தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளைத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரு வீடியோ கண்காணிப்பு குழுவும் தொடர்ச்சியாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும்.

ஒட்டுமொத்தமாக 234 சட்டமன்றத் தொகுதிகளில் 702 பறக்கும் படைகள் தங்களுடைய கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள். அதேபோல நிலையான கண்காணிப்பு குழுக்களைப் பொறுத்தவரை ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் 702 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

இதனிடையே தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக, துணை ராணுவப்படையைச் சேர்ந்த 330 கம்பெனிகள் பாதுகாப்பு பணிக்கு தேவைப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி, இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கேட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 160 கம்பெனிகள் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதற்கு முன்னதாக 2016 சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை 300 கம்பெனிகள் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

02.03.2021  03 : 20 P.M

You might also like