தமிழன் பிரதமராக வருவது என்பது எவ்வளவு சீரியஸான விஷயம்! அதைப் போய்ச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு அபிப்பிராயம் சொல்லலாமா? தேசிய உணர்வு, ஹிந்தி கற்பது, பல மொழிகளை ஏற்பது, ஹிந்தியைத் திணிக்காமல் இருப்பது, சமூகநீதியின் முக்கியத்துவம், தமிழ் இன உணர்வு உள்ள தமிழன்…
இப்படியெல்லாம் சுற்றி வளைத்துப் பேசுகிற விஷயமா இது? இதுவரை இந்த விவாதம் இப்படிப்பட்ட சம்பந்தா சம்பந்தமில்லாத வாதங்களினாலும், சிக்கல் நிறைந்த கொள்கைகளினாலும், பெருமளவு திசை திருப்பப்பட்டுவிட்டது என்பதைப் பார்க்கும்போது, என் மனம் ரொம்பவும் வேதனைப்படுகிறது.
நேரிடையாகப் பிரசினைக்கு வர வேண்டும். இதுவரை கருத்துத் தெரிவித்தவர்கள் அப்படி வரவில்லை. நான் வருகிறேன். தமிழன் பிரதமராக வரமுடியுமா? முடியும். 2007-ல் வந்துவிட முடியும்; அதற்கு முன்பாகவே கூட முடியும். எப்படி? பார்ப்போம். (சொல்லப் போனால், இது நடந்தேறுவதற்கு இருக்கும் வழி தெள்ளத் தெளிவாகத் தெரிகிற வழி. மற்றவர்களுக்கு இது தெரியாமல் போனதுதான் ஆச்சரியம்.)
பிரதமராக வரக்கூடிய தமிழர்கள் பட்டியல் ஒன்றைப் பார்ப்போம். மூப்பனார், வாழப்பாடி, ஜெயலலிதா, கருணாநிதி, சிதம்பரம், சுப்பிரமணியம் ஸ்வாமி, சேஷன், கோபால்சாமி…
இதில் மூப்பனார் பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றால், ஜெயலலிதாவுக்குக் கோபம் பொத்துக் கொண்டுவரும். வாழப்பாடிக்கு வயிற்றெரிச்சல் கபகபவென்று வரும். இந்த இருவரின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். ஜெயலலிதா சிவசேனையையோ, பஜ்ரங் தாளையோ ஆதரிக்கத் தொடங்கி விடுவார். வாழப்பாடி அர்ஜுன்சிங்கையோ, இல்லாவிட்டால் அஜீத்சிங்கையோ கூட ஆதரிக்க முனைவார். தமிழ்நாடு காங்கிரஸ் பிளவுபடும். மூப்பனார் பிரதமராக வருவதில் இவ்வளவு சிக்கல்.
சரி, வாழப்பாடி? மூப்பனார் விரும்பமாட்டார். மௌனமாகவே வேலை செய்வார். நரசிம்மராவே நிரந்தரமாக நீடிக்க வழி செய்வார். ஜெயலலிதாவுக்கு மூப்பனார் விஷயத்தில் வருவதைவிட அதிகமான கோபம் வரும். அந்தக் கோபத்தில், அவர் என்ன செய்வாரோ! சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு எதிராகவே போஸ்டர்கள் வந்தாலும் வரும். அல்லது அவர்களை டிஸ்மிஸ் செய்வார். பெரிய அரசியல் சட்டக் குழப்பமே வந்துவிடும். அதனால் வாழப்பாடி பிரதமராக வருவதும் நடக்கக்கூடியது அல்ல.
சிதம்பரம் வரலாமே? அவர் அறிவாளியாயிற்றே? ஆமாம். அதனால்தான் அவர் பிரதமராகிற மாதிரித் தெரிந்தால், காங்கிரஸ் கட்சியையே கலைத்துவிடுவார்கள்! நடக்கவே நடக்காது.
