“நேர்மைக்கு ஓட்டு என்றால் எனக்கு போடுங்க!”

சோ-வின் ‘ஒசாமஅசா தொடர் ; 21   

எழுத்தும், தொகுப்பும் ; மணா 

மிக உயர்ந்த பொறுப்பு, அதிகாரம், புகழ் எல்லாம் இருந்தும் எளிமையாக இருப்பது என்பது மிகப்பெரிய விஷயம். உண்மையிலேயே அப்படி எளிமையாக இருந்த தலைவர் மொரார்ஜி. இன்றைய தலைமுறை இளைஞர்களுக்கு இப்படி ஒரு பிரதமர் இருந்தார் என்று நம்புவதற்குச் சற்று சிரமமாகக் கூட இருக்கும்.

டெல்லியில் இருந்த மூத்த பத்திரிகையாளரான கே.ஸ்ரீநிவாசன் மூலம் எனக்கு அறிமுகமான பல தலைவர்களில் முக்கியமானவர் மொரார்ஜி.

ஜனதா கட்சி உதயமாகி இருந்த நேரம். தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னைக்கு வந்திருந்தார் மொரார்ஜி. இரண்டு விஷயங்கள் என்னைப் பற்றி அவருக்குத் தெரிந்திருந்தது. ஒன்று – காமராஜருக்கு நெருக்கமானவன். இரண்டாவது – எமர்ஜென்சியைத் துணிந்து எதிர்த்த பத்திரிகையாளர்களில் ஒருவன்.

தி.மு.க.வுடன் அப்போது ஜனதா கூட்டணி வைத்திருந்தது. நான் அவரைப் பேட்டி கண்டபோது கேட்டேன். “ஊழலை எதிர்க்கிற நீங்கள் எப்படி தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம்.”

சிறிதும் தயங்காமல் அதற்குப் பதிலளித்தார் மொரார்ஜி.

“எங்களுடைய கூட்டணியில் ஜெகஜீவன்ராமே இருக்கிறார். அப்படி இருக்க ஊழல் செய்த வேறு யார் இருந்தாலும், தவறில்லை. சர்வாதிகாரத்தை எதிர்க்கிறபோது எங்களால் கூட்டணியில் நியாயம் பார்க்க முடியாது. ஒரு தீமையை அகற்றப் போராடுகிற இந்தத் தவறு தவிர்க்க முடியாததாகிவிட்டது. மக்கள் இதைப் புரிந்து கொண்டு எங்களை மன்னித்து ஆதரிக்கவேண்டும்.”

மிகவும் வெளிப்படையாக அவர் இதைச் சொன்னார். தன்னுடைய பதிலால் கூட்டணிக் கட்சிகள் அடையும் தர்மசங்கடத்தைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. ஆனால் எனக்கு அந்தக் கவலை இருந்தது.

“நீங்கள் சொன்னதை அப்படியே பிரசுரிக்கலாமா?”

“மற்ற பத்திரிகையாளர்களிடம் சொல்லாத விஷயத்தை உங்களிடம் சொல்லி இருக்கிறேன். அதைப் பிரசுரிப்பததோ, விடுவதோ நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.”

மொரார்ஜி இப்படி உரிமையுடன் சொன்னாலும், அவர் சொன்ன இந்த பதிலை கூட்டணிக் கட்சிகளின் நலனைக் கருதி நான் பிரசுரிக்கவில்லை. அவருடன் தொடர்ந்து நட்புடன் இருந்தேன்.

மொரார்ஜிக்கும் சரண்சிங்கிற்கும் இடையில் அப்போது கருத்து வேறுபாடு. அவர் தன்னை மதிக்கவில்லை என்பது சரண்சிங்கிற்கு மனக்குறை. அவர்கள் இருவருக்கும் இடையில் சமாதானத்தை உருவாக்க நான் முயற்சித்தேன். சரண்சிங்கைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அவர் மொரார்ஜியைப் பற்றி சொன்ன ஒரு விஷயம் அதிர்ச்சி அளித்தது.

“மொரார்ஜி எனக்கு ஏன் மரியாதை தரலை… தெரியுமா? அவர் பிராமணர். நான் பிராமணன் இல்லை. அதுதான் காரணம்.”

மொரார்ஜி பிராமணராக இருந்தாலும் அவர் பூணூல் போடுவதில்லை. பல சடங்கு, சம்பிரதாயங்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை. சுதந்திரத்திற்கு முன்பு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மொரார்ஜி போட்டியிட்டபோது அவர் பூணூல் அணியாததைக் குறிப்பிட்டு அவரை எதிர்த்து நின்ற வேட்பாளர் பிரச்சாரம் செய்தபோது, மொரார்ஜி மேடையேறிப் பேசினார்.

“நான் பூணூல் போடுவதில்லை. அது மட்டுமல்ல. மற்ற ஜாதியினரைவிட பிராமணன் உயர்ந்தவன் என்று நான் நம்பவில்லை. பூணூலுக்குத் தான் ஓட்டு என்றால் என்னை எதிர்த்து நிற்கும் வேட்பாளருக்கு ஓட்டுப் போடுங்கள். நேர்மைக்கு ஓட்டு என்றால் எனக்குப் போடுங்கள்.”

இப்படிப்பட்ட மொரார்ஜியைப் பற்றி சரண்சிங் சொன்னதும் நான் அவரிடம் சொன்னேன்.

“நீங்கள் என்னிடம் மட்டும் எப்படி மனம்விட்டுப் பேசுகிறீர்கள்? நானும் பிராமணன் தான்.”

