பேய் மாமா – சிரிப்பு வரலையேம்மா!

வரவர யோகிபாபுவின் படங்களில் காமெடியை தேட வேண்டிய கட்டாயம் அதிகமாகி வருகிறது. அந்த வரிசையில் சேர்கிறது ஷக்தி சிதம்பரத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பேய் மாமா’.

விட்டலாச்சார்யா காலத்திலேயே ’ஹாரர்’ படத்தில் காமெடி கலக்கும் வழக்கம் உண்டென்றாலும், சமீபகாலத்தில் அதனை ஒரு ட்ரெண்ட் ஆக்கியது ராகவா லாரன்ஸ் தான்.

’காஞ்சனா’வின் அடுத்தடுத்த பாகங்களும், சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை’ மற்றும் ’அரண்மனை 2’ம் அதனை ஒரு வெற்றி பார்முலாவாகவே கையிலெடுத்தன. கிட்டத்தட்ட அந்த உத்தியை சுக்குநூறாக்கியிருக்கிறது இத்திரைப்படம்.

ஐந்து பேய்களும் ஒரு மாமாவும்..!

பச்சைமலை பங்களாவையும் அதனைச் சுற்றியிருக்கும் பகுதியையும் விற்கத் திட்டமிடுகிறார் வைரமணி (அபிஷேக் வினோத்). அவரது முயற்சிக்கு டாக்டர் எம்.எஸ்.ஆரும் அவரது மகள் நிர்மலாவும் தடை போடுகின்றனர்.

பச்சைமலையை வாங்க யாராவது வந்தால், பேய் வேடமிடும் ஒரு குடும்பத்தை (வையாபுரி, வினோதினி, மாளவிகா) பயன்படுத்தி அவர்களை விரட்டுகின்றனர்.

அந்த பங்களாவில் பேய் இருக்கிறதா என்று சோதனையிட விரும்பும் வைரமணி, அதற்காக கோலி குமாரை (யோகி பாபு) அணுகுகிறார்.

தனது குடும்பத்தினருடன் (ரமேஷ் கண்ணா, செந்தில்குமாரி, ராகுல் தாத்தா, கிருஷ்ணமூர்த்தி, மீனாள்) அங்கு வரும் கோலி குமார், தங்களைப் போலவே இன்னொரு குடும்பமும் பேயை விரட்டுவதாகச் சொல்லி ஏமாற்றுவதைக் கண்டறிகிறார்.

பங்களாவை விட்டு வெளியேற முடியாத வகையில் இரண்டு குடும்பங்களும் மாட்டிக்கொள்ள, அப்போதுதான் உண்மையாகவே அங்கிருக்கும் பேய் குடும்பத்தைப் (எம்.எஸ்.பாஸ்கர், மொட்ட ராஜேந்திரன், ரேகா, இமான், ரேஷ்மா) பற்றிய தகவல் தெரிய வருகிறது.

கோலி குமாரின் குடும்பத்தில் இருக்கும் பெண் குழந்தைக்கும் பச்சைமலைக்குமான தொடர்பும் வெளிவருகிறது.

யார் அந்தப் பெண் குழந்தை? கோலி குமாரை பேய்கள் எதுவும் செய்யாமல் இருக்கக் காரணம் என்ன?

பச்சைமலை பங்களாவை விற்கவிடாமல் வைரமணிக்கு எம்.எஸ்.ஆரும் நிர்மலாவும் குடைச்சல் குடைப்பது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்குப் பதிலளித்து ‘பேய் மாமா’வை நிறைவு (?!) செய்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.

அந்தக் குழந்தை ’மாமா’ என்றழைப்பதாலும், பேய்கள் பீடிப்பதாலும், யோகிபாபு ஏற்ற கோலி குமார் பாத்திரம் ‘பேய் மாமா’ என்றாகிறது. படத்தின் டைட்டிலுக்கான விளக்கம் இதுவே.

