ஆப்கனில் மீண்டும் மரண தண்டனை!

பயங்கரவாதத்தோடு பழமைவாதமும் ரத்தத்தில் ஊறிய இயக்கம் தலிபான்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதும், அந்த நாட்டை முழுவதுமாக தங்கள் கைப்பிடிக்குள் கொண்டு வந்துள்ளனர் தலிபான்கள்.

’’பழி வாங்க மாட்டோம் – எங்களை எதிர்த்துப் போரிட்ட அரசு படைகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவோம்’’ என தலைநகர் காபூலைக் கைப்பற்றியதும் பிரகடனம் செய்தனர். ஆனால், உலக நாடுகள் நம்பவில்லை.

எதிர்பார்த்த மாதிரியே தங்கள் சுயரூபத்தைக் காட்ட ஆரம்பித்துள்ளனர் தலிபான்கள்.

1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் ஆளுகைக்குள் இருந்தது.

அந்தக் கால கட்டத்தில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

கொலைக் குற்றவாளியின் தலையில் துப்பாக்கியை வைத்து ஒரே குண்டில் கதையை முடித்து மரண தண்டனையை நிறைவேற்றுவர்.

சாதாரண திருடர்களின் கைகள் துண்டிக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலைகளில் கொள்ளை அடிப்போருக்கு மாறு கால்; மாறு கை வாங்கப்படும்.

அதாவது ஒரு கையையும் ஒரு காலையும் துண்டித்து விடுவார்கள்.

பொதுமக்கள் மத்தியில் விளையாட்டு மைதானத்தில் இந்தக் குரூரங்கள் அரங்கேறும்.

காட்சிகள் மாறின. ஆட்சியும் மாறியது. தலிபான்கள் விரட்டப்பட்டனர்.

20 ஆண்டுகள் மக்கள் சுதந்தரக் காற்றை சுவாசித்த நிலையில், மீண்டும் தலிபான்கள் கையில் ஆப்கன் வந்துள்ளது.

20 ஆண்டுகளில் உலகம் பல்வேறு மாற்றங்களைக் கண்டுள்ளது. தலிபான்களும் மாறி இருப்பார்கள் என உள்ளூரில் சிலர் கணக்கு போட்டனர். அது தப்புக் கணக்காகி விட்டது.

‘’குற்றங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டுமானால் தப்பு செய்தோரின் கைகளை வெட்டுவது அவசியம்’’ என தலிபான் இயக்கத்தின் நிறுவன தலைவர் முல்லா நூருதீன் மூன்று நாட்களுக்கு முன்பு அறிவித்தார்.

மறுநாளே தலிபான்கள் மீண்டும் அட்டகாசத்தை ஆரம்பித்து விட்டனர்.

ஆப்கனில் உள்ள முக்கிய நகரம் ஹெராத். அங்கு பணம் பறிக்கும் நோக்கில் தொழிலதிபர் ஒருவரை நான்கு பேர் கடத்திச் சென்றுள்ளனர்.

தலிபான்களுக்கு தகவல் எட்டியது. கடத்தல்காரர்கள் சென்ற காரை வழிமறித்து, நான்கு பேரையும் சுட்டுக்கொன்றனர். அத்தோடு விடவில்லை.

நான்கு பேரின் சடலங்களையும் கிரேனில் தொங்க விட்டு, தெருத் தெருவாய் வலம் வந்துள்ளனர். பிணங்களைக் காட்சிப் பொருளாக மக்கள் பார்வையில் வைத்தனர்.

“நாங்கள் செய்தது நியாயம் தான் – அப்போது தான் மற்றவர்கள் இது போன்ற குற்றங்களைச் செய்ய மாட்டார்கள்’’ என தங்கள் செயலுக்கு தலிபான்கள் நியாயம் கற்பித்துள்ளனர்.

இதனிடையே காபூலில் இருந்து இன்னொரு செய்தியும் வந்துள்ளது.

முந்தைய தலிபான்கள் ஆட்சியில், அதன் தலைவர் முல்லா உமர், கந்தகரில் இருந்தபடி ரிமோட் கண்ட்ரோலில் ஆட்சியை இயக்கினார்.

அவரது கட்டளைக்கு அனைத்து தளபதிகளும், வீரர்களும் பணிந்தனர். அவர் மறைவுக்கு பிறகு நிலைமை மாறிவிட்டது.

களத்தில் உள்ள வீரர்கள் மேலிட உத்தரவை மதிப்பதில்லை. தலைமைக்கும் அவர்களுக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

காபூல் நகர வீதிகளில் வீரர்கள் போடும் ஆட்டம் தாள முடியவில்லை.

முந்தைய ஆட்சியில் அரசுக்கு ஆதரவாக இருந்த கட்சியினர், அரசு ஊழியர்கள், ராணுவத்தினரை வேட்டையாடி வருவதால், தலைமை செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

இன்னும் என்னென்ன கூத்துக்கள் நடக்கப்போகிறதோ? என உலக நாடுகள் உறைந்துள்ளன.

– பி.எம்.எம்.

You might also like