“மெட்டி ஒலி முதல் அசுரன் வரை”
சினிமா மாயங்களின் குழந்தை. அது உங்கள் ஆசையைத் தூண்டித் தூண்டி, உயரத்துக் கொண்டு செல்லும் வித்தையை ஒரு கடமையாகவேச் செய்கிறது. அதே நேரம், உங்களைப் பாதாளத்தில் தள்ளும் பாவத்தையும் இரக்கமின்றி செய்கிறது. அதனால்தான் அது சினிமா.
இங்கு வெற்றி பெற்றிருக்கிற, திரைப் பிரபலங்களுக்குப் பின்னால் பெரும் போராட்டம் இருக்கிறது அல்லது சிலருக்கு எளிமையாக வாய்த்திருக்கிறது. அதுவும் இதுவும் இரண்டுமாக இருக்கிறது.
இந்தக் கனவுக் கோட்டைக்குள் பெரும் எதிர்பார்ப்போடு நுழைந்த பெரும்பான்மை கூட்டத்துக்குள் நானும் ஒருவன். அந்தக் கோட்டையின் கதவுகளைத் தட்டித் தட்டி, ஓடி, ஓய்ந்து நொறுங்கிப்போன நேரத்தில் சில வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறேன். அதன்மூலம் ஓரளவு என் சினிமா ஆசை நிறைவேறி இருக்கிறது. ஆனால், அது முழுமையடையாத அரை வட்டம்.
தொண்ணூறுகளில் ஆசைகளைத் துணிப்பையில் அமுக்கிக் கொண்டு சென்னை வந்து சேர்ந்த சாதாரண கிராமத்து அப்பாவி நான். எப்படிப் பேச வேண்டும், எதைப் பேச வேண்டும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது தெரியாமல் பல அவமானங்களை எளிதாகப் பெற்ற பாக்கியசாலிகளுள் நானும் ஒருவன்.
முதலில் பாடலாசிரியனாவது, பிறகு யாரிடமாவது உதவி இயக்குனராகச் சேர்ந்து இயக்குனராவது கனவு. இதே கனவோடுதான் பெரும்பாலனவர்கள் சென்னைக்கு வந்திறங்கி இருக்கிறார்கள் என்பதை யாரிடமாவது பேசும்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
ஏதாவது ஓர் இயக்குனரோ இசை அமைப்பாளரோ, தன் திறமையைப் பார்த்து, உடனடியாக பாடல் வாய்ப்பைக் கொடுத்து விடுவார் என்றே சில இயக்குனர்களின் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் நடையாக நடந்தேன்.
அப்போது சினிமா வாய்ப்பு அவ்வளவு எளிதல்ல. சின்ன வாய்ப்புக்காக தவம் கிடக்காத குறைதான். சிலர் மரியாதையாகவும் சிலர் ஏளனமாகவும் நடத்தினார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. வாய்ப்பு கேட்டு வரும் எத்தனைப் பேருக்குத்தான் அவர்களும் பதில் சொல்லிக் கொண்டிருப்பார்கள்?
இருந்தாலும் என் ஆசை என்றாவது ஒரு நாள் நிறைவேறும் என்பதில் உறுதியாக இருந்தேன். நினைத்தபடியே பாடல் எழுதும் எனது ஆசை ஒரு நாள் நிறைவேறியது.
டிவி சீரியல்கள், பிரபலமாகிக் கொண்டிருந்த நேரத்தில் பழக்கமானார் இயக்குனர் திருமுருகன். பிலிம் இன்ஸ்டிடியூட்டில் கோல்ட் மெடலிஸ்ட். நேரில் சந்திக்கவில்லை என்றாலும் போனில் பேசிக் கொண்டிருந்தோம் சில மாதங்களாக. அப்போதுதான் அவரிடம் என் பாடல் எழுதும் ஆசையைச் சொன்னேன். அவர் மனதில் வைத்துக்கொண்டார். என்னிடம் ஏதும் சொல்லவில்லை.
