– சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
சென்னை உயர்நீதிமன்றத்தில் எஸ்.ராஜா என்பவர் தொடர்ந்த வழக்கில், சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டத்தில் உள்ள வெள்ளாளகுண்டம் என்ற ஊரில் அரசு மற்றும் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான நிலத்தை அந்த ஊரைச் சேர்ந்த 9 பேர் ஆக்கிரமித்து, கட்டுமானங்களை உருவாக்கி, அவற்றை வாடகைக்கு விட்டுச் சம்பாதிக்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.
இந்த மனு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ‘‘அரசு நிலத்தை ஆக்கிரமித்தது மட்டுமல்லாமல், சட்டவிரோத கட்டுமானங்களை உருவாக்கி, அவற்றை அரசு நிறுவனங்களுக்கே வாடகைக்கு விட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இதை தொடர்ந்து அனுமதித்தால் பேராசைக்காரர்களும், குற்றவாளிகளும் சட்டத்தை கையில் எடுப்பார்கள். அரசு நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடனும், பொறுப்பை தட்டிக்கழித்தும் செயல்பட்டுள்ளனர்.
எனவே, வாடகைதாரர்களை காலிசெய்து, ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்க வேண்டும். அரசு நிலத்திற்கு ஏற்பட்ட சேதம் மற்றும் நிதி இழப்புகளை மதிப்பீடு செய்து, அவற்றை வசூலிப்பதற்கான சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணிகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்’’ என அரசுக்கு உத்தரவிட்டார்.