மாநிலங்களவை எம்.பி.யாக கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் தேர்வு!

தமிழகம் சார்பில் மாநிலங்களவையில் காலியாக இருந்த 2 இடங்களுக்கான தேர்தல் கடந்த 9 ம் தேதி அறிவிப்பு வெளியானது. அதன்படி இந்த இரு இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான வேட்புமனு செப்டம்பர் 15-ல் துவங்கிய நிலையில், தி.மு.க சார்பில் கனிமொழி சோமு மற்றும் ராஜேஸ்குமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கடந்த 23ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில் இருவரின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது. வேட்புனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் இன்றுடன் (செப்.,27) நிறைவு பெற்றது.

இதையடுத்து தி.மு.க வேட்பாளர்கள் கனிமொழி சோமு, ராஜேஸ்குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இருவருக்கும் தேர்தல் அதிகாரியும், சட்டசபை செயலருமான சீனிவாசன் வெற்றிப் பெற்றதற்கான சான்றிதழ் வழங்கினார். இதன்மூலம் மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர்கள் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் தற்போது என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜ.க, கூட்டணி ஆட்சி சார்பில் ஒரு மாநிலங்களவை இடத்திற்கான தேர்தலில் பா.ஜ.க.,வின் செல்வகணபதி வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், செல்வகணபதி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

#RAJYASABHA #DMK #PUDUCHERRYBJP #ராஜ்யசபா #திமுகவேட்பாளர்கள்#புதுச்சேரி

You might also like