பிறகு அவர் ‘மெட்டி ஒலி’ சீரியலை ஆரம்பித்து, அது வெற்றிகரமாகச் சென்று கொண்டிருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் அந்தத் தொடர் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த காலம். திடீரென்று ஒரு நாள் அவரிடம் இருந்து ஃபோன். “எங்க இருக்கீங்க?” என்று. அப்போது நண்பர் மலையப்பன் புதிதாக கார் வாங்கியிருந்தார். அவர் மற்றும் நண்பர்கள் கோசல்ராம், வெங்கடேஷ், சுந்தரமூர்த்தி ஆகியோருடன் திருப்பதி சென்றிருந்தேன். அங்கு இருப்பதாக அவரிடம் சொன்னேன்.
சென்னைத் திரும்பியதும் “வந்து பாருங்க” என்றார். வந்ததும் உடனடியாக அவர் அலுவலகத்துக்குத்தான் சென்றேன். சிறிது நேரம் பேசிவிட்டு, “பாட்டு எழுதணும்னு சொன்னீங்கள்ல, இந்த சீரியல்ல ஒரு வாய்ப்பு இருக்கு. சோகப்பாடல். இதுதான் சிச்சுவேஷன். இதுதான் ட்யூன். எழுதிட்டு வாங்க” என்றார்.
கிட்டத்தட்ட பதட்டமாகவே ஆகிவிட்டது எனக்கு. தேடித்தேடி, பல கதவுகளைத் தட்டித்தட்டி கிடைக்காத வாய்ப்பு, இதோ வந்திருக்கிறது. அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. பெரிய கும்பிடு போட்டுவிட்டு, உடனடியாக வீட்டுக்கு வந்து எழுத ஆரம்பித்தேன்.
இசையமைப்பாளர் தினா, அந்த ட்யூனை சிறப்பாக அமைத்திருந்தார். சில பல்லவிகளையும் சரணங்களையும் எழுதிக் கொடுத்திருந்தேன். அதில் ஒரு பல்லவியையும் ஒவ்வொரு கேரக்டருக்கான சரணங்களையும் தேர்வு செய்தார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரலில் அந்தப் பாடல் பதிவானது. அந்த நேரத்தில் எனக்கிருந்த சுக மனநிலையை விவரிக்க முடியாது. பாடலோடு, என் பெயரையும் கேட்டு தனது நோட்டில் குறித்துக் கொண்ட எஸ்.பி.பி., “இதுதான் முதல் பாடலா, நல்லா வருவீங்க.. வாழ்த்துகள்” என்று என் முதுகில் தட்டினார். இப்போது தட்டியது போலவே இருக்கிறது.
சூப்பர் ஹிட்டான அந்தத் தொடரில் எனது முதல் பாடல் அமைந்ததில் எனக்குப் பெருமை. நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஏனென்றால், அந்தப் பாடல் டிவியில் ஒளிபரப்பாகி, அதை நான் தான் எழுதியிருக்கிறேன் என்று தெரிந்ததும், என் அம்மா அடைந்த ஆனந்தத்தை எழுத்தில் வர்ணிக்க முடியாது. இதற்காக இயக்குனர் திருமுருகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாதுதான்.
அந்தப் பாடலின் பல்லவி இது:
மனசே மனசே துடிக்குது மனசே
மனசே மனசே துடிக்குது மனசே –
மனம் விட்டுப் பேசத் துடிக்குது மனசே – மனம்
நினைத்த வாழ்க்கை இல்லை – இங்கு
கிடைத்த வாழ்வும் தொல்லை – தினம்
முட்டி மோதவும் மூச்சுவாங்கவும்
ஜென்மம் போதவில்லை.
எல்லாம் கனவா, இல்லை நனவா
வாழ்க்கைப் பூவா, முட்கள் தீவா?
(தொடரும்…)
18.02.2021 12 : 12 P.M