சிவகார்த்திகேயனும் ஷாரூக்கானும்!
ஷாரூக்கானை ‘எஸ்ஆர்கே’ என்று சுருக்கமாகக் குறிப்பிடத் தொடங்கி சில பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சிவகார்த்திகேயன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘எஸ்கே புரொடக்ஷன்ஸ்’ என்று பெயர் சூட்டி நெடுநாட்கள் ஆகிறது.
இவ்வளவு ஏன், சமீப ஆண்டுகளாக சிவகார்த்திகேயனை திரை பிரபலங்கள் ‘எஸ்கே’ என்றுதான் குறிப்பிடுகின்றனர். இவை அனைத்துமே ஷாரூக்கானுக்கும் சிவகார்த்திகேயனுக்குமான ஒப்பீட்டை கூர்படுத்துகின்றன.
யாராவது ஒரு பிரபலத்துடன் நம்மை ஒப்பிட்டுக்கொள்வது பெரும்பாலும் மிகச்சிறப்பான பலன்களைத் தரும். முன்னவர் செய்த சாதனைகளை நாமும் அடைய வேண்டுமென்ற வேட்கையை உருவாக்கும்.
சிவகார்த்திகேயன் ‘எஸ்கே’ என்று குறிப்பிடப்படுவதும் அதைத்தான் காட்டுகிறது
தொலைக்காட்சி அறிமுகம்!
‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி மூலமாக தொலைக்காட்சி ரசிகர்களுக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் வழியே இளம் தலைமுறையினருக்குப் பிடித்தமானவராக ஆனவர்.
தொடர்ந்து வந்த ‘ஜோடி நம்பர் 1’, ‘சூப்பர் சிங்கர்’, ‘விஜய் அவார்ட்ஸ்’ உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிவகார்த்திகேயனை திரை பிரபலங்களுக்கு நெருக்கமானவராக மாற்றின.
இந்நிகழ்ச்சிகளின் வெற்றி, இயக்குனர் பாண்டிராஜ் ‘மெரினா’ படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயனைத் தேர்ந்தெடுக்கவும் காரணம் ஆனது.
கிட்டத்தட்ட இதேபோன்ற அனுபவம் ஷாரூக்கானுக்கும் உண்டு. 1988 முதல் 1990 வரை தில் தாரியா, பவுஜி, சர்க்கஸ் என்று அரை டஜன் சீரியல்களில் நடித்தார்.
அதுவே, பாலிவுட்டில் அவர் அறிமுகமாக ‘விசிட்டிங் கார்டு’ ஆனது. இரண்டு ஹீரோக்களில் ஒருவர், வில்லன், ரொமாண்டிக் ஹீரோ என்று படிப்படியாக முன்னேறிய ஷாரூக், ஒருகட்டத்தில் தனக்கான ஸ்டைலை கமர்ஷியல் சினிமாவில் வடிவமைத்துக் கொண்டார்.
நகைச்சுவையும் காதலும்!
சிறுபிள்ளைத்தனமான நகைச்சுவையும் அசட்டுத்தனமும் ஷாரூக்கானின் ஆரம்பகால திரை அடையாளங்களாக இருந்தன. ‘தில்வாலே துல்ஹேனியா லே ஜாயங்கே’வின் இமாலய வெற்றி, அவரது படங்களில் ரசிக்கத்தக்க வகையில் காதல் படமாக்கப்படும் என்ற உறுதியை உருவாக்கியது.
சிவகார்த்திகேயன் திரையுலகில் அறிமுகமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரை அடையாளம் காட்டியே நகைச்சுவையே காரணமாக இருந்தது. அதுவே, அவரது பாணியாகவும் மாறிப்போனது.
‘மெரினா’வில் ஹீரோவாக நடித்த கையோடு, ஐஸ்வர்யா தனுஷின் ‘3’ படத்தில் தனுஷுக்கு நண்பராக நடித்தார். ‘மனம்கொத்திப்பறவை’ படத்தில் ஐந்தாறு நகைச்சுவை நடிகர்களுடன் சேர்ந்தார். தொடர்ந்து ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படங்களின் மூலமாக தனித்துவத்தைப் பெற்றார்.
ஷாரூக்கான் பெண் வேடமிட்டு நடிக்கும் காட்சிகளுக்கு பெண்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். ‘ரெமோ’வில் இதனை படம் முழுக்க முயற்சித்திருப்பார் சிவகார்த்திகேயன்.
ஷாரூக்கானை போல வில்லன் வேடங்களை ஏற்கும் தேவை சிவகார்த்திகேயனுக்கு ஏற்படவில்லை. ஏனென்றால், அப்படிப்பட்ட வேடங்களே ஆரம்பகாலத்தில் சக நாயகர்களால் ஒதுக்கப்பட்டு ஷாரூக்கை தேடி வந்தன.
கபீர்கானும் நெல்சன் திலீப்குமாரும்..!
‘ஸ்வதேஷ்’ படம் மூலமாக வழக்கமான சினிமாவை விட்டு விலகிய திரைக்கதைகளுக்குள் நுழைந்தார் ஷாரூக். அந்த வகையில் ஒன்றான ‘சக் தே இந்தியா’, ஹாக்கி விளையாட்டை மையமாகக் கொண்டு வெளியாகி பெருவெற்றியைப் பெற்றது.
இப்படத்தில் பெண்கள் ஹாக்கி அணியின் பயிற்சியாளராகவும், முன்னாள் இந்திய ஹாக்கி வீரராகவும் வருவார் ஷாரூக். அந்த கபீர்கான் பாத்திரத்தைப் பிரதியெடுத்தது போலவே, ‘கனா’ படத்தில் நெல்சன் திலீப்குமார் வேடத்தில் நடித்திருப்பார் சிவகார்த்திகேயன்.
