‘பிட்ட கதலு’ – காதலின் ‘பல’ காமரூபம்!

ஓடிடி தளங்களில் சில படைப்புகளைப் பார்க்கும்போது, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டு இங்கு வந்தோம்’ என்று தோன்றும். கிட்டத்தட்ட அப்படியொரு எண்ணத்தை எழுப்பியிருக்கிறது நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ‘பிட்ட கதலு’.

தெலுங்கு திரையுலகில் புதுரத்தம் பாய்ச்சிவரும் தருண் பாஸ்கர் தாஸ்யம், பி.வி.நந்தினி ரெட்டி, நாக் அஸ்வின், சங்கல்ப் ரெட்டி ஆகியோர் முறையே ராமுலா, மீரா, எக்ஸ்லைஃப், பிங்கி என நான்கு படைப்புகளை இயக்கியிருக்கின்றனர்.

திரும்பவும் ஒரு ஆந்தாலஜி படமா என்று கேள்வி கேட்பவர்களுக்கும், துண்டுதுண்டா படம் எடுக்கிறாங்களே என்று அங்கலாய்ப்பவர்களுக்கும், இது கண்டிப்பாக சரி வராது.

காதலும் காமமும்!

முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகனான ராம்சந்தரைக் காதலிக்கிறார் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ராமுலா. திடீரென்று இருவரது காதலும் ‘கட்’ ஆகிறது.

ஒரு பெண் அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டு காமத் தூண்டிலை வீசுகிறார் ராமுலா. அதில் சிக்கியது யார் என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறது பிட்ட கதலுவின் முதல் படைப்பான ‘ராமுலா’.

விஸ்வமோகன் – மீரா தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள். வயது வித்தியாசம் 18 என்ற போதிலும், ஒரு மேல்தட்டு வாழ்வை இருவரும் மேற்கொள்கின்றனர்.

ஒருகட்டத்தில் விஸ்வமோகனின் சந்தேகம் எல்லைமீறிப் போக, தன் காதலையும் காமத்தையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார் மீரா. அதன்பின் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறது இயக்குனர் நந்தினியின் ‘மீரா’.

‘எக்ஸ்லைஃப்’ என்ற தொழில்நுட்பத்துக்குள் மனித மனங்களை முடக்கி வருகிறார் விக்ரம். பல்வேறு நாட்டு அரசுகள் அவரை ஆதரிக்க, ஒரு சிலர் கடுமையாக எதிர்க்கின்றனர்.

காதல் என்பது உடலுறவில் முடிவது என்றிருக்கும் விக்ரம், திடீரென்று தனது அலுவலக சமையலறையில் பணியாற்றும் திவ்யாவை பார்க்கிறார். காதல் பற்றிய விக்ரமின் எண்ணம் மாறியதா? எக்ஸ்லைஃபின் ஆக்கிரமிப்பில் இருந்து மனித சமூகம் விடுபட்டதா என்ற கேள்விக்குப் பதில் சொல்கிறது மீதிக்கதை.

நான்காவது கதையான ‘பிங்கி’யில் விவேக்-இந்து, ஹர்ஷா-பிரியங்கா என்ற இரண்டு ஜோடிகளைக் காட்டுகிறார் இயக்குனர் சங்கல்ப் ரெட்டி. பிரியங்கா விவேக்கின் முன்னாள் மனைவி என்பது பாதிக்கதையில் வரும் திருப்பம்.

இரண்டு தம்பதிகளில் யார் உண்மையாக காதலிக்கின்றனர் என்பதைச் சொன்னவிதத்தில், தற்போதைய தலைமுறை தாம்பத்திய உறவை அணுகும்முறையை கேள்விக்குட்படுத்துகிறார் இயக்குனர்.

நடிப்புக்கான களங்கள்!

முதலிரண்டு படைப்புகள் வழக்கமான கதை என்றபோதிலும், உள்ளடக்கத்திலும் காட்சியமைப்பிலும் புதுமையைக் காட்டுகின்றன. ஒரு கதையாகப் பார்த்தாலே, ‘எக்ஸ்லைஃப்’இல் நாக் அஸ்வினின் கற்பனையைப் பாராட்டத் தோன்றுகிறது.

‘ராமுலா’ எனும் பாத்திரத்தை மீறிக் கொண்டு திமிறுகிறது சான்வே மெஹானாவின் நவநாகரிக தோற்றம். இக்கதையில் அரசியல்வாதியாக வரும் லட்சுமி மஞ்சுவுக்கு பெரிதாக ‘ஸ்கோப்’ இல்லை என்றாலும், பெண்மை எதிர்கொள்ளும் கொடுமைகளைத் தங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சில பெண்களை பிரதிபலிக்கிறது அவரது பாத்திரம்.

காமத்தை நுகர்ந்தபிறகு காதலிக்கத் தொடங்கும் இளைஞன் ஒருவனை கண் முன்னே நிறுத்துகிறார் இதில் நாயகனாக வரும் அபய் பெதிகந்தி.

