நடுவன் – இன்னொரு ‘காளிதாஸ்’?!

’வித்தியாசமாகப் பேர் வைக்கிறேன் பேர்வழி’ என்று கதைக்குச் சம்பந்தமில்லாமல் ‘டைட்டில்’ வைப்பவர்கள் ஒருபக்கம்; வைக்கப்பட்ட டைட்டிலுக்காக கதையை இழுப்பவர்கள் ஒரு பக்கம் என்று அல்லாடிக் கொண்டிருக்கும் சினிமாவில், அற்புதமான ஒரு சொல்லாடலை தவறான வகையில் அமைக்கப்பட்ட திரைக்கதைக்குச் சூட்டியிருக்கிறது ‘நடுவன்’ குழு.

நடுவன் என்றால் இரு தரப்புக்கும் பொதுவானவன் என்று அர்த்தமாம். படத்தின் கதையிலோ, பொதுவான தரப்பு என்ற ஒன்று மருந்துக்கு கூட இல்லை.

சோனி லிவ் தளத்தில் ‘நடுவன்’ திரைப்படம் காணக் கிடைக்கிறது.

புளித்துப்போன கதை!

தனது மனைவிக்கும் நண்பனுக்கும் இடையே ’திருட்டுத்தனமான காதல்’ ஊடாடுவதைக் கண்டுபிடிக்கும் கணவனின் ரௌத்திரமே ‘நடுவன்’ படத்தின் மையம்.

ஆனால், தினசரிகளில் நான்கு பத்தியளவில் இடம்பெறும் செய்திகளில் கூட ஏதேனும் புதிய விஷயம் இருக்கும் என்றளவிலேயே, இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பார்வையாளர்களுக்கு முழுக்கதையும் மிக எளிதாகத் தெரிந்து விடுகிறது. ஆனாலும், வித்தியாசமான ஏதோ ஒன்று காத்திருக்கிறது என்பது போலவே காட்சிகள் விறுவிறுவென்று நகர்கின்றன.

ஒரு கட்டத்தில் பொறுமை காக்க முடியாமல் ‘ஏதாச்சும் புதுசா வச்சிருக்கீங்களாப்பா’ என்று பார்வையாளர்கள் வெகுண்டெழ, அதனை ஈடு செய்யும் விதமாகத் திரையிலும் ஹீரோ எழுச்சியடைந்து தன்னைச் சாய்க்க முயல்பவர்களைப் போட்டுத் தாக்குகிறார்.

‘அப்பாடா ஏதோ இருக்கு’ என்று பின்னால் சாய்ந்து உட்கார்ந்தால், அதற்குள் படம் முடிந்து விடுகிறது.

இதற்கும் ‘நடுவன்’ என்ற டைட்டிலுக்கும் என்னடா சம்பந்தம் என்று யோசித்தால், ’படம் நல்லாயிருக்கா இல்லையா’ என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் அளிக்காமல் நடுவாந்தரமாக நாம் நிற்பதையே டைட்டில் குறிக்கிறது என்பது பிடிபடுகிறது.

இன்னொரு ’காளிதாஸ்’?!

2019இல் வெளியான ‘காளிதாஸ்’, பரத்தின் கேரியருக்கு புத்துயிர் ஊட்டியது. கிட்டத்தட்ட அதே பாணியில் ’நடுவன்’ படத்தைத் தர முயன்றிருக்கிறார் இயக்குனர் சாரங்க். ஆனால், அதற்கும் இப்படத்திற்கும் நிறையவே வித்தியாசமிருக்கிறது.

கணவனோடு சரியான புரிதல் இல்லாத காரணத்தால், எங்கே தனக்கு இன்னொரு ஆடவனோடு உறவு ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தில் ஒரு பெண் மனச்சிதைவுக்கு ஆளாவதுதான் ‘காளிதாஸி’ன் மையக் கதை.

மனைவியைச் சரிவர புரிந்துகொள்ளாமலும், அவர் மீது அக்கறை காட்டாமலும் இருந்து விட்டோமே என்று கணவன் குற்றவுணர்வு கொள்வதுடன் அப்படம் முடிவடையும்.

‘நடுவன்’ படமோ அதற்குத் தலைகீழாக இருக்கிறது.

மனைவியையும் குழந்தையையும் கவனிக்காமல் எந்நேரமும் ’வேலை வேலை’ என்று பணத்தின் பின்னால் திரியும் நாயகன், மனைவியின் துரோகமறிந்து ‘பழிக்குப் பழி’ வாங்க முயல்வதாகக் கதை நகர்கிறது.

