தலைமறைவுக் குற்றவாளிகள்; உச்சநீதிமன்றம் கண்டிப்பு!

உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் 2017-ல் நடந்த கலவரம் தொடர்பான வழக்கில், இருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். கலவரத்தைத் துாண்டுதல், கொலை முயற்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் 2018-ல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், குற்றம்சாட்டப்பட்ட இருவரும் காவல்நிலையத்தில் சரண் அடையாமல் தலைமறைவாகவே உள்ளனர். அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இவர்கள் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு 2019-ல் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “விசாரணை அமைப்புகளுடன் ஒத்துழைக்காமல் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கும் குற்றவாளிகளைக் காப்பாற்ற, நீதிமன்றம் முன்வராது” என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

You might also like