அற்புதமான உணர்வுகளின் தொகுப்பு!

நூல் வாசிப்பு:

திருவாரூர் மாவட்டத்தில் கண்கொடுத்தவனிதம் என்ற ஊரைச் சேர்ந்தவர் நூலாசிரியர் சுந்தரபுத்தன். வெவ்வேறு தருணங்களில் அவர் எழுதிய நான்கு புத்தகங்களின் தொகுப்புதான் இது எனப் பதிப்பாசிரியர் இளம்பரிதி குறிப்பிட்டுள்ளார்.

கற்பனைக் கடிதங்கள், மஞ்சள் பூக்கள் நிறைந்த தெரு, அழகின் வரைபடம், யானை பார்த்த சிறுவன் ஆகிய நான்கும் இணைந்துதான் இந்தப் புதிய புத்தகம் உருவாகியுள்ளது.

தான் ரசித்ததை, பார்த்ததை, படித்ததை, உணர்ந்ததைக் கடிதங்களாக எழுதியுள்ளார். சொற்சித்திரங்களாக எழுதியுள்ளார். பதிவுகளாகக் குறிப்பிட்டுள்ளார். இவை அனைத்தும் இணைந்து நம்மோடு ஒரு உயிர்ப்பான தருணங்களைப் பக்கம் தோறும் வழங்கிவருகின்றன.

ஒவ்வொரு கடிதமும் மிகவும் மனதிற்கு நெருக்கமான உணர்வுகளைக் கொடுக்கின்றன.

எல்லோருக்கும் கடிதம் எழுதியுள்ளார். கிராமத்திற்கு நலந்தானா என்று கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.

நெல்சன் மண்டேலாவுக்கு, பால்ய காலத்திற்கு, ஆங்கில ஆசிரியருக்கு, பில் கேட்சுக்கு, விவேகானந்தருக்கு இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒவ்வொரு கடிதமும் படிப்பதற்குச் சுவாரஸ்யமாக மிகவும் ரசனையாக வெவ்வேறு தளங்களுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார்.

ஒவ்வொரு கடிதத்திலும் அவரது ஆழ்ந்த ஞானம் புறப்படுகிறது. ஒவ்வொரு ஆளுமைகளையும் அவர் உள்வாங்கி முழுமையாக வாசித்துள்ளார். நாம் படிக்காத எத்தனையோ விஷயங்களை இந்த சிறுசிறு கடிதங்களின் வழியாக ஏராளமாக சுந்தரபுத்தன் நமக்குக் கொடுத்திருப்பது மிகவும் சிறப்பு.

இயல்பாகவே இன்றைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் விளைவாக மறைந்து போயிருக்கும் கடிதம் எழுதுதல் என்ற தகவல் தொடர்பு பழக்கத்தையும் எழுதிக் கடத்திய  அந்த உணர்வுகளையும் படிப்போருக்கு ஏக்கமாகவே உருவாக்கக்கூடிய ஒரு அழகான கடிதத் தொகுப்பை இந்த நூல் நமக்கு அளிக்கின்றது.

அடுத்தபடியாக பதிவுகள். மகிழம் பூக்கள் பூத்துக் கிடந்த வாசல், காட்டு மூங்கில் பாட்டுப் பாடும் புல்லாங்குழல் ஆச்சு, செக்கும் இல்லை செட்டியாரும் இல்லை இப்படி நிறையப் பதிவுகளை நமக்காகக்  கொடுத்துள்ளார்.

ஷோபா என்றொரு தேவதை என்ற தலைப்பில் பாலுமகேந்திரா அவர்களுடனான எழுத்தை நமக்கு அப்படியே கொடுத்துள்ளார். அதற்கான சந்திப்பு இருவருக்கும் ஏற்பட்ட உரையாடல்கள் சோபாவை குறித்து பாலுமகேந்திராவின் வெளிப்பாடு என்று எத்தனையோ சுவாரசியமான பதிவுகளைப்  பார்க்கலாம்.

சந்தித்த நபர்கள், சென்ற பயணங்கள், அந்த இடங்கள் குறித்து இவருக்கு உண்டான அனுபவங்கள், பெரும்பாலும் பயணங்கள் குறித்து இந்த பதிவுகளில் வெளிப்படுகிறது.