மருந்துக்கு கூட, மனைவியின் மனநிலை என்னவென்பது இத்திரைக்கதையில் விவரிக்கப்படவே இல்லை.

இந்த ஒரு வித்தியாசம்தான், ‘நடுவன்’ திரைப்படம் இன்னொரு ‘காளிதாஸ்’ ஆகும் வாய்ப்பைத் தட்டி விட்டிருக்கிறது.

பயனில்லா உழைப்பு!

கார்த்திக் பாத்திரத்தில் பரத், அவரது நண்பர் சிவாவாக கோகுல் ஆனந்த், மதுவாக நடித்திருக்கும் அபர்ணா வினோத் ஆகிய மூவரைச் சுற்றியே கதை நகர்கிறது.

காட்சிகளின் நம்பகத்தன்மையை அதிகப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது இவர்களது நடிப்பு.

ஆனால், பரத்துக்கும் கோகுல் ஆனந்துக்கும் திரைக்கதையில் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் அபர்ணாவுக்குச் சரியான அளவில் கிடைக்கவில்லை. குழந்தை நட்சத்திரம் ஆராத்யா ஸ்ரீ எளிதாக நம் மனதோடு ஒட்டிக்கொள்கிறது.

இன்ஸ்பெக்டராக வரும் யோக் ஜேப்பி, குருவாக வரும் அருவி பாலா, அவரது நண்பர்களாக வரும் தாசரதி, சுபர்ணன், சுரேஷ் ராஜு உட்பட அனைவரும் காட்சிக்கேற்ற நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

யுவாவின் ஒளிப்பதிவும் சன்னி சவ்ரவின் படத்தொகுப்பும், குளிர் நிறைந்த பிரதேசத்தில் இறுக்கமாக நகரும் திரைக்கதைக்குச் செறிவூட்டுகிறது.

தரண் குமாரின் இசையில் பாடல்கள் ‘ஓகே’ ரகம் என்றால், பின்னணி இசை அதைவிட ஒரு படி மேலே அமைந்திருக்கிறது.

தொழில்நுட்ப அம்சங்கள், நடிப்பு, காட்சியாக்கம் என்று எல்லாமே திரையில் அருமையாக ஒருங்கிணைக்கப்பட்டிருந்தாலும், கதையின் மூலமாக பார்வையாளர்கள் என்ன உணர்வைப் பெறுவார்கள் என்பதை யோசிக்க மறந்திருக்கிறார் இயக்குனர் சாரங்.

’புருஷனுக்கு துரோகம் பண்ற பொண்டாட்டியை சும்மா விடக்கூடாது’ என்று விவாதிப்பவர்கள் மட்டுமே சாரங் சொல்ல வருவதை ஏற்கக் கூடும்.

‘இனிது இனிது’, ‘சிஎஸ்கே’ உட்பட சில படங்களில் ஒரு நடிகராகவும் இருந்திருக்கிறார் என்பதால், திரையில் வரும் ஒரு பாத்திரம் எத்தகைய தாக்கத்தைப் பார்வையாளர்களிடம் உருவாக்கும் என்பது அவருக்கு எளிதாகத் தெரிந்திருக்கும்.

ஆனாலும், அதனைக் கண்டுகொள்ளத் தவறியிருக்கிறார். அதே நேரத்தில், ‘சிவப்பு ரோஜாக்கள்’ பாணியில் ‘குத்துங்க எஜமான் குத்துங்க’ எனும் ரகத்தில் ஒரு ‘சைக்கோ த்ரில்லர்’ ஆகவும் ‘நடுவன்’ அமையவில்லை.

ஒரு தவறான அடிப்படையின் மீது கதையைக் கட்டமைத்திருப்பதும், அதற்கு முட்டுக்கொடுக்கும் வகையில் கூட காட்சிகளை அமைக்காததும், படம் பார்த்து முடிந்ததும் வெறுமையையே நமக்குத் தருகிறது.

இதன் காரணமாக, ஒட்டுமொத்த உழைப்பும், அதனை ஒருங்கிணைத்த இயக்குனரின் திறமையும் பயனில்லாமல் போயிருப்பது வருத்தம் தரும் விஷயம்.

ஆனாலும், சாரங் அடுத்த படத்தில் இக்குறையைச் சரி செய்வார் என்ற நம்பிக்கையை விதைக்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘நடுவன்’ படத்தின் காட்சியாக்கம். அது மட்டுமே ஆறுதல் தருகிறது..!

-பா.உதய்

You might also like