விடைபெற்றார் நெடுமுடி வேணு…!

கலைத்தாயின் தலைமகனை இழந்துவிட்ட வேதனையில் துடித்துக்கொண்டு இருக்கிறது மலையாள திரையுலகம்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மலையாள தரையுலகில் தோன்றி பல்வேறு பரிணாமங்களில் மிளிர்ந்த நெடுமுடி வேணுவின் மறைவு,மலையாள திரைப்பட ரசிகர்களின் மனதை வெகுவாக பாதித்துள்ளது.

கடந்த ஆண்டில் எஸ்.பி.பி மறைந்தபோது தமிழகத்தில், எத்தகைய இறுக்கம் இருந்ததோ, அத்தகைய இறுக்கத்தில் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் கேரள சினிமா ரசிகர்கள்.

நெடுமுடி வேணு என்ற பெயரில் பிரபலமான அவரது இயற்பெயர் கேசவன் வேணுகோபால்.

கேரளத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள நெடுமுடி என்ற ஊரில் 1948-ம் ஆண்டு மே 22-ம் தேதி இவர் பிறந்தார். நெடுமுடி வேணுவின் அப்பா கேசவன் நாயர் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர்.

அவரது அம்மாவும் ஆசிரியர்தான். நெடுமுடி வேணுவையும் சேர்த்து அவர்களுக்கு 5 மகன்கள். இதில் வேணுதான் கடைசிக் குழந்தை.

“என் பெற்றோருக்கு ஒரு மகள் இல்லையே என்ற ஏக்கம் அதிகமாக இருந்தது. பிற்காலத்தில் நாடகங்களில் பெண் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து,

அந்த ஏக்கத்தில் ஓரளவாவது நிறைவேற்றியுள்ளேன்” என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நெடுமுடி வேணு.

சிறுவயதிலேயே நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்ட நெடுமுடி வேணு, வீட்டுக்கு யாராவது விருந்தினர்கள் வந்தால், அவர்களைக் கூர்ந்து கவனிப்பாராம். அவர்கள் சென்றதும், அவர்களின் உடல் மொழியை அப்படியே நடித்துக் காட்டுவாராம்.

இதைப் பெற்றோரும், அவரது அண்ணன்களும் மிகவும் ரசித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் வீட்டுக்கு விருந்தாளிகள் வந்து சென்றதும், வேணுவை அழைத்து அவர்களைப் போல் நடிக்கச் சொல்வது வீட்டில் உள்ளவர்களுக்கு வாடிக்கையாகிப் போனது.

மகனுக்கு நடிப்பதில்தான் ஆர்வம் என்று தெரிந்ததும், கொஞ்சமும் தயங்காமல் அதை ஆதரித்துள்ளனர் நெடுமுடி வேணுவின் பெற்றோர். அவர்கள் தந்த உற்சாகம், நெடுமுடி வேணுவுக்குள் இருந்த கலைஞனை கொஞ்சம் கொஞ்சமாக உயிர்ப்பித்துள்ளது.

பிற்காலத்தில் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள எஸ்.டி கல்லூரியில் படிக்கும்போது சக மாணவரான இயக்குநர் பாசிலுடன் ஏற்பட்ட நட்பு, நெடுமுடி வேணுவை நாடக அரங்குக்குள் தள்ளியது. ஆரம்ப கட்டத்தில் இருவரும் இணைந்து நாடகங்களில் நடித்தனர்.

பிற்காலத்தில் நடிப்பதில் இருந்து மெல்லப் பின்வாங்கிய பாசில், நாடகங்களை இயக்க மட்டும் செய்துள்ளார். இந்நாடகங்களில் நெடுமுடி வேணுதான் நாயகன்.

இந்த நாடகங்களின் மூலம் கேரளாவின் பிரபல நாடக ஆசானான காவாலம் நாராயண பணிக்கரின் அன்பை நெடுமுடி வேணு பெற்றார்.

தனது நாடகங்களில் நடிக்க அவர் அழைக்க, எதைப் பற்றியும் யோசிக்காமல் அவருடன் இணைந்தார் நெடுமுடி வேணு.

அக்காலகட்டத்தில் நாடக நடிகர்களுக்கு பெரிய அளவில் வருவாய் கிடையாது. இக்காலகட்டத்தில் வருவாய்க்காக ‘கலாகவுமதி’ இதழில் செய்தியாளராக சேர்ந்தார் நெடுமுடி வேணு.

