காற்று மாசை குறைக்க முன்வர வேண்டும்!
பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணைந்துள்ள நிலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து ஐ.நா. தலைமையில் நடைபெற்ற முக்கியக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க சிறப்பு தூதர் ஜான் கெரி, “கடந்த 2015ம் ஆண்டு பாரிஸ் பருவநிலை மாற்றம் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தத்தில் அப்போது இந்திய அரசும் இணைந்தது. இதனையடுத்து, கிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியீட்டை ஒப்பந்த வரம்புகளுக்கு உட்பட்டு இந்தியா 33 முதல் 35% வரை வெகுவாகக் குறைத்தது.
இதேபோல ரஷ்யா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தாங்கள் தொழிற்சாலைகள் மூலமாக வெளியிடும் மாசுவின் அளவை குறைத்தால் 2050ம் ஆண்டுக்குள் ஐநா நிர்ணயம் செய்துள்ள இலக்கை எட்டி விடலாம்.
காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவைக் குறைப்பது மிக அவசியம். 2050ம் ஆண்டுக்குள் பூஜ்ஜிய மாசுபாடு என்ற அளவை எட்ட வேண்டும் என்றும் அதற்கு கரியமில வாயுவைக் காற்றில் அதிகமாகக் கலக்கும் இந்தியா உள்ளிட்ட 17 நாடுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “உலகிலேயே அதிகளவில் கரியமில வாயுவைக் காற்றில் கலந்து வரும் சீனா, இந்தியா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காற்று மாசுபாட்டைக் குறைக்க இன்னும் 10 ஆண்டுகளில் நாம் என்ன நடவடிக்கை எடுக்க போகிறோம் என்பது மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
காற்று மாசுபாடு பல்வேறு விதமான காரணிகளால் ஏற்படுகிறது. குறிப்பாகத் தொழிற்சாலைகள், வாகனங்கள், அதிகரிக்கும் மக்கள் தொகை, நகரமயமாக்கம் போன்றவை காற்று மாசுபடுதலை ஏற்படுத்தும் முக்கியமான காரணங்களாகும். இவற்றுள் எல்லா காரணிகளும் மனிதர்களின் கட்டுப்பாட்டில் இல்லை.
பாலைவனங்களில் ஏற்படும் தூசு நிறைந்த புயல் காற்றுகள், காட்டுத் தீயினால் ஏற்படும் புகை, புற்கள் எரிவதால் ஏற்படும் புகை போன்றவை காற்றில் ரசாயனங்கள் மற்றும் தூசுக்கள் கலந்து காற்று மாசுபாடு ஏற்படக் காரணமாக அமைகிறது. இதே நிலை நீடித்தால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு காற்று மாசு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே மாசுபாட்டைக் கட்டுப்படுத்த முடியும்.
காற்று மாசைக் கட்டுப்படுத்தும் வழிகள்:
அதிக அளவில் மாசை ஏற்படுத்தக் கூடிய எரிபொருளுக்கு பதிலாக குறைந்த அளவில் மாசு உண்டாக்கக் கூடிய மாற்று எரிபொருளை பயன்படுத்தலாம்.
வீடுகள், தொழிற்சாலைகள், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையைக் குறைத்தல், பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்தல், குப்பைகளை எரிக்காமல் குப்பைத் தொட்டியில் போடுதல், காற்று மாசுபாட்டைக் குறைக்கும் அனைத்து சட்டங்களையும் பின்பற்றுவது ஆகியவற்றைக் கடைபிடித்தாலே காற்று நஞ்சாவதைக் குறைக்க முடியும்.
இது எல்லாவற்றையும் விட, மரம் வளர்ப்பது காற்று மாசைக் குறைக்கும் மிக முக்கிய காரணியாகப் பார்க்கப்படுகிறது. அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தால் உயிர் வாழ்வுக்கு அடிப்படை தேவையான ஆக்சிஜன் மனிதனுக்கு போதிய அளவு கிடைக்கவும் வழி செய்கிறது. சூரிய ஒளியில் தாவரங்கள் ஒளிச்சேர்கையின் போது கார்பன்டை ஆக்சைடு மூலம் உணவு உற்பத்தி செய்வதுடன் காற்று மாசுபாடு அடைவதையும் கட்டுப்படுத்துகிறது.
ஒரு ஹெக்டர் பரப்பிலுள்ள மரங்கள் ஓராண்டில் மூன்று டன் கார்பன்டை ஆக்சைடை உட்கிரகித்து இரண்டு டன் ஆக்சிஜனை வெளியிடுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால் எளிதில் காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும்.