கோப்பையை நெருங்கிய சென்னை சிங்கங்கள்!

சிங்கங்கள் மிகவும் ஆபத்தானவை. அதிலும் அடிபட்ட சிங்கங்கள் மிக மிக ஆபத்தானவை. ஒருமுறை அடிபட்டுவிட்டால் மிகவும் கவனமாகிவிடும்.

எங்கே தவறு செய்தோம் என்பதைப் பற்றியும், தாம் எங்கே கவனக்குறைவாக இருந்தோம் என்பதைப் பற்றியும் தீவிரமாக யோசித்து பதிலைக் கண்டுபிடிக்கும்.

தன்பிறகு எதிராளியை கடுமையாகத் தாக்கும். இந்தத் தாக்குதலை எதிராளிகளால் சமாளிக்கவே முடியாது.

அந்த சிங்கத்தின் முகத்தை தங்கள் உடையின் லச்சினையாகக் கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸும் அப்படித்தான். ஒருமுறை அடிபட்டால், அடுத்த முறை ஆவேசமாக தாக்கும் குணம் இந்த அணிக்கு உண்டு.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர் தோல்விகளால் துவண்டு, கடைசி 4 அணிகளில் ஒன்றாக குன்றிப்போனது சென்னை சூப்பர் கிங்ஸ். ஐபிஎல் தொடரில் அதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடையாத வீழ்ச்சி அது.

அப்போதும் சென்னை சிங்கங்களின் கேப்டனான தோனி கலங்கவில்லை.

“எங்கள் அணி இன்னும் சிறந்த அணிதான். இந்த முறை நாங்கள் தோற்றுப் போயிருக்கலாம். ஆனால் அடுத்த முறை வலிமையாக திரும்பி வருவோம்.

எங்கெல்லாம் தவறு செய்தோம் என்பதை கண்டறிந்து, அதைத் திருத்திக் கொண்டு வருவோம். இதற்கெல்லாம் சேர்த்து அடுத்த தொடரில் வெற்றிபெறுவோம்” என்று கர்ஜித்தார்.

அப்போது யாரும் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தோல்வியடைந்த ஒரு தலைவனின் சால்ஜாப்பாகவே அதைப் பலரும் பார்த்தார்கள். ஆனால் அப்போது தான் பேசியது வெட்டிப் பேச்சல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் தோனி.

மற்ற அணிகள் எல்லாம் ஐபிஎல் புள்ளிப் பட்டியலில் நொண்டி அடித்துக்கொண்டிருக்க, 18 புள்ளிகளைப் பெற்று முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது சென்னை அணி. வெற்றிக் கோப்பையை நெருங்கியுள்ளது. இனி அடுத்த இலக்கு ஐபிஎல் கோப்பைதான்.

பந்துவீச்சு, பீல்டிங் ஆகிய 2 துறையிலும் சொதப்பிக்கொண்டு இருக்கும், ‘டாடீஸ் ஆர்மி’ என்று தோனியாலேயே விமர்சிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் இந்த உயரத்தை எப்படி எட்ட முடிந்தது என்பதே பலரது கேள்வியாக உள்ளது. இதற்கு ஒரே பதில் கூட்டு முயற்சி.

இப்போதைய சென்னை அணியில் தனிப்பட்ட முறையில் யாரும் பெரிய ஆள் இல்லை. கோலி, ரோஹித் சர்மா, பும்ரா, ஸ்ரேயஸ் ஐயர், ரிஷப் பந்த் போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லை. ஆனால் பல ஆண்டுகளாக ஒரே குழுவாக ஒட்டிக்கிடந்த ஒற்றுமை உணர்வும், குழு முயற்சியும் இருந்தது.

கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி கட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்த ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இம்முறை தொடக்க ஆட்டக்காரராக தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட, சிக்கென்று பிடித்துக் கொண்டார்.

அவரை மையமாக வைத்து பப் டுபிள்ஸ்ஸி, மொயின் அலி, ரெய்னா ஆகியோர் வலுவான பேட்டிங் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.

அந்த அடித்தளத்தை வைத்துக்கொண்டு ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பை ராயுடு, ரவீந்திர ஜடேஜா, பிராவோ ஆகியோர் பார்த்துக்கொண்டனர்.

பந்துவீச்சில் பெரிய மாயாவிகள் என்று யாரும் சென்னை அணியில் இல்லைதான். ஆனால் ஷர்துல் தாக்குர், தீபக் சாஹர், ஹசல்வுட், ஜடேஜா, பிராவோ உள்ளிட்டோர் எதிராளிகளுக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் சிக்கனமாக பந்துவீசினர்.

ஆர்ப்பாட்டமாக பவுன்சர்களையும், யார்க்கர்களையும், கூக்ளிகளையும் வீச முடியாவிட்டாலும் ஸ்டம்பை நோக்கி துல்லியமாக பந்துவீசி எதிராளிகள் அசரும் வரை காத்திருந்து விக்கெட்களை வீழ்த்தினர்.

எல்லாவற்றுக்கும் மேலாக தங்களால் வெற்றிபெற முடியும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் இருந்தனர்.

கடந்த தொடர்களைப் போல் இந்தத் தொடரில் தோனி அனாயாசமாக பேட்டிங் செய்யவில்லைதான். அவரது பேட்டில் பட்டு சிக்சருக்கும், பவுண்டரிக்கும் பந்துகள் தெறிக்கவில்லைதான்.

ஆனால் ஸ்டம்புக்கு பின்னால் நின்று சிங்கப் படைக்கான வியூகங்களை வகுத்துக் கொடுத்தார்.

இதனால் மகாபாரதத்தில் கிருஷ்ணர் ஆயுதம் எடுக்காமலேயே பாண்டவர் படை வென்றதைப்போல, ஐபிஎல் போரில் தோனி அதிகம் ஆடாமலேயே சென்னை படை வெற்றிகளைக் குவித்தது.

அவரது கண்ணசைவில் மற்ற வீரர்கள் வெற்றிகளைக் குவித்து வருகிறார்கள்.

இதே வேகத்தில் சென்னை சிங்கங்கள் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் ஆசை. தோனியின் படை இதையும் முடிக்கும் என்று எதிர்பார்ப்போம்.

– பிரணதி

You might also like