விவசாயிகளின் நகைக்கடன் தள்ளுபடி!
தமிழக சட்டசபையின் இந்தாண்டின் முதல் கூட்டத்தில் கடந்த 23-ம் தேதி துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து 25-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை 3 நாட்களுக்கு பட்ஜெட் மீதான பொதுவிவாதம் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்திருந்தார்.
நேற்று நடைபெற்ற கூட்டத்தில், 110-வது விதியின்கீழ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பின்படி, “பொதுத்தேர்வு இன்றி 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்த்தப்படும்” என தெரிவித்தார்.
இதனிடையே இன்று நடைபெற்ற விவாதத்தின்போது அறிக்கைகளை வாசித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பினால் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்று திரும்ப செலுத்துவதில் சிரமத்திற்குள்ளான ஏழை, எளிய மக்களை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்திற்காக அம்மாவின் அரசு, கூட்டுறவு நிறுவனங்களில் 6 பவுன் வரை அடகு வைத்து பெற்ற நகைக் கடன்களை தள்ளுபடி செய்கின்றது.
சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த ஏழை, எளிய பெண்களின் துயர் துடைக்க, அவர்கள் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் பெற்று நிலுவையில் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்” எனக் கூறினார்.
26.02.2021 04 : 56 P.M