திரைக்கதைய இப்படிப் பண்ணிட்டீங்களே!

‘பேய் மாமா’வின் திரைக்கதைக்கு ஒரு வாய் இருந்திருந்தால் கதறிக் கதறி அழுதிருக்கும். அந்த அளவுக்கு, அதற்கு கொடுமை இழைக்கப்பட்டிருக்கிறது.

‘பேட்ட’ ரஜினியை ‘ஸ்ஃபூப்’ செய்து யோகிபாபுவுக்கு ‘இண்ட்ரோ‘ கொடுப்பதில் தொடங்கி, கிளைமேக்ஸில் வில்லன்களை யோகிபாபுவே ஆவியாக வந்து ‘ரோஸ்ட்’ செய்வது வரை அனைத்து காட்சிகளும் வெவ்வேறு திசைகளில் நகர்கின்றன.

’என்னதான் பேய்ப்படம் என்றாலும் ஒரு லாஜிக் வேண்டாமா’ என்று வடிவேலுவின் குரலில் நமக்குள் ‘மைண்ட்வாய்ஸ்’ கேட்பதுதான் மிச்சம்.

வெற்றிகரமாக இருக்கும் ஒரு வழக்கத்தைக் கிண்டல் செய்வதற்கும், அதனைச் சொத்தையாக ’ஃபாலோ’ செய்வதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.

முதலாவதைச் செய்கிறோம் என்ற போர்வையில் களமிறங்கி, இரண்டாவதைச் செய்து முடித்திருக்கிறது ‘பேய் மாமா’ குழு.

படம் முழுக்க வரும் ‘ஸ்பூப்’களை பார்க்கும்போது ‘கோபப்படுற மாதிரி காமெடி பண்றாங்களே’ என்றுதான் பல்லைக் கடிக்க வேண்டியிருக்கிறது.

ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தைக் கிழிக்கிறேன் பேர்வழி என்று லிவிங்ஸ்டனை வைத்து எடுக்கப்பட்ட காட்சி அதற்கொரு உதாரணம்.

மொட்டை ராஜேந்திரனுக்கும் ரேகாவுக்கும் இடையிலான காட்சிகளில் ’கடலோர கவிதைகள்’, ‘புன்னகை மன்னன்’, ‘கோலமாவு கோகிலா’ உள்ளிட்ட படங்கள் கிண்டலடிக்கப்படுகின்றன. ஒரிஜினலில் நடித்தவரையே வைத்து ‘ஸ்பூப்’ செய்யும்போது எத்தனை கவனமாக இருந்திருக்க வேண்டும்?

யோகிபாபுவின் குடும்பத்தினர் என்று நால்வர் மட்டுமே முதல் நான்கு காட்சிகளுக்கு வந்த நிலையில், பேய் பங்களாவில் கிருஷ்ணமூர்த்தி, மீனாள் உள்ளிட்டோர் அவ்வப்போது காட்சி தருகின்றனர், அவ்வப்போது மறைந்து போகின்றனர்.

கால்ஷீட் பிராப்ளம் என்றாலும், இவ்வளவு நேரடியாகவே வெளியே தெரிவது?

ஹீரோவின் ஜோடியா இல்லையா என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமலேயே, இப்படம் முழுக்க ஹீரோயினாக வலம் வருகிறார் மாளவிகா. சாம்ஸ் உடன் நடிக்கும்போது மட்டும் ‘கெமிஸ்ட்ரி’ அள்ளுவது ஏனோ?

தொடக்க காட்சியில் சிங்கம் புலியும் அனுபமா குமாரும் வந்து போகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் கோவை சரளா, லிவிங்ஸ்டன், லொள்ளுசபா மனோகர், சாம்ஸ், கணேஷ், பவர்ஸ்டார் சீனிவாசன் உட்படப் பல்வேறு கலைஞர்கள் ஓரிரு காட்சிக்கு வந்துபோவது பெருங்கஷ்டம்.

