மாற்றுமுறை காண்போம்: தொடர் – 57 டாக்டர் க. பழனித்துரை
சமீப காலமாக இந்த “மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட திட்டம்” ஒரு சாபக்கேடாக மாறிவிட்டது என்ற கருத்து அரசியல் தளத்தில் வெளியிடப்பட்டு அதன்மேல் விவாதங்களும் பொது வெளியில் வைக்கப்படுகின்றன.
ஏழைகளைப் பாதுகாக்க உலகில் உருவாக்கப்பட்ட திட்டங்களிலேயே முதன்மையான திட்டம் என்பதை உலக வங்கி மற்றும் உலகத் தலைவர்கள் பாராட்டியதை நாம் உள்வாங்கி பார்க்கத் தவறியதின் விளைவு இப்படிப்பட்ட கருத்துக்களை நாம் முன் வைக்கின்றோம்.
இந்தியா நடுத்தர வர்க்க நாடு அல்ல ஜெர்மெனி, நார்வே, டென்மார்க், சுவீடன், சுவிச்சர்லாந்து போல. இது ஏழைகள் அதிகம் வாழும் நாடு.
ஆகையால்தான் பாரதப் பிரதமர் இந்த பேரிடர் காலத்தில் 80 கோடி மக்களுக்கு பொது வினியோக முறையில் உணவு தானியங்கள் வழங்கி உணவுப் பாதுகாப்பு வழங்கியுள்ளோம் என்று ஐ.நா. நிறுவனக் கூட்டம் ஒன்றில் விளக்கினார்.
இன்று இந்த 100 நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தின் அடிப்படை நோக்கங்கள் நமக்கு புரிந்திருந்தால் இப்படிப்பட்ட விவாதமும் வந்திருக்காது, இந்தத் திட்டத்தில் பெருமளவு ஊழலும் நடந்திருக்காது.
இந்தத் திட்டம் வந்ததிலிருந்து, இந்தத் திட்டத்திற்கு எதிரான கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது ஒரு கூட்டம்.
அது படிப்படியாக அரசியல் தளத்தில் பரவி, இந்தத் திட்டம் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற நிலையில் 2014 ஆம் ஆண்டு புதிய அரசு வந்தவுடன் மூடுவிழா காணப்போகும் திட்டமாக சித்தரிக்கப்பட்டது.
ஆனால் நடந்தது வேறு. அந்தத் திட்டம் சீரமைக்கப்பட்டதேயொழிய, மற்ற திட்டங்கள்போல் நிறுத்தப்படவில்லை.
உண்மை என்னவென்றால் இந்தத் திட்டம் பற்றி பொதுவெளியில் வைக்கப்பட்ட விவாதங்களுக்கு மாறாக ஆராய்ச்சி அறிக்கைகள், இந்தத் திட்டம் விவசாயத்தில், இதில் பணி செய்த பணியாளர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரத்தில்,
குடும்பத்தில் முடிவெடுக்கும் உரிமையில், பெண்கள் மேம்பாட்டில், பொதுச்சொத்து உருவாக்குவதில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை தரவுகளின் அடிப்படையில் வெளிக்கொணர்ந்து விட்டன.
இன்றைய மத்திய அரசாங்கம் ஒரு நிலையில் ஆண்டுக்கு ரூபாய் 45000 கோடியிலிருந்து 60,000 மற்றும் 70,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கீடு செய்து விட்டு, தேவையின் அடிப்படையில் மேலும் 40,000 கோடி ரூபாயை 2020 ஆம் ஆண்டு மாநிலங்களுக்குக் கொடுத்து செலவிட்டுள்ளது.
அது மட்டுமல்ல இந்த பேரிடர் காலத்தில் இதன் தேவையைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல ஆராய்ச்சிச் சஞ்சிகளில் வந்ததை பலர் சுலபமாக கடந்து விட்டனர்.
