நல்ல நண்பன் மிகச்சிறந்த வழிகாட்டி!

வெ.இறையன்பு ஒரு வார இதழில் எழுதிய தன்னம்பிக்கைத் தொடரிலிருந்து ஒரு பகுதி!

‘குஷ்வந்த்சிங் அமெரிக்கா செல்வதற்குமுன் இங்குள்ள அவரது நண்பர்கள் அங்குள்ள கறுப்பின மக்களிடம் எப்படி கவனமாக இருக்க வேண்டும்… அவர்கள் எப்படியெல்லாம் ஏமாற்றுவார்கள். என்று எச்சரித்து அனுப்புகின்றனர்.

அவரும் அந்த பயத்துடனேயே ஏர்போர்ட்டில் போய் இறங்க, டாக்சி டிரைவராக ஒரு ஆஜானுபாகுவான கறுப்பர் வருகிறார்.

வழியெல்லாம் அவர் குஷ்வந்த் சிங்கை உற்றுப்பார்க்க, இவரோ நம்மூரைப்போல் ஏமாற்றி விடுவார்களோ என டாக்சி மீட்டரையே பதட்டத்துடன் பார்த்துக் கொண்டு வந்திருக்கிறார்.

இறங்கும் இடம் வந்தது. அந்த நீக்ரோ மனிதன் கார் கதவைத் திறந்துவிட்டு குஷ்வந்த்
சிங்கிற்கு ஒரு ராணுவ சல்யூட் அடித்திருக்கிறார். “காந்தியின் தேசத்திலிருந்து வந்திருக்கும்
உங்களுக்கு என் வணக்கம், வாழ்த்துகள்!

உங்கள் வருகையால் அமெரிக்காவுக்கு பெருமை!” என்றவன், அவரிடம் டாக்சிக்கு பணமே வாங்காமல் சென்றிருக்கிறான். இவருக்கோ இன்ப அதிர்ச்சி!

இப்படி காந்தி நம் தேசத்திற்கே பெருமை தேடித் தந்ததனால் தான் மகாத்மா. அவரின் வழியில்
நீங்களும் நம் தேசத்திற்கு பெருமை சேர்ப்பவர்களாக மாறலாம். அதற்கு காலத்தை முறையாகப் பயன்படுத்துங்கள். எளிமையாக இருங்கள்.

எளிமை என்பது அலங்காரம் அல்ல. நம் வாழ்க்கை முறை. அது பிறருக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும். கணினியிலேயே காலத்தைச் செலவிடாமல் மனிதர்களோடு பழகி அவர்களைப் படியுங்கள்.

ஒரு மனிதனுடன் பழகும் அனுபவம் 1000 புத்தகங்கள் படிப்பதற்குச் சமம்.

எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் ஆற்றலை கூர்மைப்படுத்துங்கள். அப்பொழுதுதான் உங்கள் மூளையின் அனைத்து பாகங்களும் செயல்படும். அது செயல்படுவதற்கு நல்ல இசையைக் கேளுங்கள், தரமான இலக்கியங்களைப் படியுங்கள்.

உங்களின் அறிவியல் பார்வை எவ்வளவு நுட்பமாக இருந்தாலும். அதனைப் பயனுள்ளதாக மேன்மைப்படுத்துவது நீங்கள் படிக்கும் இலக்கியங்கள் தாம்.

கல்லூரி வாழ்க்கை என்பது பல புதிய தொடர்புகளை உங்களுக்கு உருவாக்கித் தரும். இங்கு நல்ல நண்பர்களைத் தேடிக் கொள்ளுங்கள். ஒரு நல்ல நண்பன்தான் உங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருப்பான்.

நட்பு எவ்வளவு மேன்மையானது என்பதற்கு ஒரு சின்ன உதாரணம்.

ஒருமுறை போர்க்களம் சென்ற இரண்டு நண்பர்களில் ஒருவன் காயம்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்.

நினைவு தப்பும் அளவிற்கு  இரத்தம் வெளியேறியபோதும் நம்பிக்கையோடு  இருக்கிறான். ‘அவன் பிழைக்க மாட்டான்’ என்று பார்த்த சிலரும் கடந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் தன்னோடு போரிட்ட நண்பனைக் காணவில்லையே என்று அவனைத் தேடிக் கொண்டு நண்பன் வந்துவிடுகிறான். அவன் கைகளைப் பற்றிய இவன் கடைசியாகச் சொன்ன வார்த்தை ‘நீ வருவாய் என்று எனக்குத் தெரியும்!’ என்பதுதான்.

அத்துடன் அவன் உயிர் பிரிகிறது. நண்பனின் உடலைச் சுமந்து கொண்டு இவன் நாடு திரும்புகிறான். இதுதான் உண்மையான நட்பு.

You might also like