சரி. அது போகட்டும். ஜெயலலிதா முயற்சி செய்தால்? கருணாநிதிக்குத் திராவிட உணர்வு பீறிட்டு அடிக்கும். ஹிந்தியை அழிப்பார். ரயிலை நிறுத்துவார். திருமணங்களில் தலைமை தாங்கி, வெட்கங் கெட்ட தமிழர்களைத் திட்டித் தீர்ப்பார். மூப்பனாரும், வாழப்பாடியும் முதல் முறையாகப் பரிபூர்ணமாக இணைந்து செயல்பட்டு, போராட்டமே நடத்துவார்கள். இதுவும் சரிப்பட்டு வராது.
கருணாநிதி பிரதமராகிற மாதிரித் தோன்றினாலே போதும், கோபால் சாமிக்கு ஆதரவாக விடுதலைப்புலிகள் பெரிய அட்டகாசத்தில் இறங்கி விடுவார்கள். கோபால்சாமி, ‘கோபாலபுரத்தைக் கைப்பற்றாமல் விடமாட்டேன்’ என்று முதல் நாளும், ‘கோபாலபுரம் எனக்குத் தேவை வில்லை, கோபுரம் போதும்’ என்று அடுத்த நாளும் மாறி மாறி அறிக்கைவிட்டு மக்களைத் திணற அடிப்பார். பெரிய ரகளையாகிவிடும். கோபால் சாமிக்காவது சான்ஸ் உண்டா என்று பார்த்தால், கருணாநிதியின் தமிழ் இன உணர்வு அப்போது ருத்ர தாண்ட வம் ஆடிவிடும். தமிழ்நாடு தாங்காது. காங்கிரஸ் கட்சியும் கடுமையாக எதிர்க்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிக்கிக் கொள்ளும், சுப்பிரமணியம் ஸ்வாமி ஒரு குற்றச்சாட்டு வெள்ளத்தையே உருவாக்கிவிடுவார். கோபால்சாமி பாகிஸ்தான் உளவாலியோ என்ற சந்தேகமே வந்துவிடும். வீண் விவகாரம்தான் மிஞ்சும் என்பதால் இதுவும் உருப்படாது. இவர்கள் எல்லாம் போகட்டும் சுப்பிரமணியம் ஸ்வாமியே பிரதமராகும் சந்தர்ப்பம் வந்தால்? மேலே சொன்ன எல்லோருமே சேர்ந்து எதிர்ப்பார்கள். அ.தி.மு.க. மந்திரி யாராவது டெல்லியில் ‘ஆஸிட்’ மழையே கொட்டிவிடுவார். ஜெயலலிதா வாழ்க்கையே வெறுத்து விடுவார். ரொம்பக் குழப்பமாகி விடும். இதுவும் நடைமுறைக்கு ஒவ்வாது.
சேஷன்? எல்லா அரசியல் கட்சிகளும் எதிர்க்கும். எல்லாத் தலைவர்களும் ஒன்றுகூடி, இதைவிட பிரிட்டிஷ்காரனே மேல் என்று தீர் மானம் போட்டுவிடுவார்கள். நடக்க விடமாட்டார்கள்.
இப்படி எந்தத் தமிழன் பிரதமராக வருவதற்கு வாய்ப்பு உருவானாலும் மற்றத் தமிழர்கள் எதிர்ப்பார்கள். அதுதான் தமிழின உணர்வு. சரி, அப்படியானால் சான்ஸே கிடையாதா? இருக்கிறது. ஒரே ஒரு தமிழன் இருக்கிறான். அவன் பிரதமராக வருவதற்கு எல்லோரும் முனைந்து வாய்ப்பை உருவாக்கலாம். எதிர்ப்பு இருக்காது. அதுதான் ஒரே சான்ஸ்.
யார் அந்தத் தமிழன்? அடியேன் தான்.
