எதுக்குப்பா மொட்டை அடிச்சிருக்கே?-சத்யராஜ் பதில்!

கோவை அரசு கலைக்கல்லூரி. பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து மருதமலை, பழனி, திருப்பதி என்று 3 கோயில்களில் மொட்டை போட்ட தலையோடு கல்லூரிக்குள் நுழைந்த ரங்கராஜைப் பார்த்த கெமிஸ்ட்ரி பேராசிரியர் கேட்டார்.
“எதுக்குப்பா மொட்டை அடிச்சிருக்க?”
“படிச்சு நல்ல மார்க்கில் பாஸ் பண்ணிட்டேன்… அதான்”
“படிச்சது நீதானே?”
“ஆமா!”
“அப்புறம் எதுக்கு யாருக்கோ மொட்டை அடிச்சிருக்கே?”
“சார்… சும்மா ஒரு சேஃப்டிக்குத்தான்”
அன்றைக்குக் கூச்சத்துடன் பதில் சொன்ன மாணவர்தான் ரங்கராஜ். திரையுலகில் நுழைந்த பிறகு சத்யராஜ். கோவையைப் பற்றி பேசும்போதே குசும்பும், நக்கலும் இயல்பாக அலையடிக்கிறது. கல்லூரி பிளாஷ்பேக்கிற்குள் நுழைந்தால் முகத்தில் வாய் திறந்த சிரிப்பு.
“பள்ளிப்படிப்பு முடிகிற வரை சிறைப்பறவை மாதிரி தான். வீட்டுக்கு நேர் எதிரில் தான் சபர்பன் பள்ளி. எங்க வீட்டில் இருந்து பார்த்தாலே தெரியும். வகுப்பில் பெஞ்ச் மேலே ஏறி நின்னாலே வீட்டில் விசாரிக்கிற அளவுக்கு பள்ளி நெருக்கமாக இருந்தது ஒரு தொந்தரவு. அதனால் பள்ளிக்கு ‘கட்’ அடிச்சு எந்தத் தகிடுதத்தம் வேலையும் செய்ய முடியாது.
பள்ளி ஆண்டுத் தேர்வில் நல்ல மார்க். ஏறத்தாழ 72 சதவிகித மார்க். அதிலும் வரலாற்றில், பள்ளியில் நான்தான் முதல் மாணவன். கல்லூரியில் நான் சேர்ந்தது பி.யு.சி.க்காக வீட்டில் இருந்து காரில் போனேன். சுமார் 13 வயதிலேயே கார் ஓட்டிப்பழகி விட்டேன். வீட்டிலிருந்து துவங்கி கொஞ்ச தூரம் வரை தான் டிரைவர் ஓட்டுவார். பிறகு நான்தான் ஓட்டுவேன். அதுக்குப்பிறகு கார் அலுத்துப் போச்சு.
உலகத்தைத் தெரிஞ்சுக்கணும்னு வீட்டிலே ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு, வாடகை சைக்கிளில் கல்லூரிக்குப் போக ஆரம்பிச்சேன்.
கல்லூரிக்கு எதிரில் அப்போது இருந்த உட்லண்ட்ஸ் ஓட்டலில் சைக்கிளை நிறுத்துவேன். அங்கே சந்திரசேகர், குப்புசாமி, கோபாலகிருஷ்ணன் என்று என்னோட நண்பர்கள் காத்திருப்பார்கள்.
அவர்களுடன் சேர்ந்து ‘இன்னைக்கு காலேஜூக்குப் போகலாமா? வேண்டாமா?’ன்னு விவாதிச்சுத் தான் கல்லூரிக்குள் நுழைவோம்.
எத்தனை நாட்களுக்கு லீவ் எடுக்கலாம்கிறதை மட்டும் துல்லியமாகத் தெரிந்து வைத்திருப்போம். அதுக்கேத்தபடி ‘கட்’ அடிப்போம்.
இந்த நேரத்தில் முக்கியமான ஒண்ணைச் சொல்லணும். பி.யு.சியில் சேருவதற்கு விண்ணப்பம் வாங்க வரிசையில் நின்னுக்கிட்டுருந்தப்போ எனக்கு பின்னாடி ஒல்லியான உருவத்தோடு நின்னுகிட்டு இருந்தார், பின்னாளில் இயக்குனராகவும் நடிகராகவும் தூள் கிளப்பிய மணிவண்ணன்.
