இந்தியாவை மிகக் குறைந்த காலமே ஆண்டிருந்தாலும், நிறைவாக ஆண்டவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் லால் பகதூர் சாஸ்திரி.
1964 முதல் 1966 வரை இந்தியாவின் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, இந்தியாவில் பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டவர்.
சாஸ்திரியின் பிறந்தநாளான இன்று அவரைப் பற்றிய சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம்:
உத்தரப் பிரதேசத்தில் உள்ள முகல்சராய் எனும் ஊரில் 1904-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி லால் பகதூர் சாஸ்திரி பிறந்தார்.
அவரது ஊரில் போதுமான அளவுக்கு பள்ளிகள் இல்லாததால், புத்தகங்களைத் தலையில் கட்டிக்கொண்டு தினமும் இருவேளை ஆற்றில் நீந்திச் சென்று கல்வி கற்றார்.
ஜாதி, மதங்களில் நம்பிக்கை இல்லாத மனிதராக லால் பகதூர் சாஸ்திரி இருந்தார். அதனால் சிறுவயது முதலே ‘வர்மா’ என்ற தனது ஜாதிப் பெயரை தன் பெயருடன் சேர்த்துக்கொள்ள மறுத்தார்.
பின்னாளில் காசி வித்யாபீடில் தத்துவம் பயின்ற அவருக்கு சாஸ்திரி என பட்டம் அளிக்கப்பட்டதால், அதை தன் பெயருக்குப் பின் சேர்த்துக்கொண்டார்.
ஜாதிக் கொடுமைகளைப் போலவே வரதட்சணை வாங்கும் சம்பிரதாயத்துக்கும் லால் பகதூர் சாஸ்திரி எதிராக இருந்தார்.
தனது திருமணத்தின்போது மனைவியின் வீட்டிலிருந்து வரதட்சணையாக எதையும் வாங்கக் கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
கடைசியில் அவரது மாமனார், எதையாவது வாங்கித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தியதால் சில மீட்டர் கதர் துணிகளை திருமணப் பரிசாக வாங்கிக் கொண்டார்.
லால்பகதூர் சாஸ்திரி சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருந்த காலத்தில், அவரது குடும்பத்துக்கு மாதந்தோறும் ரூ.50 உதவித்தொகை வழங்கப்பட்டது.
அவரது மனைவி சிக்கனமாக செலவுசெய்து அதில் 10 ரூபாயை மிச்சப்படுத்தினார். இந்தத் தகவலை சாஸ்திரியிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்காக மனைவியைப் பாராட்டுவதை விட்டுவிட்டு, தன் குடும்பத்தின் தேவைக்கு அதிகமாக உதவித் தொகை வழங்கியதற்காக ‘சர்வண்ட்ஸ் ஆஃப் பீப்பிள்’ அமைப்பை திட்டினார்.
தங்கள் குடும்பத்துக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.40 வழங்கினால் போதும் என்று கடிதம் எழுதினார்.
இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு முதலில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக லால் பகதூர் சாஸ்திரி நியமிக்கப்பட்டார்.
இந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு சம உரிமையை அளிக்கும் முயற்சிகளில் ஒன்றாக பேருந்துகளில் நடத்துநர் வேலைக்கு பெண்களையும் நியமிக்க உத்தரவிட்டார்.
பெண்கள் வேலைக்கு செல்வதைப் பாவமாக கருதிய அந்தக் காலத்தில் மிகப்பெரிய புரட்சியாக இது கருதப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் போலீஸ் துறை அமைச்சராக இருந்த காலத்தில், அத்துறையிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தினார்.
முக்கியமாக போராட்டங்களில் பங்கேற்பவர்களை தடியடி மூலம் கலைப்பதை தவிர்த்து, தண்ணீரை பீய்ச்சியடித்து கலைக்கும் முறையை அந்தக் காலத்திலேயே அமல்படுத்தினார்.
இந்தியாவின் பிரதமராக பதவி வகித்த காலத்திலும், தனக்கென்று ஒரு கார்கூட வைத்துக் கொள்ளவில்லை.
‘நமக்கென்று ஒரு காரை வாங்கவேண்டும்’ என்று குடும்பத்தினர் வற்புறுத்திய நிலையில் ஒரு பியட் காரை வாங்க ஏற்பாடு செய்யுமாறு உதவியாளர்களிடம் கூறினார்.
அப்போது பியட் காரின் விலை ரூ.12 ஆயிரம். ஆனால் சாஸ்திரியிடம் ரூ.7 ஆயிரம்தான் இருந்தது. இதைத்தொடர்ந்து மீதித் தொகைக்கு வங்கியில் கடன் வாங்கினார்.
பிற்காலத்தில் சாஸ்திரி மறைந்த பிறகு அந்தக் கடனை அடைக்க அரசு முன்வந்தது. ஆனால் அவரது குடும்பத்தினர், அந்தக் கடனை தாங்களே அடைப்பதாக கூறினர்.
1965-ல் காஷ்மீர் பிரச்சினையைக் காரணம் காட்டி இந்தியாவின் சில பகுதிகளில் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க உத்தரவிட்டார் சாஸ்திரி.
இதைத்தொடர்ந்து நடந்த போரில், பாகிஸ்தானின் சில பகுதிகளை இந்திய ராணுவம் கைப்பற்றியது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக தாஷ்கண்ட் சென்ற நிலையில் அங்கு காலமானார்.
லால் பகதூர் சாஸ்திரி, மாரடைப்பால் காலமானதாக அதிகாரபூர்வ தகவல் வெளியிடப்பட்டாலும், அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்னும் பல்வேறு செய்திகள் வெளியாகி வருகின்றன.
– பிரணதி