முடிவுக்கு வந்த போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம்!
14-வது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தமிழகம் முழுவதும் இன்று 3-வது நாளாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., எச்.எம்.எஸ்., ஏ.ஐ.டி.யூ.சி. உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
இதனிடையே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிலாளர் நல ஆணையம் அழைத்திருந்தது.
இதையடுத்து தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் இன்று மாலை 3 மணிக்கு போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தை நடத்தியது.
தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் லட்சுமி காந்தன் தலைமையில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
27.02.2021 04 : 25 P.M