மாணவர்களின் வீடுகளுக்கே சென்று கற்பிக்கும் திட்டம்!

– தமிழக பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் நவம்பர் 1 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலால் கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டாலும், சில மாணவர்களுக்கு கற்றல் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அரசுப்பள்ளி மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்குவதற்கு ரூ.200 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அதே நேரம் கற்றல் குறைபாடுகளுக்குத் தீர்வு காணவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியைக் குறைக்க ‘மக்கள் பள்ளி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் தினமும் ஒன்றரை மணி நேரத்திற்கு மாணவர்களுக்கு வீடு தேடிச் சென்று கற்பிக்கப்பட உள்ளது.

இந்தத் திட்டம் குறித்து கிராம சபைக் கூட்டங்களில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விவாதிக்கப்பட உள்ளது.

மக்கள் பள்ளி திட்டம் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காக செயல்படுத்தப்பட உள்ளதாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குனர் சுதன் தெரிவித்துள்ளார்.

You might also like