சிம்பன்ஸியாக கமல் நடிக்க இருந்த சயின்ஸ் பிக்சன்!
கமல்ஹாசன் புதுமைகளின் விரும்பி. பரீட்சார்த்த முறைகளில் தன்னைப் பாகுபாடின்றி ஈடுபடுத்திக் கொள்ளும் கலைஞன்.
நவீன டெக்னாலஜிகளை தமிழ் சினிமாவிற்கு அதிகமாக அறிமுகப்படுத்தியவரும் அவர்தான். இதற்கு ஏராளமான உதாரணங்களை தாராளமாகச் சொல்ல முடியும்.
தமிழ் சினிமாவில் அறிவிப்புகளோடு நின்று போன பல படங்களில் ஒன்று ‘நரன்’. மற்றப் படங்களை விட இந்தப் படம் நின்று போனதற்கு நிச்சயமாக வருத்தப்படலாம். ஏனென்றால் கமல்ஹாசனின் தாறுமாறான முயற்சிகளில் உருவாக இருந்த இந்த சயின்ஸ் பிக்சன் வேறு ரகம்.
இதில் கமல் சிம்பன்சியாக நடிக்க இருந்தார். இந்த அறிவிப்பே அப்போது பரபரப்பாக இருந்தது. பத்திரிகைகளில் இதுபற்றிய செய்திகள் வெளியாகி, கோடம்பாக்கத்தையே பேச வைத்துக் கொண்டிருந்தது.
அப்போது ‘ஆளவந்தான்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் கமல். அந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு இருந்ததால், இந்தப் படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருந்தார் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன்.
இதில் விஞ்ஞானியாக நடிக்க இருந்தார் பாலிவுட் ஹீரோ அமிதாப் பச்சன். இந்தப் படம் வந்திருந்தால், அமிதாப் நடித்திருந்த முதல் தமிழ்ப் படமாக இது இருந்திருக்கும். அப்போதைய டாப் பாலிவுட் ஹீரோயினை, கமலுடன் நடிக்க வைக்க முடிவு செய்திருந்தார்கள்.
இந்தப் படத்துக்காக, அமெரிக்கா சென்று சிம்பன்ஸி பற்றிய விவரங்களைக் கேட்டு வந்த நடிகர் கமல்ஹாசன், அங்கிருந்து ஒரு சிம்பன்ஸியை சென்னைக்கு கொண்டு வந்து படப்பிடிப்பில் பயன்படுத்தவும் முடிவு செய்தார். அதற்கான அனைத்து வேலைகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. படத்துக்கான பூஜையும் போடப்பட்டுவிட்டது.
ஆனால், அதற்கு பிறகு அந்தப் படம் தொடங்கவே இல்லை. காரணம் மெகா பட்ஜெட். இருபது வருடத்துக்கு முன்பே, இதற்கான பட்ஜெட் அதிகம். கமல்ஹாசனின் கெட்டப்புக்கு மட்டுமே ஒன்றரை கோடி ரூபாய் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு விமானத்தில் சிம்பன்ஸியை இங்கு கொண்டு, அதற்கு ஏசி அறையை உருவாக்கி, பாதுகாப்பது உள்ளிட்ட செலவுகளுக்கு 2.5 கோடி ரூபாய் என பட்ஜெட் நீண்டாலும் அதை கொண்டு வந்து படப்பிடிப்பைத் தொடர முடிவு செய்தார், தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன். ஆனால், மத்திய அரசு அதற்கு அனுமதியளிக்கவில்லை. பிறகு பாங்காங் சென்று அங்கு படமாக்க நினைத்தார்கள்.
இந்த செலவு, ஷூட்டிங் செலவு எல்லாவற்றையும் போட்டுப் பார்த்தால், பட்ஜெட் எங்கோ சென்றிருந்தது. அந்த நேரத்தில் ஆளவந்தான் ரிலீஸ் ஆகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதால், இந்தத் திட்டத்தை அப்படியே நிறுத்தி விட்டார்கள்.
– அழகு
08.03.2021 05 : 05 A.M