உச்சநீதிமன்றத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட பெண் நீதிபதிகள் மற்றும் பெண்
வழக்கறிஞர்களுக்கான பாராட்டு விழா டெல்லியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, “நீதித்துறையிலும், சட்டக் கல்லூரியிலும் இடஒதுக்கீடு கேட்பதற்கு பெண்களுக்கு உரிமை உள்ளது. நீதித்துறையில் தற்போது 30 சதவீதத்துக்கும் குறைவாகத்தான் பெண்கள் உள்ளனர்.
உயர் நீதிமன்றங்களில் 11.5 சதவீதமும், உச்ச நீதிமன்றத்தில் 11 – 12 சதவீதமும் மட்டுமே பெண்கள் உள்ளனர். தேசிய வழக்கறிஞர்கள் கவுன்சில் நிர்வாகக் குழுவில் ஒரு பெண் கூட இல்லை. நாட்டில் 17 லட்சம் வழக்கறிஞர்கள் உள்ளனர். அதில் 15 சதவீதம் மட்டுமே பெண்கள்.
அதேபோல் நாடு முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கவுன்சிலில் 2 சதவீத பெண்கள் மட்டுமே
நிர்வாகிகளாக உள்ளனர். பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க உடனடியாக சட்ட திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்.
காரல் மார்க்ஸ் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்; உங்களை மாற்றியமைக்கிறேன்; நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமில்லை’ என, அழைப்பு விடுத்தார். அதேபோல் ‘உலக பெண்களே ஒன்று சேருங்கள்’ என, நான் அழைப்பு விடுக்கிறேன். பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு சில சங்கடங்கள் இருக்கின்றன. அவற்றை மாற்ற முயற்சிக்கிறேன். கொரோனா அடுத்த அலை உருவாகாது என்று நம்புவோம். தசரா விடுமுறைக்கு பின், உச்சநீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களும் தகுந்த பாதுகாப்பு முறையுடன் வழக்கம் போல் இயங்கும் என எதிர்பார்போம்” எனக் கூறினார்.