எம்.ஜி.ஆர் ஆத்திகரா, நாத்திகரா?

வாழ வழி காட்டும் எம்.ஜி.ஆர்: தொடர் – 4

எம்.ஜி.ஆர் ஆத்திகரா, நாத்திகரா? அதுவும் ஆரம்ப காலத்திலிருந்து தி.மு.க.வில் இருந்தவர், ஈ.வே.ரா. அவர்களுடன் பழகியவர், நாத்திகக் கருத்துக்களை வெளிப்படையாகப் பதிவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அறிஞர் அண்ணாவைத் தனது அரசியல் குருவாக ஏற்று கொண்டவர் என்னும்போது இந்தக் கேள்வியின் வீரியம் கூடியது.

‘பொம்மை’ இதழின் இரண்டாவது ஆண்டு மலருக்காக, எம்.ஜி.ஆரை ஜெயலலிதா பேட்டி கண்டார். அந்தப் பேட்டியில் ‘‘உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?’’ என்ற ஜெயலலிதாவின் கேள்விக்கு கொஞ்சமும் தயங்காமல் ‘‘நிச்சயமாக உண்டு’’ என்று எம்.ஜி.ஆர். பதிலளித்தார்.

தனது கடவுள் நம்பிக்கையை அவர் மூடி மறைத்ததே இல்லை. அதற்காக, பரிவாரங்கள் புடைசூழ, சகல மரியாதைகளுடன் ஆர்ப்பாட்டமாக அவர் கோயிலுக்குச் சென்றதுமில்லை.

எதிலும் நிதானமாக சீர்தூக்கிப் பார்த்துப் பார்த்துச் செயல்படும் எம்.ஜி.ஆரின் குணாம்சத்தோடு இந்த நடத்தை மிகவும் ஒத்துப் போகிறது. படங்களிலும் தன் வாயினால் கதைக்காகக்கூடக் கெட்ட விஷயங்களைப் பேசுவதை கவனமாகத் தவிர்த்தே வந்தார். மேலும் திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் தெரிந்த விஷயம், அவர் தன் படங்களில், ஏறக்குறைய எல்லா விஷயங்களிலும் தலையிடுவார் என்பதுதான்.

குறிப்பாக, பாடல்கள், அதை எழுதும் கவிஞர்கள், வசனங்கள் போன்றவற்றை முடிவு செய்யும்போது மிகவும் கவனமாக இருப்பார். அதற்குக் காரணம் மக்களிடத்தில் தனக்கு இருந்த பெயர், அதற்கான காரணங்கள் பற்றி தெளிவாக அறிந்து வைத்திருந்தார்.

அந்தப் பெயரைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மட்டும் இதுபோல நடந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு தன் மூலமாகத் தவறான எந்த விஷயமும் போய்விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

இது போன்ற அக்கறையுடன், அதற்கு முன்போ அவருக்குப் பின்போ யாரும் இருந்ததில்லை. அவர் இருந்த சமகாலத்தில் அவரைப் போலவே செல்வாக்கு பெற்றிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் உள்ளிட்ட யாரும் இதைப்பற்றி பெரிதாகக் கண்டு கொண்டதில்லை. இதே அணுகுமுறைதான் கடவுள் நம்பிக்கை குறித்தான விஷயத்திலும்  இருந்தது.

எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது கழுத்தில் மணிமாலையுடன் நெற்றியில் திருநீறு அணிந்து இருப்பார். அண்ணாவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்த பிறகு மதச் சின்னங்களை அணிவதில்லை.

திமுகவில் சேர்ந்த பிறகு புராண, பக்திப் படங்களில் நடிப்பதை தவிர்த்தார். இதனால், தேடி வந்த பல பட வாய்ப்புகளை நிராகரித்தார். இத்தனைக்கும் அந்தக் காலகட்டத்தில்  படவாய்ப்புகளை நம்பித்தான் வாழ்க்கை நடத்தி வந்தார். ஆனாலும், தான் நம்பியதை மட்டுமே பின்பற்றி வந்தார் எம்.ஜி.ஆர்; அது வாழ்க்கையானாலும் சரி,  திரைப்படமாக இருந்தாலும் சரி .

