ஐபிஎஸ் அதிகாரிக்கே இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை?

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டிஜிபி திரிபாதியிடம், சம்பந்தப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி நேரில் சென்று புகாரளித்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ராஜேஷ் தாஸ் மீதான புகார் குறித்து விசாரிக்க 6 பேர் கொண்ட குழுவை அமைத்து உத்தரவிட்டது தமிழக அரசு.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்க சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், “காவல்துறை அதிகாரிக்கே இந்த நிலைமையா?” என அதிருப்தியை வெளிப்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தலைமையிலான அமர்வு, “தன் மீதான பாலியல் தொந்தரவு குறித்து புகார் தர ஒரு பெண் அதிகாரி இந்த அளவுக்கு அலைக்கழிக்கப்பட்டுள்ளார் என்றால், பெண் எஸ்.ஐ., பெண் கான்ஸ்டபிளின் நிலையை யோசிக்க முடியவில்லை” என்றனர்.

இது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாகத் தெரிவித்த அவர்கள், இதை உணர்ந்துதான் அரசியலமைப்பில் நீதிமன்றத்திற்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி தானாக வழக்கு விசாரணக்கு எடுக்கப்பட்டுள்ளது என்றும், பெண் அதிகாரி மீதான பாலியல் தொந்தரவு வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். சம்மந்தப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை பயன்படுத்தவோ, வெளியிடவோ கூடாது என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி உடனுடக்குடன் விசாரணை முன்னேற்றம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு உரிய உத்தரவுக்காக பரிந்துரைக்கப்படுகிறது எனவும்  உத்தரவிட்டனர்.

01.03.2021  05 : 20 P.M

You might also like