‘மாற்று’ நோபல் பரிசுக்கு இந்தியத் தொண்டு நிறுவனம் தேர்வு!

அறிவியல், பொருளாதாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் உலக அமைதிக்காக உழைப்போருக்கு உலகின் தலைசிறந்த நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இந்தப் பட்டியலில் மனித வாழ்வுரிமைக்காக பாடுபடுவோரையும் சேர்க்க வேண்டும் என எண்ணிய ஐரோப்பாவின் ஸ்வீடனைச் சேர்ந்த ஜேக்கப் வோன் உக்ஸ்கல், 1980ல் ஸ்வீடன் வாழ்வுரிமை அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஆண்டுதோறும் ‘வாழ்வுரிமை விருது’ வழங்க ஏற்பாடு செய்தார்.

இது மாற்று நோபல் பரிசாக கருதப்படுகிறது. சிறார் பாதுகாப்பு முதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த பாடுபடுவோருக்கு இந்த வாழ்வுரிமை விருது வழங்கப்படுகிறது.

இந்தாண்டு விருதுக்கு, இந்தியாவைச் சேர்ந்த ‘லைப்’ எனப்படும் வனம் மற்றும் சுற்றுச்சூழல் சட்ட நடவடிக்கை அமைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2005ல் வழக்கறிஞர்களான ரித்விக் தத்தா, ராகுல் சவுத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு சட்டரீதியாக தீர்வு கண்டு வருகிறது.

கனடாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பிரெடா ஹசன், பெண்களின் மீதான பாலியல் கொடுமைக்கு எதிராக போராடும் கேமரூனைச் சேர்ந்த மார்த்தே வான்டோ, ரஷ்யாவின் சுற்றுச் சூழல் ஆர்வலர் விளாடிமிர் ஸ்லிவ்யக் ஆகியோருக்கும் இந்தாண்டின் வாழ்வுரிமை விருது வழங்கப்படுகிறது.

ஸ்வீடனில் டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் விழாவில், நால்வருக்கும் தலா 85 லட்சம் ரூபாய் பரிசுடன் பதக்கம் வழங்கப்பட உள்ளது.

You might also like