– உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி புகழாரம்.
உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான்கு மிகப்பெரிய சாதனைகளை இந்தியா படைத்திருக்கிறது. போலியோவை அறவே ஒழித்துள்ளது. பேறுகால உயிரிழப்பை கணிசமாக குறைத்துள்ளது.
இதேபோல குழந்தைகள் உயிரிழப்பையும் குறைத்திருக்கிறது. நான்காவதாக உலக நாடுகளின் மருந்தகமாக இந்தியா உருவெடுத்து வருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளில் இந்தியா செய்த மாபெரும் சாதனைகளில் இதுவும் ஒன்றாகும்.
கொரோனா பெருந்தொற்றால் உலக நாடுகளில் அத்தியாவசிய சுகாதார சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்தப் பெருந்தொற்றால் சர்வதேச அளவில் காசநோய், தொற்று அல்லாத நோய்கள், குழந்தைகள் பராமரிப்பில் பெரும் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது.
எனவே வரும் மாதங்களில் எந்தெந்த சுகாதாரத் துறைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும்.
சுகாதார உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் கொரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.
அதோடு அடிப்படை சுகாதார சேவைகளையும் தங்கு தடையின்றி மேற்கொள்ள முடியும்.
யுனிசெப் அறிக்கையின்படி, இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மிகப்பெரிய பிரச்சினையாக நீடிக்கிறது. ஊட்டச்சத்து குறைபாட்டால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
பெருந்தொற்றால் எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையால் ஏராளமான குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே தள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை மேலும் அதிகமாகியுள்ளது.
குழந்தைகள் உயிரிழப்பு மட்டுமன்றி காசநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்பட ஊட்டச்சத்து குறைபாடு மிக முக்கிய காரணியாக உள்ளது.
இந்த நேரத்தில் ஊட்டச்சத்து பிரச்சினையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது” எனக் கூறினார்.