இந்த பேரிடர் காலத்தில் விளிம்பு நிலை மக்களுக்கும், பெண்களுக்கும் தலித்துக்களுக்கும் ஆதரவுக் கரம் நீட்டியது இந்தத் திட்டம்தான் என்பதை ஆதாரத்துடன் டவுன் டூ எர்த் என்ற ஆங்கில ஆராய்ச்சி சஞ்சிகை பல கட்டுரைகளை வெளியிட்டது.
எவ்வளவு பொதுச் சொத்துக்கள் இந்தத் திட்டம் மூலம் உருவாக்கியுள்ளது அது எவ்வாறு விவசாயத்துக்கு உதவுகிறது என்பதையும் கள ஆய்வின் மூலம் கொண்டு வந்துள்ளது.
அதேபோல் காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தில் எங்கள் துறையும் குஜராத்திலுள்ள இர்மா என்ற ஆராய்ச்சி நிறுவனமும் 12 மாநிலங்களில் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்து இதில் குறிக்கோளாக வைக்கப்படாத பல விளைவுகளை குறிப்பாக பெண்களை அதிகாரப்படுத்துவதில்,
குடும்பத்தில் பெண்கள் முடிவெடுப்பதில், கிராமசபையில் பெண்கள் பங்கேற்பதில் இந்தத் திட்டத்தால் என்னென்ன விளைவுகள் வந்தன என்பதை பட்டியலிட்டு, அறிக்கை மூலம் மத்திய அரசுக்கு சமர்ப்பித்தன.
அத்துடன் அமெரிக்காவிலுள்ள பிரௌன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன்ரோ பாஸ்டர் இந்தத் திட்டத்தால் கிராமப்புற உள்ளாட்சியில் ஆளுகையில் நடந்த மாற்றங்களை தன் ஆய்வின் மூலம் வெளிக் கொணர்ந்துள்ளார்.
எதிர்பார்க்காத வரவேற்கத்தக்க பல விளைவுகள் விளிம்புநிலை மக்களின் குடும்பங்களில் பெண்கள் மூலம் நடந்துள்ளன.
இந்தத் திட்டங்கள் வட மாநிலங்களுக்குத்தான் அதிக அளவில் பலனளித்திருக்க வேண்டும். அங்குதான் இந்தத் திட்டம் அதிகம் தேவைப்பட்டது.
ஆனால் இந்தத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்கள் தென்னிந்திய மாநிலங்கள் குறிப்பாக கேரளாவும், தமிழகமும் என்பதை நாம் மறுக்க இயலாது.
இந்தத் திட்டம் என்பது வெறும் வேலை தருவதும், பணம் தருவதும், பொதுச் சொத்தை உருவாக்குவது மட்டுமல்ல, இவைகளைத் தாண்டி பல உயரிய நோக்கங்கள் இந்தத் திட்டத்திற்கு இருக்கின்றன.
அவைகளை நாம் புரிந்துகொண்டு மக்களிடமும் அந்தப் புரிதலை ஏற்படுத்தி செயல்பட்டால் உலகை வியக்க வைக்கும் உன்னதத் திட்டமாக இந்தத் திட்டத்தை மாற்றிடலாம்.
இந்தத் திட்டம் வேலைவாய்ப்பு என்பதை உரிமையாக்கி சட்டத்தின் மூலம் தந்துள்ளது. வேலை எனது உரிமை வேலை, எனக்குக் கொடு, நான் செய்கிறேன், அது ஏழைகளின் உரிமை என கொடுக்கப்பட்டுள்ளது.
அதை நாமும் புரிந்து நம் மக்களும் புரிந்து கொண்டால் இதன் மகத்துவம் நமக்குப் புரியும். நம் உரிமையை நாமே பாழ்படுத்த மாட்டோம்.