அதேபோல தன்னைச் சுற்றி இருக்கக்கூடிய மனிதர்கள், நண்பர்கள், பத்திரிகைத் துறையில், திரைத்துறையில் இவரோடு பயணித்தவர்கள் இவரோடு ஒரே அறையில் சென்னை வந்த புதிதில் தங்கியவர்கள் என்று பல வாரியாக  இன்று வளர்ந்துள்ள ஆளுமைகளைப் போகிற போக்கில் நமக்கு அறிமுகப்படுத்துகிறார்.

இவர் பயன்படுத்திய சைக்கிள் குறித்துக் கூட எழுதியுள்ளார். கிராமம் சார்ந்த நிகழ்வுகள் சினிமா எப்படி இன்று நம் கைக்குள்ளாக  இருக்கிறது. ஆனால் சினிமாவைத் தேடி மக்கள் சென்றார்கள் என்று அழகாகப் பதிவு செய்துள்ளார்.

அதேபோல முதல் வாழ்த்து, முதல் பூங்கொத்து என்று இவருடைய வாழ்க்கையில், இவரை உயிர்ப்புடன் வைத்துள்ள அத்தனை நினைவுகளையும் பெரும்பாலும் நாம் வாசிக்கும்போது நமக்கு அந்த உணர்வு ஏற்படும் வகையில் எழுதியது தான் நாம் ரசித்து வாசிப்பதற்குக் காரணம்.

ஒவ்வொரு பதிவுகளை வாசிக்கும் பொழுதும் நம்முடன் தொடர்பில் இருக்கக்கூடிய இந்த வாழ்க்கைமுறையை ஒப்பிட்டுப் பார்க்கும்படி ஒரு சின்ன சந்தோஷம்.

நாமும் நமது நினைவலைகளில் சற்று நேரம் பின்னோக்கிச் செல்லுதல் இப்படியான உணர்வுகளைத் தொடர்ந்து இவருடைய பதிவுகள் தருகின்றன.

இறுதியாகச் சொற் சித்திரங்கள்.  உலகப் புகழ்பெற்ற பல படங்களைக் குறிப்பிட்டு அவற்றுக்கான செய்திகளையும் கொடுக்கின்றார்.

யூரோ – அமெரிக்காவின் ஹவாய் தீவில் இருக்கக்கூடிய இந்த கலைஞர் தண்ணீரிலிருந்து பெண்கள் எழுந்துவருவது போன்ற ஓவியங்களை வரைவதில் சகலகலா வல்லவர் என்ற குறிப்பும், வரைந்துள்ள ஓவியம் குறித்தும் தருகிறார்.

சமூக ஊடகங்களின் பெருக்கம், கண்டது, கேட்டது, பார்த்தது என அனைத்தையும் யாரும் எழுதும் வாய்ப்பை திறந்துவிட்டிருக்கிறது. அதில் சிலர் எழுதுவதைத்தான் நம்மால் குறிப்பிட்டுச் சொல்ல முடிகிறது, ரசிக்கவும் முடிகிறது.

இயற்கையைப் பற்றிய, சமூக நிகழ்வுகளைப் பற்றிய, ஒரு நபரைப் பற்றிய எதுவாக இருந்தாலும், அதற்குள் அவர்கள் கரைந்து நம்மை அழைத்துச் சென்றுவிடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் சுந்தரபுத்தன் என்று ஊடகவியலாளர் வ.மணிமாறன் தனது கருத்தைப் பதிவு செய்கிறார். அதை நாமும் ஏற்போம்.

பல துறை வல்லுநர்களைக் குறித்து நிறையச் செய்திகளை அவை வெறும் செய்தியாக அல்லாமல் ஒரு அற்புதமான உணர்வுடன் அறிந்துகொள்ளக்கூடிய ஒரு தொகுப்பாக இந்த கடிதங்கள் பதிவுகள் சொற் சித்திரங்கள் அமைந்திருக்கிறது.

கடிதங்கள் பதிவுகள் சொற்சித்திரங்கள்சுந்தரபுத்தன்  

வெளியீடு: பரிதி பதிப்பகம், 56சி/ 128 பாரத கோயில் தெரு, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டம்விலை : ரூ 500

உமாமகேஸ்வரி கோபால்

You might also like