இந்தியாவுக்கு காபி வந்த கதை!

இன்று சர்வதேச காபி தினம்.

ஏமன் நாட்டில் கிபி 15-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட காபி, இன்றைய தினம் உலகின் முன்னணி பானங்களில் ஒன்றாக உள்ளது.

உலகில் பலருக்கு காலையில் காபி குடிக்காவிட்டால் எந்த வேலையும் ஓடாது. இதனாலேயே உலகில் நாளொன்றுக்கு 2 பில்லியன் கப்களும் மேல் காபி அருந்தப்படுவதாக கூறப்படுகிறது.

அதிலும் நம் ஊர்க்காரர்களைவிட அமெரிக்கர்கள் காபி மீது அதீத மோகம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

அந்நாட்டு மக்கள் ஆண்டுதோறும் காபிக்காகவே சராசரியாக ஆயிரம் டாலர்களுக்கு மேல் செலவழிப்பதாக கூறப்படுகிறது.

இப்படி உலகையே மயக்கும் சுவைமிகுந்த பானமான காபியை விளைவிக்கும் விவசாயிகளைப் பற்றி நினைப்பதற்காகவும், அவர்களின் வாழ்க்கையைப் பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவுமே அக்டோபர் 1-ம் தேதியை சர்வதேச காபி தினமாக சர்வதேச காபி அமைப்பு 1963-ம் ஆண்டில் அறிவித்தது.

ஆரம்பத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் தோன்றிய காபி, பின்னர் ஐரோப்பியாவுக்கு சென்று, அதன் பிறகுதான் இந்தியாவுக்கு வந்தது என்று சொல்லப்படுகிறது.

இப்படி இந்தியாவுக்கு லேட்டாக வந்தாலும், இன்றைய தினம் இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் முக்கிய விஷயங்களில் ஒன்றாக காபி உள்ளது.

காபி உற்பத்தியில் உலக அளவில் 6-வது இடத்தில் இந்தியா உள்ளது.

பிரேசில், வியட்நாம், இந்தோனேசியா, கொலம்பியா, எத்தியோப்பியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் காபி விளைகிறது.

இந்தியாவில் அதிகம் விளையும் காபி, இங்கு வந்ததே ஒரு சுவாரஸ்யமான கதையாக உள்ளது. 17-ம் நூற்றாண்டில் ஒரு சிறு திருட்டின் மூலம்தான் இந்தியாவுக்குள் காபி நுழைந்ததாக கூறப்படுகிறது.

1670-ம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பாபா புடான் என்பவர் வளைகுடா நாடுகளுக்கு புனித யாத்திரை சென்றுள்ளார். அப்படி சென்றுவிட்டு இந்தியா திரும்பும்போது ஏமன் நாட்டுக்கு சென்ற அவர், அங்கு காபி குடித்துள்ளார்.

அது அவருக்கு மிகவும் பிடித்துப்போக, ஒருசில காபிக் கொட்டைகளை யாருக்கும் தெரியாமல் பையில் போட்டு கொண்டுவந்துள்ளார்.

தனக்கு பிடித்த காபியை இந்தியாவில் விளையவைக்கும் முயற்சியாக கர்நாடகாவின் சந்திரகிரி மலைத்தொடரில் விதைத்துள்ளார்.

முதலில் அது விளையும் என்பதில் அவருக்கு பெரிய நம்பிக்கை இல்லை. ஒரு முயற்சி அளவில்தான் அவர் அதைச் செய்துள்ளார். ஆனால் அந்த முயற்சி பயன் அளித்துள்ளது. அந்த விதைகள் முளைத்துள்ளன. இப்படியாக இந்தியாவுக்கு முதல் முறையாக காபி வந்துள்ளது.

இருப்பினும் இந்தியாவில் காபி வேகமாக பரவ முக்கிய காரணமாக ஆங்கிலேயர்கள்தான் இருந்துள்ளனர். அவர்கள்தான் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரோபஸ்டா மற்றும் அராபிகா வகை காபி பயிர்களை நட்டு தங்கள் நாட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

1907-ம் ஆண்டில் இந்திய காபி வாரியத்தை அமைத்த ஆங்கிலேய அரசு, இந்தியாவின் கூர்க் உட்பட பல்வேறு இடங்களில் காபித் தோட்டங்களை அமைத்தது.

ஆங்கிலேயர் மூலம் காபியின் சுவையை அறிந்த இந்தியர்கள் பின்னர் அதன் சுவைக்கு அடிமையாகி உள்ளனர்.

பின்னர் ஆங்கிலேயர்கள் நம் நாட்டில் இருந்து சென்றாலும் காபிக்கு அடிமையான இந்தியர்கள் காபியை திருப்பி அனுப்பவில்லை.

இந்தியாவில் பல இடங்களில் காபித் தோட்டங்கள் உருவாகின.

2012-14-ம் ஆண்டுகளில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் 4.10 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் காபி விளைவிக்கப்படுகிறது.

கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் காபி உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் முதன்மையான மாநிலங்களாக உள்ளன.

இப்படியாக இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாத அம்சமாக காபி உருவெடுத்து நிற்கிறது.

– பிரணதி

You might also like