வெள்ளையா நான் நின்னுகிட்டு இருந்ததைப் பார்த்ததும் எனக்கு ஆங்கிலம் நல்லாத் தெரியும் என்று அவரா முடிவு பண்ணிட்டார். அதை வைச்சு என்கிட்டே “அட்வான்ஸ்டு இங்கிலீஷ்ன்னா என்ன?”ன்னு கேள்வி கேட்டார்.
ஏதாவது பொருள் வாங்கணும்னா அட்வான்ஸ் கொடுக்கிறதில்லையா அது மாதிரி சிம்பிள்தான்னு நான் எனக்கு தெரிந்த அளவுக்கு விளக்கம் கொடுத்தேன்.
அதில் திருப்தியாகி அவரும் அட்வான்ஸ் இங்கிலீஷில் சேர்ந்து, ஷேக்ஸ்பியர், ‘ஒத்தெல்லோ’ன்னு சொல்லித்தர ஆரம்பிச்சதும் பயந்து படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
இப்படி நமக்கு நல்ல நடிகரும்-இயக்குனரும் கிடைத்ததற்கு காரணம் நான்தான். அப்போ எங்க வீட்டில் ஒரு மாசத்துக்கு 15 ரூபாய் பாக்கெட் மணி கொடுப்பாங்க. அப்ப ஒரு நாளைக்கு 15 பைசா தான் செலவு பண்ண முடியும். அப்போ சினிமாவுக்குப் போனால் லோ கிளாஸ் டிக்கெட் 43 பைசா. அடுத்து 85 பைசா.
படத்துக்குப் போனால் குறைந்தது 85 பைசா டிக்கெட் எடுத்தாவது போயாக வேண்டும். அப்புறம் திருட்டு தம் அடிக்கணும். அப்போ ஒரு சிகரெட் 13 பைசா. எப்படிக் கட்டுப்படியாகும்?
இந்த லட்சணத்தில் கல்லூரிக்கு எதிரே இருந்த நாயர் கடையில் எனக்கு ஒரு அக்கவுண்ட் இருந்தது. அதற்காக வீட்டில் விதவிதமாய் பொய் சொல்லணும்.
பி.யு.சி முடிச்சிட்டு என்னை கோவையில் இருந்த விவசாயக் கல்லூரியில் சேர்க்கணும்னு வீட்டில் ஆசைப்பட்டாங்க. பசுமையா அந்தக் கல்லூரியே பார்க்க சூப்பரா இருக்கும்.
எனக்கும் அதில் ஆர்வம் இருந்துச்சு. ஆனா அதுக்கேத்த மார்க் கிடைக்கலை. அதனால் வேறு வழியில்லாம பி.எஸ்.சி பாட்டனி சேர்ந்துட்டேன். அதுதான் கொடுத்தாங்க.
அந்தச் சமயத்தில் என்ன சினிமா பார்க்கிறோமோ, அதில் சிவாஜி, எம்ஜிஆர், ஜெய்சங்கர், ராஜேஷ்கண்ணா எப்படி டிரெஸ் போட்டு இருக்காங்களோ, அதே மாதிரி டிரெஸ் வேணுமுன்னு அம்மாவிடம் சொல்லி, அவங்க தான் எனக்கு வாங்கிட்டு வருவாங்க. தைச்சு அதைத்தான் போட்டிருப்பேன். ‘பாபி’ படம் வந்தப்போ பாபி காலர் வைச்சேன். மீசை வைக்கிறது. தலை முடியை வெட்டிக்கிறது கூட சினிமா பாணியில் தான். ராஜேஷ்கண்ணா படம் பார்த்துட்டா போதும் நான்கு வாரத்துக்கு முகத்தில் மீசை இருக்காது.
ஏதோ ஒரு பேட்டியில் அவர் குறிப்பிட்ட பிராண்ட் சிகரெட் பிடிப்பதாகச் சொல்லி, அதுக்கு அலையோ அலை என்று அலைந்து கடைசியாக ரயில்வே ஸ்டேஷனில் அதை வாங்கிப் பிடிச்சேன். அப்போ அதோட விலை 50 பைசா.
‘வசந்த மாளிகை’ படம் பார்த்துட்டு சிவாஜி சாரோட ஹேர்ஸ்டைல் மாதிரியே தலை வாரி, தலைக்கு விளக்கெண்ணெய் எல்லாம் போட்டு கையால் முடியை பிடிச்சுக்கிட்டு இருந்தாதான் முடி படியும். அப்படியே ஸ்டைலா வெளியே போறப்போ வித்தியாசமா பார்ப்பாங்க.’ மாட்டுக்கார வேலன் ‘படம் வந்ததும் ஹேர்ஸ்டைல் மாறிடும். எல்லாம் அந்த வயசுல ரகளைதான்.