அதற்காக, கடவுள் மறுப்புக் கொள்கையைப் பேசும் வசனங்களையும் அவர் பேசியதில்லை. தனது சொந்த தனிப்பட்ட நம்பிக்கை என்பது வேறு, அதில் எதை மக்களிடத்தில் கொண்டு செல்வது என்ற முடிவு வேறு என்பதில் தெளிவாக இருந்தார்.

ஆண்டவனின் பெயரால் மூடநம்பிக்கையைப் பரப்புவதும் மக்களை ஏமாற்றுவதுமான காரியங்கள் கூடாது என்றுதான் எம்.ஜி.ஆர். கருதினாரே தவிர, கடவுள் மறுப்புக் கொள்கையை அவர் பிரச்சாரம் செய்தது இல்லை.

‘கோயில் கூடாது என்பது அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது’ என்ற கலைஞரின் பராசக்தி பட வசனக் கருத்துடன் உடன்பட்டவர்.

எந்த மதத்தினரின் நம்பிக்கைகளையும் எம்.ஜி.ஆர். புண்படுத்தியதில்லை. தனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்பதை அவர் மறுத்ததும் இல்லை. நாடகக் கம்பெனியில் நடித்துக் கொண்டிருந்தபோது திருப்பதி சென்று வெங்கடாசலபதியை தரிசித்திருக்கிறார். ‘மர்மயோகி’ படம் வெளியானபோது இரண்டாவது முறையாக திருப்பதி போய் வந்ததை எம்.ஜி.ஆரே கூறியிருக்கிறார்.

அதே சமயம், அவரது மனதில் கடவுளைப் பற்றியும் பக்தியைப் பற்றியும் தத்துவார்த்தப் புரிதலும் இருந்திருக்கிறது. இதை, எம்.ஜி.ஆர். நடித்த ‘நம்நாடு’ படத்துக்காக ‘ஆனந்த விகடன்’ இதழில் அவரது சிறப்புப் பேட்டி வெளியானது. அந்தப் பேட்டியில் எம்.ஜி.ஆரின் கருத்துகள் கடவுள் நம்பிக்கை பற்றிய அவரது தெளிவான சிந்தனையைக் காட்டியது.

அந்தப் பேட்டியில், ‘‘பக்தி பரிசுத்தமானது. பக்தன் பரிசுத்தமானவன். முன்பெல்லாம் மக்கள் கடவுளை தங்கள் மனதில் வைத்திருந்தார்கள். இப்போதோ, கடவுள் கோயில்களில் இருப்பதாகத்தான் நினைக்கிறார்கள். இதனால்தான் பிரச்சினைகளே வந்தன’’ என்று எம்.ஜி.ஆர். கூறியிருந்தார்.

ஆனாலும் கூட அவர் கோவில்களுக்குப் போக வேண்டாம் என்றோ, அதை எதிர்த்தோ எதையும் கூறவில்லை. பக்தி மனிதர்களை இணைக்க வேண்டுமே தவிர, பிரிக்கக் கூடாது என்பதையே இந்த வகையில் கூறியிருந்தார்.

துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது நண்பரும் தீவிர முருக பக்தருமான சாண்டோ சின்னப்பா தேவர், தினமும் கோயிலில் எம்.ஜி.ஆர். பெயருக்கு அர்ச்சனை செய்து மருத்துவமனை சென்று பிரசாதம் கொடுப்பார். இந்த சம்பவத்துக்குப் பின் எம்.ஜி.ஆர், வெளிப்படையாக கடவுள் நம்பிக்கை தொடர்பான வேடங்களை ஒப்புக் கொண்டார். மக்கள் மத்தியிலும், கோவில்கள் தொடர்பான நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைத் தவிர்க்கவில்லை.

உடல் குணமாகி ‘விவசாயி’ படப்பிடிப்பின்போது மருதமலை சென்று முருகன் கோயிலில் அவரை மிகவும் நேசித்த சின்னப்பா தேவரால் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கு வசதியையும் எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார்.

