“காற்றாய், வெளியாய், வெளிச்சமாய் இருக்கிறேன்”
கோவை மாவட்டம், வாகராயன்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை கு.முத்தரசியின் கற்பித்தல் அனுபவங்கள்…
சமூகத்தின் முதல் ஒளி, ஒரு ஆசிரியராகத்தான் இருக்கமுடியும், இல்லையா? தாய், தகப்பன், மற்ற உறவுகள் கடந்து சமூகத்தின் பிரதிநிதியாக ஒரு குழந்தையின் முன் நிற்கும் முதல் நபர் ஒரு ஆசிரியர் மட்டுமே. ஆசிரியரின் அறிவின் மூலமாகத்தான் ஒரு மனிதன் இவ்வுலகைக் காணக் கற்றுக்கொள்கிறான். அது உண்மையானதாக இருக்கும் எனவும் தீவிரமாக நம்புகிறான்.
பிரபஞ்சன் சொல்வதைப்போல இந்த இயற்கையின் இனிய பிரதிநிதி ஒரு ஆசிரியரே…. அறம் சார்ந்த விழுமியங்கள், சமூகத்தின் பண்பாட்டு நுணுக்கங்கள், தனிமனித கோட்பாடுகள் போன்ற பல்வேறு தளங்களில் குறைந்தபட்ச அறிவையேனும் தரக்கூடியவராய் இருக்க வேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை.
27 ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்து, காலங்கள் உருண்டோடிய பின்னர், நான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் போதெல்லாம், அவ்வப்போது என் ஆளுமையைச் செதுக்கி எடுத்த பல ஆசிரிய முகங்களை நினைவு கூறமுடிகிறது.
எத்தனையோ இதயங்கள் தங்களுக்குப் பிடித்தமான ஆசிரியர்களை நினைத்துக் கொள்ளும் தருணங்கள் எல்லாம், ஆசிரியர்களின் அறிவின் வெளிப்பாடாய் இல்லாமல், அன்பின் நிழல் படிந்த செயல்கள் தரும் நறுமண நினைவுகளால் மட்டுமே நிறைந்திருக்கிறது..
நரைகூடி உடல் தளர்ந்து முதுமையை எட்டிய பின்னரும்கூட புன்னகை மிளிர்ந்த தன் இளமைக்கால ஆசிரியரின் முகத்தைத்தான் தங்கள் காலமெல்லாம் நினைவில் ஏந்தியிருக்கிறார்கள் பலர்.
முதன்முதலில் 40 குழந்தைகள் முன்பு ஆசிரியராய் நின்ற படபடப்பான தருணம் இன்னமும் நினைவில் மிணுங்குகிறது. ஆரம்பப் பணிக்காலம் வாய்த்தது தனியார் பள்ளிகளில்தான். திறம்படப் பாடம் நடத்துவதைத்தவிர வேறு எந்த சவால்களும் வகுப்பறைக்குள் வராத காலங்கள் அவை.
மனதிற்குப் பிடித்த பணியானதாலும், ஆசிரியர் என்பதொரு உணர்வில் கரைந்து இருந்ததாலும், பணியைக் கற்றுத் தேர்வது ஒன்றும் பெரும் சிரமமாகத் தோன்றவில்லை. பள்ளிகள் மாற மாற, அனுபவங்கள் அதிகமாக அதிகமாக, ஆசிரியப்பணி குறித்தான என் மதிப்பீடுகளும் பெருமளவு மாறத் துவங்கியது. பிள்ளைகளின் மனதில் எனக்குரிய இடத்தைத் தேடத் துவங்கியது மனம்.
பதினைந்து ஆண்டுகள் தனியார்ப் பள்ளி அனுபவத்திற்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்து அந்தக் குழந்தைகள் முன்பு நின்றபொழுதுதான் நான் என்னை வேறுவிதமாக அடையாளம் காணத் தொடங்கினேன்.
வாழ்நாளில் ஒரு முறையேனும் “சாப்பிட்டியாம்மா” என்கிற பிரியம் நிறைந்த ஒரு வார்த்தையைக் கேட்டிராத குழந்தைகள், கல்வி மட்டுமே தனக்கான ஒரே ஆயுதம் என அறியாத வெள்ளந்தி இதயங்கள், என் ஆசிரியத்தின் வேறொரு பிம்பத்தைக் கோரியது. அவமானங்களைப் புறந்தள்ளிவிட்டு ஓடும் மனநிலையை வாய்த்த அந்தக் குழந்தைகள் என் கரம் பற்றும்போதெல்லாம் என் உள்ளே ஒரு பேரன்பு கிளர்ந்து எழுந்ததை உணரமுடிந்தது.