பொண்ணுங்களை கலாட்டா பண்ணாம, வேடிக்கை பார்க்காமல் ஒரு காலேஜ் பருவமா? அதெல்லாம் எனக்கும் இருந்துச்சு. சைக்கிளில் போறப்போ பெண்கள் இருக்கிற பக்கம் போற மாதிரி ஒரு ரூட்டில் போய்விட்டு வருவேன். பார்க்கிறதே பெரிய விஷயம்தானே அதைத்தவிர சீரியஸான காதல் எல்லாம் கிடையாது. எல்லாம் ஹார்மோன் செய்த கோளாறுதான்.
அரசு கலைக் கல்லூரியா இருக்கிறதாலே அடிக்கடி அப்போ ‘ஸ்டிரைக்’ நடக்கும். ‘ஸ்டிரைக்’ நடந்தாலே லீவுதான். அப்போ பாட்டனி வகுப்புக்குத் தேர்தல் நடந்துச்சு. ஓட்டு போடுவது 25 பேர். அதுக்கு ஏக அலப்பறையுடன் பிரச்சாரம் பண்ணி தாரை தப்பட்டை அடித்து நண்பர்கள் கிளம்பிட்டாங்க.
கல்லூரியில் படிக்கிற வரை கல்லூரியில் எந்தக் கலை நிகழ்ச்சியிலும் நடிச்சதோ, பேசினதோ எதுவுமில்லை. இருந்த ஒரே லட்சியம் அப்போ நிறைய சினிமா பார்ப்பது தான்.
ஒரு விதத்தில் தான்தோன்றித்தனமான மாணவனாகத் தான் இருந்தேன். எப்படியாவது டிகிரி முடித்து வேலை பார்த்துக்கலாம்கிற மனநிலை இருந்ததும் அதற்கு காரணமாக இருக்கலாம்.
எம்ஜிஆர் படங்களும், அவருடைய படப் பாடல்களும் எனக்குள் ஏற்படுத்தியிருந்த மாற்றம் அதிகம். சிவப்பு சிந்தனையை அவை எனக்குள் உருவாக்கியிருந்தன.
கல்லூரிக்குப் பக்கத்தில் அரசு மருத்துவமனை. அங்கு ஒரு போர்டு. அதில் தினமும் “பிள்ளை பிறக்க அரச மரத்தை சுற்றினால் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு எந்த மரத்தை சுற்றுவது?” என்று திராவிடர் கழகம் சார்பில் வயதான ஒருத்தர் எழுதிப் போட்டிருப்பார்.
படிக்கிறப்போ அவை என்னை யோசிக்க வைத்தன. அவருடைய பெயர் சுவரெழுத்து சுப்பையான்னு பிறகுதான் தெரிஞ்சது. பிறகு அவருடைய புத்தக வெளியீட்டு விழாவில் பிறகு நான் கலந்து கொண்டேன்.
நாங்க இருந்த ராம்நகரில் தி.க. சார்பில் ஒரு கூட்டம் நடந்தது. அதில் பேசிய ஒருத்தர் வெறுங்கையில் விபூதி கொடுத்தார். வாயில் இருந்து லிங்கத்தை எடுத்தார். சொம்பில் இருந்து குங்குமம் கொட்ட வைத்தார். தீ மிதித்தார். கடவுள் இல்லைன்னு சொல்லிக்கிட்டு எல்லாத்தையும் பண்ணினார்.
“வாயில் இருந்து சின்னதா லிங்கம் எடுக்கிறவங்க பைக்கையும் அம்பாசிடர் காரை எடுத்தா என்ன?”ன்னு கேட்டதெல்லாம் என்னைப் பாதித்தது. கல்லூரி வாழ்க்கை எனக்குள் ஏற்படுத்திய முக்கியமான பாதிப்பா இதைத் தான் சொல்லணும்.
சினிமா மேலே ஆர்வம் இருந்ததால் கல்லூரிக்கு எதிரே இருந்த ஹோட்டலில் தங்கி இருந்த நடிகர் எம்.ஆர்.ராதாவைப் பார்க்க நண்பர்களுடன் சேர்ந்து போனேன். சிறையில் இருந்து அவர் வந்திருந்த நேரம். நண்பர்கள் அவருடைய அறைக்கு முன்னால் போய்ச் சத்தம் போட்டாங்க.