நான் சொன்னதும் என்னுடைய கையைப் பிடித்து இழுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொண்டார் சரண்சிங்.

“நீ நல்ல பிராமணன்.”

எனக்குச் சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை.

பிரதமராக இருந்தபோது எவ்வளவு தான் எளிமையோடு மொரார்ஜி வாழ்ந்தாலும், அவருடைய மகன் காந்திலால் தேசாய் மீது, ஊழல் பண்ணி பெரும் சொத்து சேர்த்துவிட்டதாகப் பத்திரிகைகளில் புகார்கள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தில் அதைப் பெரிதாக எழுப்பின. ராஜ்ய சபாவில் பெரும் கூச்சல் தொடர்ந்து கொண்டிருந்தது.

பெரும் அமளி நடந்தபோதும் நிதானமாக இருந்தார் மொரார்ஜி. ஏதாவது ஒரு எம்.பி. தன்னுடைய மகன் மீது ஊழல் புகாரைச் சமர்ப்பிக்கட்டும். நான் நடவடிக்கை எடுக்கிறேன். அதைவிட்டு வெறுமனே குற்றச்சாட்டு சுமத்தித் தன்னை மிரட்ட முடியாது என்று தெளிவாகச் சொல்லிவிட்டார்.

அந்த அமளி நடந்து கொண்டிருந்த நேரத்தில் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்காக நான் டெல்லிக்குச் சென்றிருந்தேன். மொரார்ஜியின் குடும்பத்தைக் குறிவைத்து வைக்கப்பட்டுக் கொண்டிருந்த குற்றச்சாட்டுகளும், எதிர்க்கட்சிகளின் கூக்குரலும் எனக்குக் கவலை அளித்தன.

இதை எப்படிச் சமாளிப்பது? ஒரு யோசனை தோன்றியது. மொரார்ஜியின் மகன் காந்திலால் தேசாய் மீது நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துவிட்டால், பிரச்சினை நீதிமன்றத்திற்குப் போய்விட்டால் பாராளுமன்றத்திலும் ராஜ்ய சபையிலும் நடக்கும் ரகளைகள் ஓயும். ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்ட புகார் என்பதால், நீதிமன்றத்தில் அந்த வழக்கு தள்ளுபடியாகவும் வாய்ப்பு ஏற்படும்.

ஒரு நீதிபதியுடன் இதுகுறித்து விவாதித்து வழக்கு குறித்து உறுதிப்படுத்திக்கொண்டு மொரார்ஜியைச் சந்தித்தேன். என்னுடைய திட்டத்தைப் பற்றிச் சொன்னேன். அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ரகளையை நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், அவருக்கு உதவ வேண்டும் என்கிற நோக்கத்தில் நான் முன்வைத்த திட்டத்திற்கு அவர் காட்டிய எதிர்வினை என்னை அதிர வைத்தது.

சட்டென்று என்னைக் கடுமையான பார்வை பார்த்தார்.

“இவ்வளவு கீழ்த்தரமான திட்டங்களைப் போட கூடியவனாக நீ இருப்பாய் என்று நான் நினைக்கவே இல்லை.”

“ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை சிலர் முன்வைக்கும்போது அதை தந்திரமாக உடைப்பதில் தவறில்லை” – நான் வாதிட்டுப் பார்த்தேன்.

திட்டவட்டமாக மறுத்துவிட்டார் மொரார்ஜி.

“எனக்கு எதிராக வரும் எதிர்ப்புகளை நான் நேரடியாக நின்று சந்திப்பேனே தவிர குறுக்கு வழிகளை மேற்கொள்ள மாட்டேன். இப்போதும் என்னை எதிர்க்கும் எம்.பி.க்களில் யாராவது ஒருவர் எழுத்து வடிவத்தில் புகார்களைச் சமர்ப்பிக்கட்டும். கண்டிப்பாக நான் உரிய நடவடிக்கை எடுப்பேன். மற்றபடி என்னை எதிர்த்து அவதூறைக் கிளப்புபவர்கள் மீது தந்திரத்தைக் கையாண்டு வெற்றி பெற நான் விரும்ப மாட்டேன். அது என்னுடைய பதவிக்கு உகந்ததும் அல்ல. அதனால் நீ சொல்வதை ஏற்க மாட்டேன்.”

அவர் சொன்னதும் எனக்கு ஒரே ஏமாற்றம். இருந்தாலும் துணிந்து அவரிடம் சொன்னேன்.

“சார்… நீங்கள் இப்படிச் சொன்னாலும் நான் அதைமீறி என்னுடைய திட்டத்தின்படி வழக்குப் போட்டால், என்ன செய்வீர்கள்?”

இதை நான் சொன்னதும் அவர் இன்னும் கோபமாகி விட்டார்.

“அப்படி நீ செய்தால் அதை என்னால் தடுக்க முடியாது. ஆனால், அப்படி நீ பண்ணினால் அதற்கு பிறகு என் முகத்தில் முழிக்காதே. அதோடு நம்முடைய தொடர்பு முறிந்துவிட்டது என்று எடுத்துக்கொள்.”

நான் அவரை அதற்குமேல் மறுத்துப் பேச முடியவில்லை. தனக்குச் சிக்கலான நேரத்தில் உதவ நினைப்பவர்கள்கூட தந்திரமாக வேறு வழியில் நடப்பதை விரும்பாத மனநிலை ஒருவருக்கு வாய்த்திருக்கிறது என்றால் அது எவ்வளவு உயர்ந்த தலைமைக் குணம்?

(தொடரும்…)

22.02.2021 04 : 37 P.M

You might also like