பனம்பழத்திற்கு ஒரு பாடல்…!
அமாவாசை இருள் பிரசவித்த
வட்ட கருப்பு நிலாவாக
விடியலில் உதிர்ந்து கிடக்கிறது
ஒரு பனம்பழம்
தீ மலர்ச் சுடருக்குள்
கனிவின் இனிமையைச் சூடிய
அதன் நறுவாசம்
மெதுவான முத்தத்தில் நிலைத்த
நீண்ட தித்திப்பாக
வயல்வெளியில் மணக்கிறது
நீரற்ற வெற்றுக்குளத்தை
கலையும் மழைமேகம்
மின்னல் ஒளிகளால் நிரப்புவது போல
காடெங்கும் நறுமணத்தை நிறைக்கிறது
விழுந்து கிடக்கும் பனம்பழம்
கருப்பு அழகியின் அதரங்களில்
மஞ்சள் புன்னகையாக முகிழ்த்த
பனம்பழ மணம் மீட்டும் நுண் இசை
விரிந்த கானகச் செவிகளில்
சொற்களற்ற பாடலாகையில்
படுத்திருக்கும் நீரோடையின்
அடிவயிற்றை சிலிர்ப்பூட்டுகிறது
இளங்காற்று
குறுங்காடெங்கும் தேடியலையும்
மாடுமேய்க்கும் சிறுவர்களின்
கண்களுக்கு தப்பிய பொன்னிற மணம்
நாற்று நடும் குமருகள்
புல்லறுக்கும் பேரிளம் பெண்கள்
சுள்ளி பொறுக்கும் முதிர் சிறுமிகள்
யாவர்க்கும் அரூப முத்தம் ஈந்து
கீதாரிக் குடில்களில்
ஆடுகளின் காம்புகளிலிருந்து
வெண்ணோசைகளை நுரைக்கவிடும்
இடைச்சிகளின் சுவாசத்தை அணைக்கிறது
திமிரும் வனப்புடன் அசைந்து நடக்கும்
மலைவாசிப் பெண் போல
காட்டு மரங்களிடையே
ஒயிலாக மிதந்து போகிறது
சுட்ட பனம்பழ மணம்
கானகத் திருவிழா தொடங்கியது
- கூத்தலிங்கம்