புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை பதவியேற்கிறார் தமிழிசை!
கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி கிரண்பேடிக்கும் அம்மாநில முதல்வர் நாராயணசாமிக்கும் இடையே அதிகார மோதல் நிலவி வந்தது.
இந்நிலையில், ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஆகியோர் 39 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆளுநர் மாளிகை முன் தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதனிடையே மக்கள் நலத் திட்டங்களைத் தடுப்பதாலும், கட்டாய ஹெல்மெட் சட்டத்தைக் கண்டிப்பாக அமல்படுத்த உத்தரவிட்டதாலும் பாஜவுக்கு மக்கள் மத்தியில் கெட்ட பெயர் ஏற்படுகிறது என கூறி கிரண்பேடிக்கு எதிராக புதுச்சேரி பாஜகவினர் 5 முறை உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருக்குக் கடிதம் அனுப்பினர்.
அண்மையில் அமித்ஷாவை நேரில் சந்தித்த பாஜவினர் கிரண்பேடி விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு ஏற்படும் என தெரிவித்திருந்தனர்.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையில், புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்றிரவு திடீரென நீக்கினார்.
அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சௌந்திர ராஜனை புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாகக் கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் அறிவித்துள்ளார்.
அதன்படி, புதுச்சேரி துணைநிலை பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கான ஆணையை, தமிழிசை சௌந்தரராஜனிடம் புதுச்சேரி ஆணையர் வழங்கினார்.
இதையடுத்து தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நாளை காலை 9 மணிக்கு பொறுப்பேற்க உள்ளார்.
17.02.2021 05 : 13 P.M