார்க்சியவாதியாகவும், பெரும் புரட்சியாளராகவும் தாமஸ் சங்கரா விளங்கினார்.

அவரது ஆட்சி அமெரிக்கா உள்பட பல நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. விளைவு? 1987ல் தாமஸ் சங்கராவுக்கு எதிராக ராணுவப் புரட்சி நடந்தது.

உற்ற நண்பராக இருந்த பிளைசி என்பவரே தாமஸ் சங்கராவை படுகொலை செய்துவிட்டு ஆட்சியை தனதாக்கினார். அதன்பின் நாட்டை முழுக்க முழுக்க மேற்குநாடுகளின் காலனியாக பிளைசி மீண்டும் உருமாற்றினார்.

‘புரட்சியாளர்களும் தனிமனிதர்கள்தான். அவர்களைக் கொல்ல முடியும், ஆனால், அவர்களது சிந்தனைகளைக் கொல்ல முடியாது‘ என்பது தாமஸ் சங்கராவின் பொன்மொழி.

‘ஆப்பிரிக்காவின் சேகுவேரா‘வாக இன்றும் மக்களின் மனங்களில் வாழ்கிறார் தாமஸ் சங்கரா.
(இன்று தாமஸ் சங்கராவின் நினைவுநாள்)
****
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு 15.10.2021

You might also like