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அவர் பயிற்சியளிக்கும் காட்சிகள் ஷாரூக்கை நினைவூட்டும்.
சீமராஜாவும் பாதுஷாவும்..!
2000களில் அமீர்கான், சல்மான்கான் உள்ளிட்ட சக நாயகர்களை மீறி ‘கிங் ஆஃப் பாலிவுட்’ என்றும் ‘பாதுஷா’ என்றும் வர்ணிக்கப்பட்டார் ஷாரூக். பேரரசன் எனும் பொருள்படும் ‘பாதுஷா’ என்ற பெயரில் ஒரு படத்திலும் நடித்தார்.
‘சீமராஜா’ என்ற டைட்டிலும் கூட, கிட்டத்தட்ட இதற்கு நெருக்கமானதுதான். நகைச்சுவை இப்படத்தில் மையமாக இருந்தாலும், ராஜா எனும் பெயருக்குப் பின்கதை சொல்லப்பட்டாலும் ‘பாதுஷா’ உடன் ஒப்பிடத் தோன்றுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
தென்னிந்தியாவின் ஷாரூக்கான்!
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ வெளியீட்டின்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயனை ‘தென்னிந்தியாவின் ஷாரூக்கான்’ என்று குறிப்பிட்டார் நடிகர் சத்யராஜ். சக நடிகரை ஒருவர் புகழ்வதற்குக் காரணம் தேவையில்லை.
ஆனால், இப்படம் வெளியாவதற்கு முன்னர் ‘எதிர்நீச்சல்’ படத்தில் மட்டுமே தனி ஹீரோவாக நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.
ஏதோ ஒருவிதத்தில் சிவகார்த்திகேயன் தனது முன்மாதிரியாக ஷாரூக்கானை கொண்டிருந்ததையும், அதனை சத்யராஜ் அறிந்ததையுமே இது காட்டுகிறது. ஸ்வதேஷ் போலவே மக்களின் பிரச்சனைகளைப் பேசிய ‘வேலைக்காரன்’ படத்தில் நடித்ததையும் அவ்வாறே எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
முன்னணி ஹீரோவாகத் தனது படங்களில் சிலவற்றின் தயாரிப்பு பொறுப்பை ஏற்றாலும், புதுமுகங்கள் நடித்த படங்களையும் தயாரித்திருக்கிறார் ஷாரூக். அதற்கு ஈடாக ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’, ‘கனா’, ‘வாழ்’ (தவிர்த்து) ஆகியன இதுவரை சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகியிருக்கின்றன.
டான் ‘கனெக்ஷன்’!
சமூகவலைதளங்களிலும் இணையச் செய்திகளிலும் ‘கனெக்ஷன்’ என்ற வார்த்தை இப்போது மிக பிரபலம். ஒரு படத்தை, நட்சத்திரத்தை, கதையம்சத்தை, காட்சிகளை இன்னொன்றுடன் ஒப்பிடுவது சாதாரண விஷயம்.
‘டான்’ என்ற படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக வெளியான அறிவிப்பு, எனக்கு ஷாரூக்கானின் படத்தையே நினைவூட்டியது. அமிதாப் நடித்த ‘டான்’ படத்தின் ரீமேக் ஆக அறியப்பட்டாலும், பர்ஹான் அக்தர் இயக்கிய இப்படம் ஒரு நட்சத்திரத்தை ஸ்டைலாக காட்டுவதில் புது அத்தியாயம் எழுதியது.
இதன் மேக்கிங் தமிழில் ‘பில்லா’ உள்ளிட்ட படங்களில் பிரதிபலித்தது. இன்று, இந்தியா முழுக்கவே இந்தப் பாணியிலேயே ஹீரோக்கள் திரையில் காட்டப்படுகின்றனர்.
ஷாரூக்கின் ‘டான்’ படத்துக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்தத் தலைப்பு எஸ்ஆர்கே எனும் ஷாரூக்கான் மீது எஸ்கே எனும் சிவகார்த்திகேயனுக்கு உள்ள அபிமானத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது.
2005க்கு பிறகு வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார் ஷாரூக். அந்த வகையில் ‘டாக்டர்’, ‘அயலான்’ படங்கள் வேறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு தரலாம்.
ஒருவர் இன்னொருவரை முன்மாதிரியாகக் கொண்டு செயலாற்றுவதும், அதன் மூலமாகத் தனது இடத்தை மேலும் மேலும் உயர்த்திக் கொள்வதும் நல்ல விஷயமே. அந்த வகையில் எஸ்ஆர்கே மற்றும் எஸ்கே கனெக்ஷன் எதிர்காலத்திலும் தொடர வேண்டும்.
ஏனென்றால், ஒருகாலத்தில் சிவாஜி தொடங்கி அமிதாப் பச்சன், சத்ருகன் சின்ஹா போன்றவர்களின் பாணியை ரஜினி பின்பற்றுவதாகச் சொல்லப்பட்டதுண்டு. பின்னர் அதே நட்சத்திரங்கள் அவரை ‘சூப்பர்ஸ்டார்’ என்று புகழ்ந்தது வரலாறு.
அதனால், தந்தையின் தோளேறும் மகவைப் போலவே இப்பின்பற்றுதலையும் கைக்கொள்ள வேண்டியிருக்கிறது!
– உதய் பாடகலிங்கம்
15.02.2021 12 : 56 P.M