உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு, நவம்பர் 13, 14ல் நடக்க உள்ளது. இதனிடையே, தேர்வு முறையில் மாற்றம் செய்து சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
இதுவரை நுழைவுத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் உயர் சிறப்பு பாடத் திட்டம் தொடர்பான கேள்விகளுக்கும், 40 சதவீத மதிப்பெண்கள் பொது மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கும் வழங்கப்படுகின்றன.
இதை மாற்றி, இனி 100 சதவீத மதிப்பெண்களும் பொது மருத்துவம் தொடர்பான கேள்விகளுக்கே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து முதுகலை டாக்டர்கள் சிலர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதை விசாரித்த நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், பி.வி. நாகரத்னா அமர்வு, “நீட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பு ஜூலை 23-ல் வெளியிடப்பட்டது. நவம்பர் 13 மற்றும் 14ல் நுழைவுத் தேர்வு நடக்க உள்ளது.
இந்நிலையில், தேர்வு முறையை மாற்றி ஆகஸ்ட் 31ல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “திடீரென இவ்வாறு மாற்றி அமைத்தது ஏன்; இதற்கான உரிய காரணத்தை தெரிவிக்காவிட்டால் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பிப்போம்.
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் தேசிய தேர்வுகள் வாரியம் ஆகியவை தங்கள் செயல்பாடுகளை திருத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்காக நினைத்த நேரத்தில் இவ்வாறு மாற்றலாமா?
சரியாக சிந்திக்காத சில அதிகாரிகளால் இளம் மருத்துவர்கள் கால்பந்து போல் உதைபட வேண்டுமா? உடனடியாக மூன்று அமைப்புகளும் சந்தித்து, பிரச்சனைக்கு சரியான தீர்வு காண வேண்டும். பதிலளிக்க ஒரு வாரம் அவகாசம் தரப்படுகிறது” என கண்டனம் தெரிவித்துள்ளது.