நாடக உலகில் இருந்து பிரபலமாகத் தொடங்க, பல மலையாள திரைப்பட இயக்குநர்களின் பார்வை இவர் மீது விழுந்தது. இதைத்தொடர்ந்து 1978-ம் ஆண்டில் இயக்குநர் அரவிந்தனின் ‘தம்பு’ என்ற படத்தில் நாயக அவதாரம் எடுத்தார் நெடுமுடி வேணு.

இத்திரைப்படம் வெளியான குறுகிய காலகட்டத்திலேயே பல சிறந்த கதாபாத்திரங்கள் அவரது கதவைத் தட்டின.

அடுத்த 2 ஆண்டுகளிலேயே ‘சாமரம்’ படத்துக்காக சிறந்த இரண்டாவது நடிகருக்கான மாநில அரசின் விருதையும், ‘விடபறயும் முன்பே’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான மாநில அரசின் விருதையும் வென்றார் நெடுமுடி வேணு.

இதைத் தொடர்ந்து பரதன், பாசில், பிரியதர்சன், சிபி மலயில் என பல மலையாள இயக்குநர்களுக்கும் பிரியமான நடிகராகிப் போனார் நெடுமுடி வேணு.

மம்முட்டி, மோகன்லால், சுரேஷ் கோபி, ஜெயராம் என்று எந்த பிரபல நடிகரின் படமாக இருந்தாலும், அதில் நெடுமுடி வேணுவும் ஒரு அங்கமாகிப் போனார். கிடைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் திரையில் அவர்களைவிட சிறந்த நடிப்பையும் வழங்கினார்.

நகைச்சுவை வேடமா, கர்நாடக இசைக்கலைஞரை அப்படியே திரையில் கொண்டுவர வேண்டுமா, மிரட்டும் வில்லன் வேடமா? எதுவாக இருந்தாலும் சரி… கூப்பிடுங்கள் வேணுவை என்று சொல்லும் அளவுக்கு திரையுலகம் முழுக்க அவரது ராஜ்ஜியம் நடந்தது.

’ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா’ படத்தின் உதயவர்ம தம்புரானின் மிடுக்கை வேறு யாராலும் அவர் அளவுக்கு கொண்டு வந்திருக்க முடியாது.

சங்கீத விற்பன்னர், மிடுக்கான மன்னர், மகனை இழந்த தந்தை என எல்லா அம்சங்களையும் தொட்டு வேணு நடித்த இந்த பாத்திரம் அவருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது.

இந்த விருதுடன் சேர்த்து 3 முறை தேசிய விருதைப் பெற்றுள்ளார் நெடுமுடி வேணு.

‘மின்னானிங்கின்டே நுறுங்கு வட்டம்’, ‘தேன்மாவின் கொம்பத்து’, ’தகரா’, ‘சித்திரம்’ என இவரது நடிப்பில் குதிரையேறிப் பறந்த படங்களின் பட்டியல் நீண்டது.

மலையாளம் மட்டுமின்றி தமிழ் திரைப்பட உலகிலும் தனக்கு கிடைத்த கதாப்பத்திரங்களை குறையின்றி செய்தார் நெடுமுடி வேணு.

செம்பை வைத்தியநாத பாகவதராக நடிக்கவேண்டும் என்பது நெடுமுடி வேணுவின் மிகப்பெரிய கனவாக இருந்தது. கடைசிவரை அது நிறைவேறவில்லை.

இருப்பினும் 1995-ல் வெளியான ‘மோகமுள்’ படத்தில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக் கொண்ட கதாபாத்திரத்தில் அந்த ஆசையில் சிறிய அளவையாவது அவரால் நிறைவேற்ற முடிந்தது.

இதேபோல் ‘இந்தியன்’ படத்தில் கமலுக்கு நிகராக ஆர்ப்பட்டம் இன்றி அமைதியாக இவர் ஏற்று நடித்த காவல் அதிகாரி வேடமும் பெரிய அளவில் பேசப்பட்டது.

சமீபத்தில்கூட நவரசாவில் ஒரு குறும்படத்தில் சிறப்பான வேடத்தில் நடித்திருந்தார் நெடுமுடி வேணு.

நடிப்பின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில், இவர் உயிரிழந்தது ரசிகர்களிடையே மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

எஸ்.பி.பி, நெடுமுடி வேணு ஆகிய இருவரின் மறைவிலும் சில ஒற்றுமைகளும் உள்ளன.

இருவரும் கொரோனாவில் இருந்து மீண்ட பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவால் இறந்துள்ளனர். இறப்புக்கு முன்னர் இருவரும் கடைசியாக கொரோனா விழிப்புணர்வு பாடலை பாடியுள்ளனர்.

இருவரின் மறைவும் திரையுலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை.

-பிரணதி

You might also like