பதினோராம் வகுப்பில் “கையக் கட்டாம என் கண்ணப் பாத்து பேசும்மா” என்பதில் துவங்குகிறது, எனக்கும் என் பிள்ளைகளுக்குமான நாட்கள். அநேகமாய் என் அனைத்து வகுப்புகளிலும் பாடம் தவிர்த்த ஏதேனும் ஒரு சிந்தனைப் பகிர்வு ஏராளமாய் இருக்கும்.
பதின்பருவ மாற்றங்கள், அது சார்ந்த குழப்பங்கள், அவற்றிற்கான தீர்வுகள், மேற்படிப்பு குறித்தான பார்வை, தனக்கான தனித் திறமையை அடையாளம் காணுதல், வேலை சார்ந்த கனவுகள் எனப் பேசப் பேச நீண்டுகொண்டே போகும் வகுப்பறைகள் எங்களுக்கேயானவை!!
ப்ளஸ் டூ முடித்து பெரும் கனவுகளுடன் வெளிவரும் குழந்தைகளுக்கென கல்லூரி சேர்க்கையில் நீண்ட வரிசையில் காத்திருக்கிறோம் நானும் என் குழந்தைகளும். முக்கிய கல்லூரி முதல்வர்களிடம் நேரடியாகப் பேசி சேர்க்கை பெற்று, காப்பாளர் என்கிற இடத்தில் கையெழுத்திட்டுவிட்டு, கைதட்டல்களுக்கிடையே அவர்கள் பட்டம் வாங்க மேடையேறும் நாட்களுக்காக கனவுகளோடு காத்திருக்கிறேன். அவர்களின் கல்லூரிக் கட்டணத்திற்கென எவரெவரிடமோ கையேந்துகிறேன்.
தங்கள் வாழ்வில் மிக நீண்ட பயணத்தில், அவர்களின் கல்லூரி வாழ்வியலை என்னிடம் பகிரும்போதெல்லாம் நண்பராகிப் போகிறேன். ஏதேனும் ஒரு நாள் அவர்கள் காதலில் விழுந்து, திருமணம் கைகூடி, முகம் மலர்ந்து கைகூப்பி நிற்கையில், நிறைந்த மனதோடு ஆசீர்வதித்துத் திரும்புகிறேன்.
ஆற்றாமை தாளாமல் ஒரு நாள் சூரியன் நிலவிடம் கேட்டதாம், “என்னிடமிருந்து பெரும் ஒளியைத்தானே நீ பிரதிபலிக்கிறாய், ஆனாலும் உன் ஒளியை நேசிப்பவர், என்னை, என் பிரகாசத்தை வெறுப்பதேன்” என நிலவு புன்னகையோடு “என் ஒளி என எதுவுமே என்னிடம் இல்லை.
சூரியனிடமிருந்து பெறும் ஒளியை மட்டுமே நான் பிரதிபலிக்கிறேன்…. ஆகவே என்னை யாரும் கொண்டாட வேண்டுவதில்லை என்கிற பேருண்மையை நான் அனைவரிடமும் சொல்லி விடுகிறேன்… அதனால் என்னிடம் சுமப்பதற்கென எதுவுமில்லை. அதனாலாகக் கூட இருக்கலாம்” என…
பறக்கும் பறவையின் இறகைக் காற்று சுமப்பதுபோல என் பிள்ளைகளின் பிரியமே என்னை வழிநடத்துகிறது. நான் சொன்ன சொல்லில் நிற்கும் என் பிள்ளைகளை எப்போதும் என் நெஞ்சில் நிறுத்தியிருக்கிறேன். அவர்களின் வாழ்வை, வளர்ச்சியை, உயரத்தைப் பிரமிப்புடன் பார்த்துக்கொள்கிறேன்.
எவரையும் என் கரங்களுக்குள் இறுக்கிக் கொள்வதில்லை. அவர்களின் வானத்தை, அவர்களின் உயரத்தை, அவர்கள் அடைய காற்றாய், வெளியாய், வெளிச்சமாய் மட்டுமே இருக்க விரும்புகிறேன்.
– தான்யா
22.02.2021 02 : 55 P.M