‘தல தளபதி படத்துல சான்ஸ் கிடைக்கவிடாம பண்றீங்களா’, ‘அவங்க மாஸு நான் தமாஷு’ என்று ஷூட்டிங் ஸ்பாட் பேச்சுகள் கூட படத்தில் காமெடியாக இடம்பெற்றிருக்கின்றன.

சாம்ஸை பார்த்து ‘நல்லாத்தான் நடிக்குறான் ஆனா சான்ஸ்தான் கிடைக்க மாட்டேங்குது’ என்று யோகிபாபுவும் கணேஷும் பேசுவது வரைக்கும் இது நீள்கிறது.

மிக அரிதாக, நாம் வாய்விட்டு சிரிக்கும் காட்சிகளும் ‘பேய் மாமா’வில் உண்டு. ’என் பேர் வெளியே தெரியக்கூடாது’ என்று சொல்லி கையெழுத்திடாத செக்கை பவர்ஸ்டார் தரும் காட்சி அதிலொன்று.

இது போன்று குறைந்தபட்சம் 10 காட்சிகளாக இடம்பெற்றிருந்தால் ஓரளவுக்கு திருப்தி கிடைத்திருக்கும்.

வழக்கமாக பேய் படங்களில் நிகழ்கதை சுவாரஸ்யமாக இருந்து ‘ப்ளாஷ்பேக்’ ‘ப்ப்.ப்ப்பா..’ என்கிற வகையில் அமைந்திருக்கும். இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர் அண்ட் கோ வரும் காட்சி மட்டுமே ஆறுதல்.

வீணாகும் பணம்!

எம்.வி.பன்னீர்செல்வத்தின் ஒளிப்பதிவு, ப்ரீத்தமின் படத்தொகுப்பு, ராஜ் ஆர்யனின் இசை, ஜனார்த்தனத்தின் கலையமைப்பு என்று தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு அனைத்தும் இயக்குனர் எண்ணப்படி அமைந்திருக்கின்றன.

சாய் ராஜகோபாலின் வசனங்கள் பெரிய அளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தவில்லை.

திரைக்கதையில் அடிப்படை அம்சங்கள், லாஜிக், இலக்கணம் என்று எதுவும் தேவையென்று முடிவுசெய்துவிட்டபிறகு, மற்றனைத்தும் அதனதன் வழியே சென்றிருக்கின்றன.

யோகிபாபுவின் கால்ஷீட் கிடைத்துவிட்டதென்று எடுக்கப்பட்ட, அவரை நாயகனாக காட்டுகிறோம் என்று ஏமாற்றிய திரைப்படங்கள் மிகமோசமான அனுபவத்தை எதிர்கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் புதிதாகச் சேர்ந்திருக்கிறது ‘பேய் மாமா’.

‘என்னம்மா கண்ணு’, ‘சார்லி சாப்ளின்’, ‘மகாநடிகன்’ படங்களில் குலுங்க குலுங்க சிரிக்கவைத்த ஷக்தி சிதம்பரம், பிறகு ‘சண்ட’, ‘ராஜாதி ராஜா’, ‘வியாபாரி’ என்று நம்மை சோதித்தார். அதெல்லாமே தேவலை எனும் அளவுக்கு அமைந்திருக்கிறது இத்திரைப்படம்.

‘பேய் மாமா’ வடிவேலுவுக்காக உருவாக்கப்பட்ட கதை என்று இதற்கு முன்னர் பேட்டியளித்திருக்கிறார் இயக்குனர் ஷக்தி சிதம்பரம்.

படம் பார்த்து முடித்ததும் ‘நல்ல வேளை வடிவேலு நடிக்கலை’ என்ற எண்ணம் மட்டுமே உடனடியாக நம் மனதில் எழுகிறது.

– பா.உதய்

You might also like