காங்கிரசுக்குத் தலைவர் இல்லை; முடிவெடுப்பது யார்?

கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததையடுத்து, கடந்த 2019 மே மாதம் கட்சித் தலைவர் பதவியிலிருந்து ராகுல்காந்தி விலகினார்.

அதைத் தொடர்ந்து சோனியாகாந்தி இடைக்காலத் தலைவராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார்.

2 ஆண்டுகள் கடந்தும் இன்னும் காங்கிரஸ் கட்சியில் தேர்தல் நடத்தி புதிய தலைவர் தேர்வு செய்யப்படவில்லை.

சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராகத் தொடர்கிறார். இது தற்போது பிரச்சினையாகி இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் முறைப்படி தேர்தல் நடத்தி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் உள்பட 23 பேர், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியும் எந்தப் பலனும் இல்லை.

ஆனாலும் கட்சியில் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாகப் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் கபில் சிபல், “காங்கிரஸ் கட்சியில் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் இல்லை. இது நமக்கு தெரியும்.

ஆனால் கட்சியில் யார் முடிவு எடுக்கிறார்கள் என்பது தெரியவில்லை. 23 தலைவர்களும் ‘ஆமாம் சார்’ போடுகிறவர்கள் அல்ல. நாங்கள் கட்சியில் நீடிக்கிறோம். ஆனால் கட்சியில் சீ்ர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

நாங்கள் எந்த ஒரு தனிநபருக்கும் எதிரானவர்கள் அல்ல.

நாங்கள் கட்சியில் இருக்கிறோம். கட்சியில் என்ன நடந்தாலும் காரியக் கமிட்டியில் வைத்து விவாதிக்க வேண்டும் என்கிறோம்.

பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். கட்சியை வலுப்படுத்தினால்தான் இது நடக்கும்” எனக் கூறியுள்ளார்.

கபில் சிபலின் இந்தக் கருத்துகள் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

You might also like