அவர் வெளியே வந்தபாடா இல்லை. என்னிடம் ‘ரத்தக்கண்ணீர்’ வசனத்தை சத்தமாப் பேச சொன்னாங்க. நானும் பேசினேன். சத்தம்கேட்டு முண்டா பனியன் அண்டர்வேரோட அறையை விட்டு வெளியே வந்தார் எம்.ஆர்.ராதா. பிறகு அவர்கிட்டே கையெழுத்து வாங்கினோம்.
மு.க.முத்துவிடமும் வாங்கியிருக்கேன்.
சிவாஜி சார் எங்களோட குடும்ப நண்பர். சின்ன வயசிலிருந்து அவருடன் பழக்கம். துரைராஜாங்கிற எங்க சித்தப்பா கூட ரொம்ப பழக்கமா இருப்பார். வேட்டைக்குப் போறதுக்காக அங்கே வருவார். அப்போ வேட்டை தடை செய்யப்படலை.
எங்க சொந்தக்காரங்களோட விழாக்களுக்கு அவர் வந்தாலும், அவர் மூலமா சினிமாவுக்கு முயற்சிக்கலாம்னு கூட அப்போ யோசிச்சதில்லை.
சென்னைக்கு வந்து பத்துப் படங்களுக்கு மேல் நடிச்சிட்டு அவரோட சேர்ந்து ‘ஹிட்லர் உமாநாத்’ங்கிற படத்தில் நடிக்கிறப்போ தான் என்னிடம் குடும்பத்தைப்பற்றி விசாரிச்சார்.
படிக்கிறப்போ கோவையில் சிவசக்தி தியேட்டரில் பொண்ணுக்குத் ‘தங்கமனசு’ படம் பார்க்க நண்பர்களுடன் சைக்கிளில் போயிருந்தேன். சிவக்குமார் சாரும், விஜயகுமாரும் அதில் நடிச்சிருப்பாங்க.
விஜயகுமார் அதில் கலெக்டரா நடித்திருப்பார். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தப்போ சிலர் என்கிட்டே “நீங்கதானே இந்த சினிமாவில் கலெக்டரா நடிச்சிருக்கீங்க?”ன்னு கேட்டப்போ ஜிவ்வுன்னு இருந்துச்சு.
என்னை விஜயகுமாரா நினைச்சுட்டாங்க. அப்புறம் கேட்டவங்களை அழைச்சுட்டுப் போய் வாடகை சைக்கிளில் நாங்க வந்ததைச் சொன்ன பிறகுதான் நம்புனாங்க. ஆனாலும் மனசுக்குள் சினிமா மேலே ஒரு ஆசை வர அது காரணமா இருந்துச்சு.
எங்க வீட்டில் எங்கம்மா, எங்க சித்தி , என்னுடைய சகோதரிகள், என்னுடைய மனைவி, மகன் சிபி, பொண்ணு திவ்யா எல்லோரும் முதல் வகுப்பில் தேறினவங்க.
எங்க தாத்தா அந்தக் காலத்தில் லண்டன் போய் படிச்சுட்டு வந்தவர். குடும்பப் பின்னணி இப்படி இருந்தும் எனக்கு எதனாலோ படிப்பு வரலை. பி.எஸ்.சி படிப்பில் எனக்கு பெரிய விருப்பமும் இல்லை. இன்னைக்கும் அரியர்ஸ் எழுதி எப்படி மார்க் எடுத்து நான் தேறினேன்ங்கிறதை நினைச்சா ஆச்சரியமா இருக்கும். இதுதான் நிஜம். அந்த அளவுக்குத்தான் அப்போ இருந்தேன்.
என்னெத்த கண்ணையா ஒரு படத்தில் சொல்ற மாதிரி “என்னத்தைப் பண்ணி”ன்னு நினைக்கிறது தான் என்னுடைய பழக்கமா அப்போ இருந்தது. ஒருவிதத்தில் நம்பிக்கை குறைந்த அந்த பாணியை யாரும் முன்னுதாரணமாக எடுத்து விடக்கூடாது.”
முகத்தில் படர்ந்த சிரிப்புடன் மென்மையாகச் சொல்கிறார் சத்யராஜ்.
– மணா
You might also like