‘மீரா’வில் ஜகபதிபாபுவும் அமலா பாலும் இருப்பதால், மிகவேகமாக கதைக்குள் ஒன்றிவிட முடிகிறது. வில்லனாக பார்த்து சலித்த ரசிகர்களை ‘எண்டர்டெய்ன்’ செய்யும் வகையில், இதில் விஸ்வ மோகனாக வந்து போகிறார் ஜகபதி.

இரண்டு டஜன் பாத்திரங்கள் திரையில் தோன்றினாலும், தன் அழகால் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார் அமலா பால்.

இசையமைப்பாளராகவும் நாயகனாகவும் ‘எக்ஸ்லைஃப்’இல் தலைகாட்டியிருக்கும் சஞ்சித் ஹெக்டேவுக்கு ஜோடி ஸ்ருதி ஹாசன். இக்கதையின் திருப்பம் எதிர்பார்த்த ஒன்று என்றாலும், சஞ்சித்தின் உயிர்ப்புமிக்க நடிப்பு ‘ஜென்எக்ஸ்’ தலைமுறையைக் கண்ணில் காட்டுகிறது.

‘பிங்கி’யில் இஷா ரப்பா முதன்மை பாத்திரம் ஏற்றாலும், அவருக்கு ஈடுகொடுக்கும் வகையில் சத்யதேவ், ஸ்ரீனிவாஸ், ஆஷிமா நார்வால் மூவரும் நடித்திருக்கின்றனர். இஷாவும் ஆஷிமாவும் தாங்கள் அழகுப் பதுமைகள் மட்டுமல்ல என்று நிரூபித்திருக்கின்றனர்.

தோள் கொடுத்த கலைஞர்கள்!

‘ராமுலா’வில் விவேக் சாகரும், ‘மீரா’வில் மிக்கி ஜே மேயரும் தங்களது இசையால் திரைக்கதையில் விடப்பட்ட இடைவெளியை நிரப்பியிருக்கின்றனர். வெறுமனே நான்கு கதாபாத்திரங்களை மட்டும் திரையில் உலவவிட்டு, அவர்களது மன தடுமாற்றங்களை பின்னணி இசையில் வெளிப்படுத்தியிருக்கிறார் பிரசாந்த் விஹாரி.

‘எக்ஸ்லைஃப்’இல் மட்டும் மவுனத்துக்கான இடத்தை ஒரேடியாக சரித்திருக்கின்றனர் இசையமைத்த சஞ்சித் ஹெக்டே, சூர்யா பிரவீன் கூட்டணி.

தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்ட லதா தருண், ஜெயஸ்ரீ லட்சுமி நாராயணன், ஸ்ரீகாந்த் ராமிசெட்டி மூவரும் கதைக்களம் வெவ்வேறு என்பதை தானாக உணர வைக்கின்றனர்.

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, கலரிங், திரைக்கதை, வசனம் போன்ற அம்சங்களைப் பொறுத்தவரை நான்கு படங்களும் தனித்துவம் காட்டுகின்றன. ‘ராமுலு’வும் ‘எக்ஸ்லைஃப்’பும் திரைக்கதையாக இன்னும் கொஞ்சம் நேரம் நீண்டிருக்கலாம் என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.

நான்கு படைப்புகளும் ஷார்ட்பிலிம் எபெக்டை தாண்டி ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வைத் தருகின்றன. இதனால், குறைவான பட்ஜெட்டில் இப்படங்கள் தயாரிக்கப்பட்டிருப்பது நம் கவனத்துக்கு உட்படுவதில்லை.

இப்படங்களின் உள்ளடக்கம் வெறுமனே காதல் பற்றி மட்டும் பேசாமல் பல்வேறு திசைகளில் நீளும் காமத்தின் பாய்ச்சலையும் வெளிக் காட்டுகிறது. அதற்காக, அரை நிர்வாணக் காட்சிகளோ, அந்தரங்கத்தில் பயன்படுத்தும் அசட்டு வார்த்தைகளோ திரையில் நிரம்பியிருக்கவில்லை.

ஆனாலும், ‘பிட்ட கதலு’ என்ற டைட்டில் ‘பிட்டு படம்’ என்ற வார்த்தையை நினைவூட்டுவதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. காமத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்ட படைப்பு என்பது போன்று ‘புரமோட்’ செய்யப்பட்டாலும், அந்த எண்ணத்தை உடைத்து ஒரு நல்ல படைப்பை பார்த்த திருப்தி கிடைக்கிறது.

அப்படியொரு திருப்தியை எதிர்பார்ப்பவர்கள் மட்டுமே, ‘பிட்ட கதலு’ பக்கம் திரும்பிப் பார்க்கலாம்!

– உதய் பாடகலிங்கம்

25.02.2021 02 : 30 P.M

You might also like