‘பட்டுக்கோட்டை’ என்னும் பாட்டுக் கோட்டை…!

சொட்டும் மழையில்
ஏழை துயர் கண்டவன்
எங்கள்
பட்டுக்கோட்டைக் கவிஞன்..
அவன்
ஏடெடுத்தால் தமிழ்
பாட்டெடுத்தால் எங்கள்
உள்ளம் எல்லாம் மயங்கும்..

சின்னப் பையலுக்கும்
சேதி சொல்வான் அவன்
செந்தமிழ் தேன்மொழி
பாட்டும் சொல்வான்…
தாயத்து விற்றொரு
பாட்டிசைப்பான் சிறைச்
சாலைக் கதவையும்
போட்டசைப்பான்..

காசு மிதிக்கின்ற
கதையைச் சொல்வான்..
நெஞ்சம்
துள்ளாமல் துள்ளிடும்
நிலையைச் சொல்வான்…

காதலின் தோல்வியை
கண்ணீரில் எழுதி
காற்றினிலே எங்கும்
தவழச் செய்வான்..

தில்லை நடராசர்க்கும்
பாட்டிசைத்தான் அவன்
தெருவோரக் குடிசைக்கும்
ஏடசைத்தான்…

உப்புக்கல்லைத்தான்
வைரமென்றே எண்ணி
ஒப்புவோர் கன்னத்தில்
அறை கொடுத்தான்..

துள்ளு தமிழிலே பொங்கி வரும் அவன்
தெம்மாங்கு பாட்டு – அதில்
அள்ளி எறிகின்ற
வார்த்தைகள் அனைத்தும்
தேனின் சுவைக் கூட்டு

சொட்டும் மழையில்
ஏழை துயர் கண்டவன்
எங்கள்
பட்டுக்கோட்டைக் கவிஞன்..
அவன்
ஏடெடுத்தால் தமிழ்
பாட்டெடுத்தால் எங்கள்
உள்ளம் எல்லாம் மயங்கும்..

You might also like