ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், புதுவை வந்த ராகுல்காந்தி சோலை நகரில் மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்குச் சென்றார். அங்கு பாரதிதாசன் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தியபின், கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

இந்தக் கூட்டத்தில் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், வைத்திலிங்கம் எம்பி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த ராகுல்காந்தி, “அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீதம் என்பதைவிட 60 சதவீதம் வழங்குவது அவசியம். நீதிமன்றங்கள், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை உள்ளிட்டவற்றை இளம்பெண்கள் அதிக அளவு ஆக்கிரமித்து, அவை சுயமாக செயல்படும்படி செய்தால் ஜனநாயகம் வலுப்படும். நாட்டில் பல்வேறு கலாசாரங்கள், மொழிகள் உள்ளன. அவற்றை பாதுகாக்க வேண்டும். தமிழ்க் கலாசாரத்தை மதிக்கிறேன்.

மொழி, கலாசாரம் என எதையும் நான் மற்றவர்கள் மீது திணிக்க மாட்டேன். பல்வேறு சிந்தனைகளைக் கொண்டது தான் இந்தியா. பெண்களுக்கு பெண்களால் தான் பாதுகாப்பு அளிக்க முடியும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். கேள்வி கேட்கும் மனப்பான்மையை மாணவ, மாணவிகள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகளிடம் எவ்வித கூச்சமும் இன்றி கேள்வி எழுப்ப வேண்டும். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் கோபம், வன்மம் எனக்கு இல்லை. அப்பாவை இழந்தது கடினமான தருணம். இதயமே பிளந்தது போன்ற உணர்வு அப்போது இருந்தது. அப்பாவை இழப்பது எவ்வளவு வேதனையாக இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

அதில் தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன். வன்முறை மூலம் நம்மிடம் இருந்து எதையும் எடுத்துவிட முடியாது. என்னுடைய தந்தை இப்போதும் என் மனதில் வாழுகிறார். அவர் இறந்ததாக நான் நினைக்கவில்லை”  என்று பேசினார்.

17.02.2021 12 : 33 P.M

You might also like