தோனியின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 329 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 161 ரன்களும், ரஹானே 67 ரன்களும், ரிஷாப் பண்ட் ஆட்டம் இழக்காமல் 58 ரன்களும் எடுத்தனர்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 134 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பென் போக்ஸ் 42 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.
195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சைத் தொடங்கிய இந்திய அணி, அஸ்வினின் (106 ரன்கள்) அபார சதம், விராட் கோலியின் (62 ரன்கள்) பொறுப்பான ஆட்டம் ஆகியவற்றால் 286- ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.
இதன்மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
482 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய வீரர்களின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 164 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் 5 விக்கெட், 2-வது இன்னிங்சில் சதம், 3 விக்கெட் வீழ்த்திய அஷ்வின் ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
இது, விராட் கோலி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் பெறும் 21-வது வெற்றியாகும். இதன்மூலம் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் பட்டியலில் எம்.எஸ்.தோனியுடன் இணைந்துள்ளார் விராட் கோலி. ஏற்கனவே தோனி தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் 21 வெற்றிகள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
16.02.2021 05 : 32 P.M