அடுத்து வாழ்வாதாரத்தை பாதுகாப்பது இத்திட்டத்தின் நோக்கம். இந்தப் பணியின் மூலம் வாழ்வாதாரப் பாதுகாப்பு அடிநிலையில், விளிம்பு நிலையில் வாழும் மக்களுக்கு அளிக்க வேண்டும்.
மேலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் அதிகாரப்பரவலுக்கு வலுச் சேர்க்க வேண்டும். பஞ்சாயத்து அமைப்புக்கள் இதன் மூலம் வலுப்பெற வேண்டும். இதில் மக்கள் பங்கேற்பு உறுதி செய்ய வேண்டும்.
திட்டமிடும் பணி மக்கள் பங்கேற்போடு நடத்திட வேண்டும். இந்தப் பணியாளர்கள் மூலம் கிராமசபை நடவடிக்கைகள் மேம்பட வேண்டும்.
அடுத்து இந்தத் திட்டத்தின் மூலம் தரமான பொதுச் சொத்துக்கள் உருவாக்கப்பட்டு விவசாயத்திற்கு வலுச் சேர்க்க வேண்டும்.
நீர்நிலைகள் ஆழப்படுத்துவது, அகலப்படுத்துவது, வரத்துக் கால்வாய், போக்குக் கால்வாய் தூர்வாரப்பட்டு நீர்நிலைகள் வளப்படுத்தப்படல் வேண்டும்.
மண்ணை வளப்படுத்துவது, நீர் ஆதாரத்தை பாதுகாப்பது போன்ற பல்வேறு பணிகளை இதன் மூலம் செயல்படுத்தப்பட வேண்டும்.
இதன் மூலம் தோட்டக்கலை அபிவிருத்தி மற்றும் நில மேம்பாட்டுச் செயல்பாடுகளை நடத்திட வேண்டும். இன்னும் குறிப்பாக அதிக எண்ணிக்கையில் விவசாயத்தில் இருக்கும் விவசாயப் பணியாளர்களை விவசாயத்திலிருந்து வெளியேற்றி குறைந்த உற்பத்தியிலிருக்கும் விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்கும் நிலைக்கு கொண்டுவர வேண்டும்.
இந்தத் திட்டத்தில் செலவழிக்கப்படும் மொத்த தொகையும் யாருக்கு நேரிடையாகச் செல்ல வேண்டுமென்றால் ஒதுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு குறிப்பாக தலித்துக்கள், பெண்கள், ஆதரவற்றவர்கள் போன்றவர்கள் கைகளுக்குக் கிடைக்க வேண்டும்.
அப்படிக் கிடைக்கின்றபோது அந்தப் பணம் அவர்களுக்கு பல பாதுகாப்புக்களை வழங்கிடும். இவ்வளவு உன்னதமான அடிப்படைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம் இன்று மரத்தடியில் உட்கார்ந்து விட்டு பணம் வாங்கும் திட்டமாக சித்தரிக்கப்பட்டு பொதுப்பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது ஒரு சோக நிகழ்வு.
இந்தத் திட்டத்தில் ஊழல் இல்லாமல் இல்லை. இதற்கு யார் காரணம். மக்கள் ஏன் கேள்வி கேட்கவில்லை. இந்தத் திட்டத்திற்காக கோடிக்கணக்கில் செலவிடப்படும் பணம் மக்கள் வரிப்பணம்தானே. ஏன் அதை நம் மக்கள் கண்காணிக்க தவறுகின்றார்கள்.
நம் பஞ்சாயத்து தலைவர்களும் அரசு அதிகாரிகளும் இதை ஏன் முழுப்புரிதலுடன் செயல்படுத்தவில்லை என்பதுதான் அடிப்படையான கேள்வி. இதில் பல விதமான ஊழல்கள் இருக்கின்றன. அவைகள் களையப்பட வேண்டும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
ஒரு நிலையில் தமிழகம் இந்தத் திட்டத்தின் மூலம் பொதுச் சொத்துக்களை உருவாக்குவதில் சிரத்தையற்று இருந்தது.
