பயங்கரவாத விவகாரம்: இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்!

ஐ.நா. பொதுச் சபையின் 76-வது கூட்டத்தில் ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசினார்.

இதையடுத்து பேசிய ஐ.நா.வின் இந்திய முதன்மைச் செயலர் சினேகா துாபே, “இந்தியாவின் அங்கமான காஷ்மீர் குறித்து பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தான், ஐ.நா. சபையில் பேசக் கூடாது.  காஷ்மீரில் ஆக்கிரமித்துள்ள அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பாகிஸ்தான் வெளியேற வேண்டும்.

பயங்கரவாதிகளை சுதந்திரமாக நடமாடவிட்டு அவர்களுக்கு ஆயுதம், நிதியுதவி ஆகியவைகளை வழங்கும் பாகிஸ்தான், பயங்கரவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்து, இரட்டை வேடம் போடுகிறது” எனக் கூறினார்.

இதனிடையே இது தொடர்பாக பேசிய ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியா குட்டரசின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், “ஐ.நா., பொதுச் சபையில் இந்தியா – பாகிஸ்தான் தரப்பு வாதங்களைக் கேட்டோம்.

அவற்றின் தொனியும், தெரிவித்த கருத்துகளும் கடுமையாக இருந்தன. இருந்தாலும் இரு நாடுகளும் பிரச்னைகளைப் பொதுவெளியில் பேசாமல், தனித்துப் பேசி தீர்த்துக் கொள்ளும் என நம்புகிறோம்” எனக் கூறினார்.

காஷ்மீர் குறித்து ஐ.நா.,வில் பல முறை பாகிஸ்தான் பேசியுள்ள போதிலும், அதற்கு உறுப்பு நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like