விவசாயிகளின் உயிர்களுக்கு இங்கு என்ன மதிப்பு?

ஊர் சுற்றிக் குறிப்புகள் :

*

விவசாயிகளை எந்த அளவுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் மதிக்கிறார்கள் என்பதைத் தோலில் சுடுகிற படி உணர்த்தியிருக்கிறது உத்திரப்பிரதேசத்தில் நடந்த சம்பவம்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்திய அளவில் உள்ள விவசாயிகள் எதிர்ப்புத் தெரிவிக்க ஆரம்பித்து ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

புது தில்லியில் பல்வேறு வடிவங்களில் போராட்டத்தை நடத்தினாலும், அரசு அவர்கள் போராடும் காரணத்தைக் களையத் தயாராக இல்லை.

இந்த நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களின் குரலுக்கு எந்த அரசும் எப்படிச் செவிசாய்க்கும் என்பதற்கு தமிழகத்தில் சென்ற ஆட்சியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமே சாட்சி.

கார்ப்பரேட் நிறுவனங்களில் இருப்பவர்களும் மனிதர்கள் தானே. அவர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பினால், குரலை எழுப்புகிறவர்களின் கதி என்னாகும் என்பதற்கு அண்மைச் சாட்சி உ.பி.யில் நடந்த கொடூரம்.

மத்திய உள்துறை இணையமைச்சரான அஜய்மிஸ்ராக்கு எதிராகக் கறுப்புக்கொடி காட்டத் திரண்டு நின்ற மக்களுக்கிடையில் இணையமைச்சரின் மகன் வந்த கார் மோதுகிறது. மோதுகிற காட்சிப் பதிவைப் பார்க்கிறபோது அதிர்ச்சியாக இருக்கிறது.

4 விவசாயிகள் உட்பட எட்டு பேரும், ஒரு பத்திரிகையாளரும் உயிரிழந்திருப்பதாக வெளிவரும் செய்திகள் பதற வைக்கும் ரகம் என்றால், நடந்திருக்கிற இந்தக் கொடூரத் தாக்குதலை மத்திய ஆளும்கட்சி ஆதரவாளர்கள் என்று தங்களை அடையாளப்படுத்துகிறவர்கள் அதை நியாயப்படுத்தும் விதம் இன்னும் கொடுமையாக இருக்கிறது.

உ,பி,யில் பலியானவர்களின் குடும்பங்களைப் பார்க்கச் சென்ற பிரியங்காவைத் தடுப்புக் காவலில் வைக்கிறார்கள். லக்னோ சென்ற ராகுல்காந்தியைத் தடுக்கிறார்கள். அவர் தர்ணாவில் ஈடுபடுகிறார். மத்திய, மாநில அரசைக் கடுமையாகச் சாடிய பிறகு அவரையும், பிரியங்காவையும் பார்க்க அனுமதிக்கிறார்கள்.

சர்வதேச ஊடகங்களில் பேசு பொருளாகின்றன இந்த அவலங்கள்.

இன்னும் முறையான நடவடிக்கை எடுக்க அரசு தயங்கிக் கொண்டிருக்கும் நிலையில், உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து இது குறித்து விசாரிக்க முன்வந்திருக்கிறது.

பலியான விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியை வெவ்வேறு மாநில அரசுகள் அறிவித்திருக்கின்றன என்றாலும், உச்சநீதிமன்றம் இந்தச் சம்பவம் குறித்த விளக்கத்தை உ.பி. அரசிடம் கோரியிருக்கிறது. இதற்கு எப்படிப்பட்ட பதிலை அந்த அரசு தரப் போகிறது?

கோட்சேவின் கொடூரத்தை நியாயப்படுத்துகிறவர்கள் தான் உ.பி. கொலைகளையும் நியாயப்படுத்துகிறார்கள்.

நீதிமன்றங்களும், ஊடகங்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை விட முக்கியமாக மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

  • யூகி
You might also like