‘தனிப்பிறவி’ படத்தில் ஜெயலலிதா பாடும் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆர். முருகன் வேடத்தில் தோன்றுவார். அது ஜெயலலிதா காணும் கனவுக் காட்சி. ‘உழைக்கும் கரங்கள்’ படத்தில் சிலைத் திருட்டைத் தடுப்பதற்காக சிவன் போல வேடம் அணிந்து வந்து வில்லன்களை விரட்டுவார். இதெல்லாம் அவரது மனப்பூர்வமான ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்கவே முடியாது.

பின்னாளில், படப்பிடிப்புக்காக கர்நாடகா சென்றிருந்த போது, இயக்குநர் சங்கர் அவரை கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு பலமுறை மூகாம்பிகை கோயிலுக்குப் போய் தரிசித்திருக்கிறார். அந்தக் கோவிலில், அங்கிருக்கும் தெய்வ உருவின் மீது எம்.ஜி.ஆருக்கு மிகுந்த ஈர்ப்பு எற்பட்டது. அதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படையாகத் தெரிவித்திருந்தார். ‘‘மூகாம்பிகை வடிவில் என் தாயை பார்க்கிறேன்’’ என்று  அவர் கூறியிருக்கிறார்.

1977ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வரானதும் வித்தியாசமான முறையில், ‘பொம்மை’ இதழுக்காக அவரை நடிகை லதா பேட்டி கண்டார். ‘‘காஞ்சிப் பெரியவரை சமீபத்தில் தரிசித்துப் பேசினீர்களா?’’ என்று லதா ஒரு கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த எம்.ஜி.ஆர்., ‘‘ஒரு நல்ல துறவியை, பற்றில்லாத மனத்தினரை, பிறருக்காக வாழ்வதே மாந்தர் கடமை என்ற தத்துவத்தின் ஒட்டுமொத்த உருவமாக காட்சியளித்த ஒரு பெரியவரை நான் கண்டேன்’’ என்று பரமாச்சாரியாரைப் பற்றி கூறினார்.

இது போல காஞ்சிப் பெரியவரைப் பற்றி மிகத் தெளிவாக, சரியான புரிதல்களுடன், அவரை பக்திப் பெருக்குடன் பின்பற்றுபவர்கள்கூட சொல்லியிருக்க முடியாது.

எம்.ஜி.ஆர். ஒருபோதும் தன்னை பெரும் பக்தராகக் காட்டிக் கொண்டதில்லை. மதச் சின்னங்களை ஆரம்ப காலத்தில் அணிந்திருந்தது போல ஒரு கட்டத்திற்கு மேல் அணிந்து கொண்டதில்லை. தான் அனைவருக்கும் பொதுவானவன் என்பதை அவர் மனதின் ஆழத்தில் பதிந்திருந்தது.

மற்றவர்களை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் இவ்வாறு நடந்து கொள்ளவில்லை. பக்தி என்பது தனிப்பட்ட விஷயம். அதற்கான சின்னங்கள் இருந்தால்தான் நம்பிக்கை உடையவர் என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த முடியும் என்பதில் அவருக்கு உடன்பாடு இல்லை.

அதே சமயம், அவர் எந்தக் காலத்திலும் தன்னை நாத்திகராகக் காட்டிக்கொண்டது இல்லை. அந்தக் கருத்துக்களோடு ஒத்துப்போன காலத்திலும் கடவுள் நிந்தனையை மறைமுகமாகக்கூட எந்த ஒரு திரைப்படத்திலும், ஒரு இடத்திலும் புகுத்தியதே கிடையாது. அதேபோல கோவில்களுக்கு போனபோதும், அவற்றை மறுத்ததும் இல்லை. மற்ற விஷயங்களைப் போலவே இதிலும் மிக சமச்சீரான மனநிலையையும் அதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளிலும் தன்னை வெளிப்படுத்தி வந்தவர் எம்ஜிஆர்.

(தொடரும்…)

17.02.2021 03 : 33 P.M

You might also like