கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு விவசாயிகளுக்கான வேளாண் கடனை ரத்து செய்வதாக மாநில அரசு அறிவித்ததும், வேளாண் கடனை முன் வைத்து அநேக மோசடிகள் நடந்ததாகச் செய்திகள் வெளிவந்தன.
அதற்கு முன்பு மத்திய அரசு விவசாயிகளுக்கு வங்கிகளில் செலுத்தியதாகச் சொன்ன கடனைப் பலர் சேர்ந்து சுருட்டியதாத் தகவல்கள் வெளிவந்தன. விசாரிப்பதாகச் சொன்னார்கள்.
முடிவு என்ன ஆனது? யார் யாரைக் கைது செய்தார்கள்? தெரியவில்லை.
இப்போது கூட்டுறவு நகைக் கடனைத் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஐந்து சவரன் நகைக்கடன் பெற்றவர்கள் யார் யார் என்கிற விபரங்கள் சேகரிக்கப்பட்டன. ஏறத்தாழ 61 லட்சம் பேர் அப்படிக் கடன் பெற்றதாகச் சொல்லப்பட்டது.
ஆனால் இந்த அறிவிப்பு வெளியானதும் ஒரே நபர் பல கூட்டுறவு வங்கிக் கிளைகளில் நகைக்கடன்களைப் பெற்றிருப்பதாகவும், கவரிங் நகைகளை வைத்துக்கடன் பெற்றதாகவும் கூட, அடுத்தடுத்து மோசடிப் புகார்கள் குவிந்தன.
இதெல்லாம் எப்படி நடந்திருக்கிறது?
கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர்கள், வங்கிக் கிளைகளில் பொறுப்பில் இருந்தவர்கள், உள்ளூர் அரசியல்வாதிகள் என்று பலரும் இணைந்த ஒருங்கிணைப்பில் தான் இவ்வளவும் சாத்தியப்பட்டிருக்கிறது
நடந்தேறிய இம்முறைகேடுகள் பற்றி விசாரிக்க அரசு தரப்பிலிருந்து ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கிறது.
அனைத்துப் பொது நகைக் கடன்களையும் நூறு சதவிகிதம் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஆய்வு செய்து வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வேளாண் கடன், நகைக் கடன் என்று அரசு எந்த விதமான சலுகைகளை அறிவித்தாலும், அதைத் தங்கள் நலனுக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்ள ஒரு கும்பல் தயாராக இருக்கும்போது, உண்மையிலேயே சலுகைகள் போய்ச் சேர வேண்டிய நபர்கள் திண்டாட வேண்டியிருக்கிறது.
வேளாண் கடன் தவங்கித் தற்போதைய கடன் தள்ளுபடி வரை பாரபட்சமில்லாத நம்பகத் தன்மை கொண்ட ஆய்வு தான் உடனடித் தேவை.