தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா எப்படி முக்கியமானவரோ, சினிமாவிலும் அப்படித்தான்.
அவரின் கதைகளும் நாடகங்களும் சினிமாவாக்கப்பட்டு தமிழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
வேலைக்காரி, நல்லதம்பி, ஓர் இரவு ஆகிய அவருடைய நாடகங்களும் ரங்கோன் ராதா,
வண்டிக்காரன் மகன், சொர்க்கவாசல், தாய் மகளுக்கு கட்டிய தாலி, எதையும் தாங்கும் இதயம்,
நல்லவன் வாழ்வான் உட்பட சில கதைகளும் திரைப்படமாகி வரவேற்பை பெற்றிருக்கின்றன.
சினிமாவை முக்கிய பிரச்சார ஊடகமாக பயன்படுத்திய அண்ணா, அதன் மூலமும் அதிகமாக
புகழ்பெற்றார். அவரின் ’ஓர் இரவு’ பல்வேறு இடங்களில் நாடகமாக நடத்தப்பட்ட போதே பலத்த வரவேற்பை பெற்றது.
கே.ஆர்.ராமசாமி, தனது கிருஷ்ணன் நினைவு நாடக சபா மூலம் இதை நாடகமாக நடத்தி வந்தார். ஒரே இரவில் நடக்கும் கதை என்பதால் ‘ஓர் இரவு’ என்று டைட்டில் வைத்தார்கள்.
இந்த நாடகத்தைப் பார்த்துவிட்டுதான் ’தமிழ்நாட்டு பெர்னாட்ஷா’ என்று அண்ணாவை புகழ்ந்தார் கல்கி.
காரைக்குடியிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்ட வந்த ஏவி.எம் ஸ்டூடியோ ‘வாழ்க்கை’ படத்துக்குப் பிறகு, அண்ணாவின் ’ஓர் இரவு’ நாடகத்தை திரைப்படமாக்க முடிவு செய்தது.
அண்ணாதுரை சம்மதித்தார்.
இந்த நாடகத்தின் திரைக்கதை, வசனம் எழுதித் தர அண்ணாவுக்கு அப்போது
பேசப்பட்ட சம்பளம் ரூ.10 ஆயிரம். அந்தக் காலகட்டத்தில் இது பெரும் தொகை.
இரவு சாப்பாட்டுக்குப் பிறகு இந்தப் படத்துக்கான திரைக்கதை, வசனத்தை எழுதத் தொடங்கிய அண்ணா, ஒரே இரவில் 300 பக்கங்களுக்கு எழுதி, விடியற்காலையில் கையில் கொடுத்துவிட்டார்.
“நான் இவ்வளவு எழுதியிருக்கேன். சினிமாவுக்கு என்ன மாற்றம் பண்ணணுமோ, அதை பண்ணிக்குங்க” என்றார் அண்ணா. தயாரிப்பாளர் ஏ.வி.எம் செட்டியாருக்கு ஆச்சரியம்!
படத்தை இயக்கிய ப.நீலகண்டன் கதையில் சில மாற்றங்களை செய்தார். இதில், ‘ஓர் இரவு’ நாடகத்தை நடத்தி அதில் நாயகனாக நடித்த கே.ஆர்.ராமசாமி திரைப்படத்திலும் நாயகனாக நடித்தார்.
டி.கே.சண்முகம், டி.எஸ்.பாலையா, ஏ.நாகேஸ்வர ராவ், டி.எஸ்.துரைராஜ், லலிதா, பி.எஸ்.சரோஜா, முத்துலட்சுமி உட்பட பலர் நடித்தார்கள்.
ஆர்.சுதர்சனம் இசையமைத்த இந்தப் படம், 1951 ஆம் ஆண்டு வெளியானது. வசூல் ரீதியாக
தோல்வி அடைந்தாலும் விமர்சகர்களிடையே இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நாடகத்தில் இருந்த உயிர், திரைப்படமாக்கப்பட்டபோது காணாமல் போய்விட்டது என்றும் சினிமாவுக்காக கதையில் மாற்றங்களைச் செய்ததுதான் தோல்விக்கு காரணம் என்றும் அப்போது கூறப்பட்டது.
– அலாவுதீன்