தற்போது அது மாறி வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் இந்தத் திட்டம் தமிழகத்தில் ஓரளவுக்குச் சிறப்பாகச் செயல்படுவதைத்தான் ஆய்வுகள் உறுதி செய்கின்றன.
நாம் ஏதோ ஓரிரண்டு இடங்களில் நடைபெறும் தவறுகளின் அடிப்படையில் ஒட்டுமொத்த திட்டச் செயல்பாட்டின்மீது கருத்துச் சொல்வது என்பது ஆய்வுக் கருத்தாக முடிவுகள் எடுக்க எப்போதும் உதவிடாது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏறத்தாழ 30143 கோடி ரூபாய் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழக கிராமப்புறங்களில் செலவு செய்யப்பட்டுள்ளது.
சராசரியாக ஒரு கிராமப் பஞ்சாயத்தில் இந்தத் திட்டத்தின் மூலம் மட்டும் 2.4 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை அவ்வளவும் யாருக்குச் சென்றிருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
ஏழைகளுக்கும், தலித்துக்களுக்கும், பெண்களுக்கும், விளிம்பு நிலை மக்களுக்கும் இந்தத் திட்டப் பயன் சென்றிருக்கிறது.
இத்தனை கோடி ரூபாய் நம் பஞ்சாயத்தில் செலவு செய்யப்பட்டுள்ளது இந்தத் திட்டத்தில், என்றால் இந்தத் திட்டத்தால் உருவாக்கப்பட்ட சொத்து எங்கே என்று கேட்டிருக்க வேண்டும்.
நாம் குடிமக்களாக வாழாமல் பொதுமக்களாக வாழ்ந்து குறை சொல்லிப் பழக்கப்பட்டு விட்டோம், தவறை தட்டிக் கேட்க பொறுப்புள்ள குடிமக்களாக மாறி நாம் கேள்விகளை கிராமசபையினிலே கேட்டிருக்க வேண்டும்.
தற்போது ஒரு நிலையில் இதிலுள்ள குறைகள் களைவதற்கு நடிவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டி அவைகளைக் களைந்து சிறப்பாகச் செயல்பட முனைய வேண்டுமே தவிர அதற்கு மாறாக ஏழை எளிய மக்கள், குறிப்பாக விளிம்பு நிலை மக்கள் பயன்பெறும் ஒரு திட்டத்தை ஒழிக்க நாம் கருத்துக் கூறுவது அந்த மக்களுக்கு நம் இளைக்கும் பெரும் துரோகமாகும்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகுதான் குறைந்தபட்சக் கூலி என்பது பல மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்டது.
அதேபோல் சுதந்திர இந்தியாவில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமக் கூலி என்பது கிராமங்களில் கிடைத்தது இந்தத் திட்டம் வந்த பிறகுதான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இவற்றையும் தாண்டி இந்தத் திட்டத்தை கேரளாபோல் நகர்ப்புறங்களுக்கும் எடுத்துச் செல்ல இன்றைய அரசு தமிழகத்தில் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தில் இருக்கும் தவறுகளை திருத்த முனைய வேண்டும்.
இந்தத் திட்டம் பற்றி புரிதலுக்காக மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். கிராமசபை உறுப்பினர்கள் கிராமசபையில் கேள்வி கேட்க வேண்டும் திட்டச் செயல்பாடுகள் பற்றி. பஞ்சாயத்தைத் திட்டமிட வைக்க வேண்டும்.
அதுதான் நாம் ஏழை எளிய மக்களுக்கும் விளிம்பு நிலை மக்களுக்கும், பெண்களுக்கும், விவசாயத்துக்கும் செய்யும் நல்ல பணியாகும். இத்திட்டத்தை கைவிட வைக்க முனைவது அடித்தட்டு மக்களுக்கு இழைக்கும் அநீதியாகும்.
நன்றி: தினமணி