நான் பிரதமரானால் – மூப்பனாரையும் சில சமயங்களில் நான் விமரிசனம் செய்வதால், வாழப்பாடி என்னை ஆதரிப்பார். வாழப்பாடியையும் விமரிசனம் செய்வதால் மூப்பனார் என்னை ஆதரிப்பார். கோபால்சாமியை நான் எதிர்ப்பதால் கருணாநிதி என்னை ஆதரிப்பார். கருணாநிதியையும் நான் ஆதரித்துவிடவில்லை என்பதால் கோபால்சாமியின் ஆதரவும் எனக்குக் கிட்டும். ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதால் சுப்ரமணியம்ஸ்வாமி என்னை ஆதரிப்பார். நரசிம்மராவைக் கிண்டல் செய்வதால் ஜெயலலிதாவின் ஆதரவும் கிட்டும்.
இது மட்டுமல்ல, ‘இவனுக்குத் தான் மக்களின் ஆதரவு கொஞ்சமும் கிடையாதே? இவன் எத்தனை நாள் பிரதமராக நீடித்துவிட முடியும்? நினைத்தபோது கவிழ்த்துவிடலாம்,’ என்ற நம்பிக்கை என்னைப் பற்றி எல்லா அரசியல்வாதிகளுக்கும் இருக்கும். யாரும் இல்லையென்றால் நெடுஞ்செழியனை முதல்வராக ஏற்கத் தயாராக இருக்கும் வழக்கம் கழகங்களுக்கு உண்டு அல்லவா? அதே மாதிரி அடிப்படைதான் இதற்கும். இஷ்டப்படும்போது உருட்டி விட்டுவிடலாம். என்ற நம்பிக்கையில் என்னை எல்லா அரசியல்வாதிகளும் ஆதரிப்பார்கள். தமிழகப் பாமர மக்கள், ‘இவன் இனிமேல் நிச்சயமா சினிமா. டி.வி., டிராமா எதிலும் நடிக்காமல் இருக்க இதுதான் உறுதியான வழி,’ என்று உணர்ந்து, நான் பிரதமராவதை ஆதரிப்பார்கள்.
தமிழகத்தில் உள்ள படித்த மக்கள், ‘இவன் துக்ளக் பத்திரிகையை நடத்தாமல் இருக்க இதுவே சிறந்த தந்திரம்,’ என்று நினைத்து, நான் பிரதமராக விரும்புவார்கள். இப்படிப் படித்தவர் முதல் பாமரர் வரை பெருத்த ஆதரவு எனக்குக் கிட்டும். வடநாட்டு அரசியல்வாதிகள், இவன் ஒருமுறை பிரதமராக இருந்தால் போதும். அதற்குப் பிறகு தமிழ் மக்கள், தமிழன் பிரதமராக வரவேண்டும் என்று கேட் கவே மாட்டார்கள்,’ என்று நம்பி, நான் பிரதமராவதை ஏற்பார்கள்.
இப்படி, பரவலான ஆதரவு கிட்டக்கூடிய நான் எதிரிலேயே இருக்கும்போது. நான் பிரதமராக வருவதற்கு முயற்சி செய்யத் தொடங்கு வதை விட்டுவிட்டு, 2007-ல் தமிழன் பிரமராக முடியுமா?’ எனக் கேட்டுக் கொண்டிருப்பது வீண்வேலை.
பின்குறிப்பு : ஒரே ஒரு சின்ன சிக்கல். நான் தமிழனே இல்லை என்று வீரமணி பேச ஆரம்பிப்பார். முலாயம் சிங்கும், என்.டி.ஆரும், வி.பி. சிங்கும்கூடத் தமிழர்கள் என்று வீரமணி ஒப்புக் கொள்வாரே தவிர, என்னை ஒப்புக் கொள்ளமாட்டார். அதனால் பரவாயில்லை. ‘தமிழன் என்ற சர்ட்டிபிகேட்டை வீரமணியிடம் எப்படிப் பெறுவது?’ என்ற தந்திரத்தை ஜெயலலிதாவிடமிருந்து அறிந்து கொண்டுவிடலாம்.
15 ஆண்டுகளுக்கு முன்பு வார இதழ் ஒன்றில் எழுதிய கட்டுரை