அறுவடையும் செய்வோம், போராட்டமும் நடத்துவோம்!

மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் டெல்லி எல்லையில் கடந்த 80 நாட்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

மத்திய அரசுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் எந்தவித உடன்பாடும் ஏற்படாததால், டிராக்டர் பேரணி, சாலை மறியல், ரயில் மறியல் என போராட்டங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில், டெல்லி எல்லையில் பெரிய அளவில் விவசாயிகளை குவித்துப் போராட்டத்தைப் பலப்படுத்த விவசாய அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. மேலும், இம்மாத இறுதியில் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து பேசிய சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைப்பின் மூத்த தலைவர் ராகேஷ் திகைத், “பயிர் விலைகள் உயர்த்தப்படவில்லை, ஆனால் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் ஏற்றுகின்றனர். இப்படியே மத்திய அரசு சென்று கொண்டிருந்தால் நாங்கள் எங்கள் டிராக்டர்களை தேர்தல் களமான மேற்கு வங்கத்துக்கும் கொண்டு செல்வோம்.

அங்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்கவில்லை. விவசாயிகள் மீண்டும் பயிர்த்தொழிலுக்குச் செல்வார்கள் என்ற எந்த ஒரு தவறான கண்ணோட்டத்தையும் மத்திய அரசு கொள்ள வேண்டாம்.

அவர்கள் எங்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் முனைப்புக் காட்டினால் நாங்கள் பயிர்களை எரித்து விடுவோம். போராட்டம் 2 மாதங்களில் முடியும் என்று மட்டும் நினைத்துவிட வேண்டாம். நாங்கள் அறுவடையும் செய்வோம் போராட்டமும் நடத்துவோம்” என்று கூறினார்.

19.02.2021 03 : 30 P.M

You might also like