கோப்பு காத்திருக்கலாம்; வயிறு காத்திருக்கக் கூடாது!
“நான் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பத்திரிகை தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த சமயம் அது. எம்.ஜி.ஆர் உணவு அருந்த செல்லுகின்ற மதியவேளை. தலைமைச் செயலகத்திலிருந்து ஓர் உதவியாளர் அவசரமாக கையெழுத்து வாங்க வேண்டிய கோப்புடன் எம்.ஜி.ஆரின் மாம்பலம் இல்லத்திலிருந்து வந்தார்.
அவரால் நேரிடையாக முதல்வரை அணுகி கோப்பில் கையெழுத்துப் போடும்படி கேட்க முடியவில்லை. ஆதலால் அவருடைய உதவியாளர்களும் வந்தவருக்கு உதவ தயக்கம் காட்டி ஒதுங்கிக் கொண்டார்கள். கோப்புடன் வந்த நண்பர் என்னிடம் விஷயத்தைச் சொன்னார். நான் எம்.ஜி.ஆரை அணுகி தகவல் தெரிவித்தேன்.
உடனே எம்.ஜி.ஆர் “வந்தவர் சாப்பிட்டு விட்டாரா எனக் கேட்டீர்களா?” என்று என்னைப் பார்த்து கேட்டார். இன்னும் சாப்பிட்டு இருக்கமாட்டார் என நான் ஊகித்துக் கொண்டாலும் வந்தவரை அணுகிக் கேட்டபோது, “சாப்பிடவில்லை” என்று சொன்னார்.
உடனே எம்.ஜி.ஆ.ர் அவரையும் தன்னுடன் சாப்பிட வரும்படி அழைத்தார். முதல்வரின் அழைப்பை அவர் எதிர்பார்க்கவில்லை. அவர் தயங்கவே எம்.ஜி.ஆர். சிரித்துக்கொண்டே, “கோப்பு காத்திருக்கலாம், வயிறு காத்திருக்கக் கூடாது” எனச் சொன்னார். வந்தவரும் சாப்பிட்டார். அவரை எம்.ஜி.ஆர் எங்களோடு அமர்ந்து உபசரித்து சாப்பிடச் செய்ததை என்னால் மறக்க முடியாது.
சாப்பிட்டு முடித்தவுடன் எம்.ஜி.ஆர் ஓய்வெடுக்கக் கிளம்பிவிட்டார். வந்த நண்பர் பதைபதைத்து என்னிடம் ஓடி வந்தார். கோப்பில் கையெழுத்து வாங்க வேண்டியது அவருடைய கடமையல்லவா? கோப்பை நான் வாங்கி எம்.ஜி.ஆரிடம் வழிமறித்து நீட்டினேன். உடனே கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டார்.
வந்த நண்பருக்கு ரொம்ப சந்தோஷம். அதற்குப் பிறகு அவர் என்னை எங்கு சந்தித்தாலும் நன்றி கூறி, முதல்வருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடக் கிடைத்த வாய்ப்பினை பெருமையாகச் சொல்வார்.
இது போன்ற பல சம்பவங்களை எம்.ஜி.ஆருடன் இருந்த காலத்தில் நான் நேரில் பார்த்திருக்கிறேன். மற்றவர்களின் கஷ்டங்களை உணர்ந்து மனிதாபிமானத்துடன் உதவுவது ஒரு சிறந்த மனித பண்பாகும்.”
-பி.சி.கணேசன் எழுதிய ‘தலைவர்களுடன் எனது அனுபவங்கள்’ நூலிலிருந்து ஒரு பகுதி.
04.03.2021 04 : 10 P.M.